search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் உடலை 25 கி.மீ. தூரத்திற்கு இழுத்து சென்ற ரெயில்
    X

    தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் உடலை 25 கி.மீ. தூரத்திற்கு இழுத்து சென்ற ரெயில்

    • வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற அவர் மீது ரெயில் மோதியது.
    • சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பலியான வாலிபர் உடலுடன் ரெயில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமங்கலம்:

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று இரவு வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 8 மணிக்கு மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கு பயணிகள் ஏறி, இறங்கியதும் 8.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயில் அடுத்ததாக விருதுநகரில் மட்டுமே நின்று செல்லும். இதற்கிடையே மதுரையை கடந்த ரெயில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் சென்ற போது வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற அவர் மீது ரெயில் மோதியது.

    ஆனாலும் உடனடியாக வேகத்தை குறைக்க முடியாத சூழலில் அதே வேகத்தில் ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருமங்கலம் ரெயில் நிலையத்திலும் ரெயில் நிற்காமல் அதே வேகத்தில் சென்றது. அந்த சமயம் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேசன் மாஸ்டர் திடீர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் கப்பலூர் அருகே மோதிய வாலிபர் உடல் ரெயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்தது.

    கால்கள் துண்டாகி சிதைந்துபோன நிலையில் தலை மற்றும் உடலுடன் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றதால் அதிர்ந்துபோன திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக அடுத்ததாக உள்ள கள்ளிக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் அந்தியோதயா ரெயில் கள்ளிக்குடி வந்தபோது தயார் நிலையில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் போலீசார் ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்த வாலிபர் உடலை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் மோதிய இடமான கப்பலூர் பகுதியில் இருந்து கள்ளிக்குடி வரை சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பலியான வாலிபர் உடலுடன் ரெயில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்தியோதயா ரெயில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நாகர்கோவிலுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×