search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
    X

    சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

    • அ.தி.மு.க.வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.
    • தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது.

    சென்னை:

    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் மரியாதை செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்

    செல்வம், சசிகலா ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி விட்டு காரில் திரும்பியபோது எதிரே சசிகலா காரில் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ஓ.பி.எஸ். காரை நிறுத்திவிட்டு இறங்கினார். பின்னர் சசிகலாவின் காரை நோக்கி அவர் நடந்து சென்றார். இதனை பார்த்ததும் சசிகலாவும் தனது காரில் இருந்து இறங்கினார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இதன் பின்னர் அண்ணா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களிடம்

    கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான்ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். அதற்கான காலம் வரும் பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.

    மத்திய மந்திரியாக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் புரட்சித்தலைவரை பற்றி தவறாக விமர்சித்துள்ளார். அவருக்கு பல வரலாறுகள் தெரியாது. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது கருணாநிதியும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்கள். அப்போது நிறைய கடன் வாங்கி கஷ்டத்தில் இருப்பதாகவும் தங்களுக்காக எங்களது நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படம் நடித்து தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    அதனை ஏற்று எம்.ஜி.ஆர். நடித்து கொடுத்த படம்தான் எங்கள் தங்கம். அந்த படத்தில் புரட்சி தலைவிதான் கதாநாயகியாக நடித்து இருந்தார். படத்தின் வெற்றி விழாவில் பேசிய முரசொலிமாறன், எம்.ஜி.ஆரை பார்த்து நீங்கள் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்ததால் தான் கடனை எல்லாம் அடைத்து கோபாலபுரம் வீட்டையும் அடமானத்தில் இருந்து மீட்டு விட்டோம் என்று பேசினார். இந்த வரலாறு கூட தெரியாமலேயே அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சசிகலாவிடம் ஓ.பி.எஸ்.சுடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்கள், இருவரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த சசிகலா, ஓ.பி.எஸ். கட்சிக்காரர் மட்டுமல்ல எனது குடும்பத்திலும் ஒருவர். அ.தி.மு.க.வினர் ஒற்றுமையோடு இருந்து தீய சக்தி என்று அம்மா குறிப்பிட்ட தி.மு.க.வை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கும் வீழ்த்துவதற்கும் என்னென்ன வழிமுறைகளை யெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வேன் என்றார்.

    Next Story
    ×