search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய் அரசியலிலும் புலிதான் என்பதை நிரூபிப்பாரா?
    X

    விஜய் அரசியலிலும் புலிதான் என்பதை நிரூபிப்பாரா?

    • அரசியலில் வெற்றி பெற ரசிகர்களின் பலம் மட்டும் போதாது.
    • ‘‘நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..; அப்புறம்... என் பேச்ச நானே கேட்கமாட்டேன்னு’’ வேற சொல்லி இருக்காரு.

    புலி வருது... புலி வருது... என்று கடைசியில் வந்தேவிட்டது...!

    ஆம்... தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் 'தளபதி' விஜய், ''தமிழக வெற்றி கழகம்'' என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துவிட்டார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கு அரசியல் ஆசை இருந்ததை மறுக்க முடியாது. தனது படங்களில் 'பஞ்ச் டயலாக்' மூலம் அவ்வப்போது அவர் அதை வெளிப்படுத்த தயங்கியது இல்லை. அவரது ரசிகர்களும் தேர்தல்களின்போது தங்கள் அரசியல் ஈடுபாட்டை காட்டி வந்துள்ளனர்.

    இதுவரை 'டிரெய்லராகவே' இருந்து வந்த அவர்களுடைய அரசியல் ஆசை இப்போது, புதிய கட்சியின் வடிவில் முழுமையாக வெளியாகி இருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் வரை நடிகராக இருந்த விஜய் நேற்று முதல் அரசியல் தலைவர் ஆகி இருக்கிறார்; அவரது ரசிகர்கள் தொண்டர்கள் ஆகி இருக்கிறார்கள்.

    இந்தியாவில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கி ஜெயித்தவர்கள் 2 பேர்தான், ஒருவர் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் ஆந்திராவில் என்.டி.ராமராவ். ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர்தான் என்ற போதிலும் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி அந்த கட்சியை வளர்த்தெடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்தவர்.

    இவர்கள் தவிர திரைத்துறையைச் சேர்ந்த எத்தனையோ பேர் கட்சி தொடங்கி அரசியலில் மூழ்கி காணாமல் போய் இருக்கிறார்கள். சிலர் பாதி கிணறு, முக்கால் கிணறு தாண்டியதோடு சரி. இன்னும் சிலர் ''சீச்சீ இந்த பழம் புளிக்கும்'' என்று ஓடி இருக்கிறார்கள். மேலும் சிலர் சூடுகண்ட பூனையாக கடையை சாத்திவிட்டு, ''தெரிந்த தொழிலையே செய்வோம்'' என்று நடையை கட்டி இருக்கிறார்கள்.

    மேற்கண்ட அத்தனை பேருக்கு கிடைத்த அனுபவங்களையும் நன்கு அறிந்தே, நிதானமாகவும், தெளிவாகவும் விஜய் அடியெடுத்து வைத்து இருக்கிறார்.

    விஜய் யாரை எதிர்க்கப்போகிறார்? அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்? என்பது மக்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை எல்லோருக்கும் வேண்டப்பட்டவராக-யாரையும் எதிர்க்காதவராக இருந்து வந்திருக்கலாம்.

    அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கமுடியாது? இருக்க நினைத்தால் கட்சியை வளர்க்க முடியாது. இது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

    கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க.வின் கொள்கைகள், அண்ணாயிசம் பற்றியெல்லாம் எம்.ஜி.ஆர். பேசிய போதிலும், தி.மு.க.வை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கையாக இருந்தது; இப்போதும் இருக்கிறது. இதனால்தான் தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்கள் எம்.ஜி.ஆர். கட்சியின் பக்கம் நின்றனர்.

    கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அங்கே-இங்கே என்று தாவிக் கொண்டிருக்கும் கட்சிகளெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிடுகின்றன.

    இதையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் விஜய், தனது கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

    சட்டசபை தேர்தலை குறிவைத்தே ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கும் விஜய் ''வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது'' என்று அறிவித்து இருக்கிறார். தேர்தல் பணியாற்ற அவரது தொண்டர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும்போது, விஜய்யின் இந்த முடிவு அவர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை தரக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. களத்தில் குதிப்பது என்று முடிவு செய்துவிட்டபின் தள்ளிப்போடுவது தொண்டர்களின் வேகத்தையும், உற்சாகத்தையும் குறைப்பதாக அமைந்துவிடும். ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது.

    1972 அக்டோபர் 17-ந்தேதி அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். அடுத்த ஆறு மாதங்களில் அதாவது 1973 மே 20-ந்தேதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்கி மகத்தான வெற்றி கண்டது இங்கு நினைவு கூரத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று விஜய் அறிவித்து இருப்பதால், அந்த தேர்தலில் அவரது கட்சியின் நிலை என்னவாக இருக்கும்? அவரது தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? என்பதும் தற்போதைய நிலையில் தெரியவில்லை. போகப் போகத்தான் தெரியும்.

    இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள் பணியாற்றிய அவரது ரசிகர்கள், இப்போது கட்சி தொண்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறார்கள். அவர்களுடைய நற்செயல்களால் வரும் பெருமைகள் அனைத்தும் விஜய்யை வந்து சேரும். அதேசமயம், ஏதாவது குறைபாடுகள் என்றாலும், அதனால் வீசப்படும் கணைகளையும் அவர்தான் தாங்கிக்கொள்ள நேரிடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருக்கும் 'தளபதி' விஜய் தனது 'சிப்பாய்களை' நல்வழியில் நடத்திச்செல்வார் என்று உறுதியாக நம்பலாம்.

    அரசியலில் வெற்றி பெற ரசிகர்களின் பலம் மட்டும் போதாது. ரசிகர்கள் வட்டத்தை தாண்டி சமானிய மக்களின் ஆதரவையும் பெற்றால்தான் கோட்டைக்கு செல்ல முடியும். தனது செயல்கள்-அணுகுமுறைகள் மூலம் மக்கள் மனங்களை வெல்லும் திட்டங்களை அவர் வைத்திருக்கக்கூடும்.

    சினிமாவில் விஜய் 'புலி'தான் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது படங்கள் நல்ல வசூலை கொடுக்கின்றன.

    வெள்ளித்திரையில் உச்சத்தில் இருக்கும் அவர், அரசியலில் குதித்து இருப்பதால், சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்து இருப்பது எதிர்பாராத ஒன்றுதான்.

    ஏனெனில், முதலமைச்சர் ஆகும் வரை எம்.ஜி.ஆர்., சினிமா-அரசியல் என்ற இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்தார். முதலமைச்சர் பதவி, சினிமாவில் நடிக்க அனுமதிக்காததால்தான் வேறு வழியில்லாமல் அவர், திரையுலகத்தை விட்டு விலகினார். அப்படி இருக்கும் போது விஜய், சினிமாவுக்கு 'பேக்கப்' சொல்ல தீர்மானித்து இருப்பது திரைத்துறையினருக்கு ஒருபுறம் ஆச்சரியம் அளிப்பதாகவும், மற்றொருபுறம் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

    என்றாலும் அவர் நன்றாக யோசித்தே முடிவு எடுத்து இருப்பார் என்று நம்புவோம். ஏன்னா?... ''நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா..; அப்புறம்... என் பேச்ச நானே கேட்கமாட்டேன்னு'' வேற சொல்லி இருக்காரு. எனவே அவரது இந்த முடிவு தீர்க்கமானதாகத்தான் இருக்கும்.

    ஓகே... சினிமா புலி விஜய், அரசியலிலும் தான் புலிதான் என்பதை நிரூபிப்பாரா? அல்லது....; வேண்டாம்..., வேண்டாம்.... பொறுத்திருந்து பார்ப்போம்.

    Next Story
    ×