என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது.
- உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை வழியாக தான் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலை முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.
சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது. மேலும் அப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மேலும் அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்து வந்தது. இதனை அடுத்து நேற்று நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள 300-க்கும் மேற்பட்ட அக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஈரோடு ஆர்.கே.வி ரோடு, கிருஷ்ணா தியேட்டரில் இருந்து மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, கச்சேரி ரோடு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
அப்போது ஆர்.கே.வி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பில் பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.
- வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற அவர் மீது ரெயில் மோதியது.
- சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பலியான வாலிபர் உடலுடன் ரெயில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம்:
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று இரவு வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 8 மணிக்கு மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கு பயணிகள் ஏறி, இறங்கியதும் 8.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது.
இந்த ரெயில் அடுத்ததாக விருதுநகரில் மட்டுமே நின்று செல்லும். இதற்கிடையே மதுரையை கடந்த ரெயில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் சென்ற போது வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற அவர் மீது ரெயில் மோதியது.
ஆனாலும் உடனடியாக வேகத்தை குறைக்க முடியாத சூழலில் அதே வேகத்தில் ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருமங்கலம் ரெயில் நிலையத்திலும் ரெயில் நிற்காமல் அதே வேகத்தில் சென்றது. அந்த சமயம் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேசன் மாஸ்டர் திடீர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் கப்பலூர் அருகே மோதிய வாலிபர் உடல் ரெயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்தது.
கால்கள் துண்டாகி சிதைந்துபோன நிலையில் தலை மற்றும் உடலுடன் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றதால் அதிர்ந்துபோன திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக அடுத்ததாக உள்ள கள்ளிக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அந்தியோதயா ரெயில் கள்ளிக்குடி வந்தபோது தயார் நிலையில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் போலீசார் ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்த வாலிபர் உடலை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் மோதிய இடமான கப்பலூர் பகுதியில் இருந்து கள்ளிக்குடி வரை சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பலியான வாலிபர் உடலுடன் ரெயில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்தியோதயா ரெயில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நாகர்கோவிலுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.
- திங்கட்கிழமைக்கு பதிலாக புதன்கிழமை விசாரிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் முறையீடு செய்தார்.
- செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜனவரி 22-ந்தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்றபோது செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட் சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும். அதனால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்காத நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததுடன், இன்று (வெள்ளிக்கிழமை) குற்றச்சாட்டு பதிவு செய்ய செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் பிரபாகரன் ஆஜராகி முறையிட்டார்.
மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கமான முறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பில் வாதாட விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் ஆஜராகி ஜாமீன் மனு புதன்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும்.
திங்கட்கிழமை தன்னால் ஆஜராக இயலாது என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
- முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
- கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.
வடவள்ளி:
மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.
இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.
தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.
கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
- கோடம்பாக்கம், வேப்பேரி பூந்தமல்லி சாலையில் அமர்ந்து கடந்த 2 நாட்களாக மறியலில் ஈடுபட்டனர்.
- மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்ததை அடுத்து போக்குவரத்து சீரானது.
சென்னை:
அரசு பணி இடங்களில் நிரப்புவதில் முன்னுரிமை, ஆசிரியர் தேர்வு வாரிய நியமன தேர்வை ரத்து செய்துவிட்டு நேரடியாக பணியில் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 12-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் முக்கிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கோடம்பாக்கம், வேப்பேரி பூந்தமல்லி சாலையில் அமர்ந்து கடந்த 2 நாட்களாக மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் இன்று 5-வது நாளாக கிண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலையில் அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.
இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இவர்களின் போராட்டத்தால் நெரிசலில் சிக்கி நின்றனர். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. போலீசார் அவர்களை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மாற்றுத்திறனாளிகளை குண்டு கட்டாக தூக்கி வேனிற்கு கொண்டு சென்றனர். அப்போது போலீசாருக்கும்-அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனாலும் போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்ததை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
- திமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கே தொகுதி கொடுக்க முடியாத சூழ்நிலையில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை.
- தி.மு.க. அதிக தொகுதியில் நிற்க விரும்புவதால் காங்கிரசின் தொகுதி குறைய வாய்ப்புள்ளது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளுடன் தமிழ்நாட்டில் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தி.மு.க.விடம் வழங்கி உள்ளது.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறக் கூடிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை அண்ணா அறிவாலயம் பக்கம் இன்னும் வரவில்லை. அவரது கட்சி நிர்வாகிகள் யாரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தொடர்பு கொள்ளாமல் உள்ளனர்.

கமல்ஹாசன் வெளிநாட்டில் இருப்பதாகவும் இன்னும் 2 நாட்களில் சென்னை திரும்புவார் என்றும் அதன் பிறகு பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கையாக பேசி வருகின்றனர்.
ஆனால் இதுபற்றி தி.மு.க. மூத்த நிர்வாகிகளிடம் கேட்டதற்கு தி.மு.க.வில் இருந்து கமல்ஹாசனுக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி நாங்கள் அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. ஏனென்றால் அவர் எங்கள் கூட்டணியில் இல்லை.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இப்போதும் அவர் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் இருந்து ஒரு சீட் கேட்டு பெறுவார் என தெரிகிறது. உள் ஒதுக்கீடாக காங்கிரஸ் கொடுக்கும் என தெரிகிறது.

அதனால்தான் அறிவாலயம் பக்கம் கமல்ஹாசன் வரவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலின் போது தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரி ஒரு தொகுதியும் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த முறை தி.மு.க. அதிக தொகுதியில் நிற்க விரும்புவதால் காங்கிரசின் தொகுதி குறைய வாய்ப்புள்ளது. அதை ஈடுகட்டும் வகையில் காங்கிரசுக்கு ஒதுக்கி கொடுக்கும் தொகுதிகளில் ஒரு தொகுதியை கமல்ஹாசன் கட்சிக்கு கொடுக்கும்படி கூறி வருகிறோம். இது அனேகமாக உடன்பாடுக்கு வந்து விடும்.
தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கே தொகுதி கொடுக்க முடியாத சூழ்நிலையில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.
- ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
சேலம்:
விபத்துகளில் சிக்கும் டிரைவர்கள் மீது 10 ஆண்டுகள் சிறை, 7 லட்சம் அபராதம் என்ற மத்திய அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை குறைக்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும், ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை முதல் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்காமல் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சேலத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் இன்று ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர். இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில் சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டனர். மேலும் ஆட்டோக்களில் அலுவலகங்களுக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர்.
- கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
- டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரெயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது.
இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க அந்த ஒரே ஒரு கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் கவுண்டரில் இருந்துள்ளார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.
மேலும் இந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும். இல்லை என்றால் மெதுவாக தான் தருவேன் என்று கூறியுள்ளார். இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.
30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினையும் சமதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பிரச்சினையினால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இது குறித்து கோவில்பட்டி ராகவேந்திரா சேவை அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கூறியதாவது:-
கோவில்பட்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர், முன்பதிவு கவுண்டர் என இருந்தாலும் ஒரு ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. அந்த கவுண்டரிலும் தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்தி மட்டும் அவர்களுக்கு தெரிவதால், தமிழ், ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை என்று கூறி டிக்கெட் தர மறுக்கின்றனர். அப்படியே தந்தாலும் நீண்ட நேரம் காக்க வைத்து டிக்கெட் வழங்கி வருகின்றனர். குறிப்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் திண்டுக்கலுக்கு டிக்கெட் வழங்கிவிடுகின்றனர். இதனால் சரியான நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருப்பதால் ரெயில் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர்.
- ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 65) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் இவர் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது 2 கார்களில் 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்து கூச்சலிட்டு உள்ளனர்.
வெளியே வராத ஞானசேகர், வீட்டின் உள்ளே இருந்து யார் என கேட்டுள்ளார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஜே.பி.சண்முகம் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார் என தெரிவித்தனர்.
அப்படி யாரையும் எனக்கு தெரியாது என கூறி கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கதவை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக ஞானசேகர் முசிறி போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். போலீஸ் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது அதில் பதிவான காட்சிகளை பரிசோதித்த போது தகராறில் ஈடுபட்டது முசிறி அருகே, வெள்ளூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் மெக்கானிக் செந்தில் (40) , ஜவேலி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் ஜே.பி.சண்முகம் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் செய்து வரும் ஞானசேகர் ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருப்பதை அறிந்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சண்முகம் மாவட்ட செயலாளர் ஆகவும், செந்தில் ஒன்றிய பொறுப்பாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. இதனையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார். நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
சாமி வீதி உலாவை காண கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இன்று அதிகாலை 5-30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அப்போது மாட வீதிகளில் இருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து கோவிந்தா கோவிந்தா என விண்ணைமுட்டும் அளவுக்கு பக்தி பரவ சத்துடன் கோஷமிட்டனர். வாகன ஊர்வலத்தின் முன்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷம் வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடந்தது.
மாலை 4 முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும் 6 முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலை யான் வீதிஉலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் உலா வருகிறார்.
ரதசப்தமி விழாவை காண வந்த பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், மோர் உள்ளிட்டவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன.
சுகாதார துறை சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
மேலும் நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு மலிகா கார்க் தலைமையில் 650 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் காட்சியளிப்பது பரவசத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
- பணத்தை தவறவிட்டவர் குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திர போஸ்கோ என்பது தெரியவந்தது.
- சந்திர போஸ்கோ கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
நாகர்கோவில்:
பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது. அப்போது முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கிழிந்த நிலையில் துணிப்பை ஒன்று கிடந்தது.
அதே ரெயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த போலீஸ்காரர் ஷாஜகான் அந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த பணப்பையை அவர் நாகர்கோவிலில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தார்.
ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில் பணத்தை தவறவிட்டவர் குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திர போஸ்கோ என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
நேற்று கொல்லத்திலிருந்து சந்திர போஸ்கோ வீட்டிற்கு வருவதற்காக பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளார். ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அவர் ரெயில் பெட்டியை விட்டு இறங்கி சென்றுவிட்டார். வீட்டுக்கு சென்ற பிறகு பார்த்த போது தான் தன் கையில் இருந்த ரூ.4 லட்சம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
உடனே அவர் பணத்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நிலையில் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் வந்து விசாரித்தபோது அவரது பணம் போலீசில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணைக்கு பிறகு அந்த பணத்தை ஒப்படைத்தனர். அனாதையாக கிடந்த பணத்தை எடுத்து ஒப்படைத்த போலீஸ்காரர் ஷாஜகானுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 77 ரூபாயாகவும் பார் வெள்ளி ரூ.77 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,760-க்கும் சவரன் ரூ.46,080-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 77 ரூபாயாகவும் பார் வெள்ளி ரூ.77 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.






