search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நடுரோட்டில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் போராட்டம்
    X

    நடுரோட்டில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் போராட்டம்

    • சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னம் பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைக்க கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக திருப்பூர் பல்லடம் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலை தென்னம் பாளையத்தில் சாலையோர வியாபாரிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் போட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×