என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்: பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தேசிய அமைப்பு செயலாளர் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல்: பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தேசிய அமைப்பு செயலாளர் ஆலோசனை

    • கோவையில் இன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
    • கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தம் வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை என பல்வேறு பணிகளில் அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவையில் இன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொள்கிறார்கள். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் பங்கேற்கிறார். தேசிய தலைவர் நட்டாவுக்கு அடுத்து பெரிய பொறுப்பில் உள்ள இவர் இன்று கோவை வருகை தந்து தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மேலும் 39 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில் வேறு எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை, வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது, தேர்தல் அறிக்கையை எவ்வாறு அமைப்பது? என்பது போன்ற விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க.வின் பலம் என்ன, குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி பா.ஜ.க.வின் வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிகள் பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் பி.எல். சந்தோஷ் ஆலோசிக்கிறார். வெற்றி வாய்ப்பு குறித்து தமிழக பா.ஜ.க.வினருக்கு அவர் பல ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

    தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் எந்தெந்த தேதிகளில் பிரசாரத்தை வைத்துக் கொள்வது என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வெற்றியை பெற்று விடுவது என்ற முனைப்பில் ஆலோசிக்கப்பட உள்ளதால் கோவையில் இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×