என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது.
- தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வுக் கூட நுழைவு சீட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20-ந்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று 'ஆன்லைன்-போர்டல்" என்ற வாசகத்தினை கிளிக் செய்து user ஐ.டி. பாஸ்வேர்டை கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதே போல பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை 19-ந்தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
- கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன.
திண்டுக்கல்:
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை கண்டிப்பாக தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். இது தவிர ஆன்லைன் மூலமும் பணம் கட்டினால் வீடுகளுக்கே பஞ்சாமிர்தம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதலாக பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.
இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தம் தேக்கமடைந்தது. குறிப்பிட்ட நாளுக்கு மேல் பஞ்சாமிர்தத்தை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் தைப்பூசத் திருவிழாவுக்காக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தத்தை அழிக்க உணவு பாதுகாப்புத்துறையினர் உத்தரவிட்டனர்.
அதன்படி ரூ.40க்கு விற்பனைக்காக வைத்திருந்த பஞ்சாமிர்த டின்கள் 55 ஆயிரம் டப்பாக்கள் கொட்டி அழிக்க முடிவு செய்யப்பட்டது. கள்ளிமந்தயத்தில் பழனி கோவிலுக்கு உட்பட்ட கோசாலை செயல்பட்டு வருகிறது.
அந்த கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன. கடந்த வாரம் கோவில் பிரசாதம் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரசாத மாதிரிகள் மற்றும் பஞ்சாமிர்தத்தை ஆய்வுக்கு எடுத்துச் சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
- குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
- பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி, ராமானுஜ கூடத் தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி உள்ளது. நேற்று இரவு அதன் அருகில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் யுவராணி என்பவர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து யுவராணி உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பை தொட்டியில் எறும்புகள் மொய்த்த நிலையில் பிறந்து சில நாட்களே ஆகி இருந்த பெண் குழந்தையை மீட்டார். பின்னர் குழந்தையை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் யார்? குழந்தையை வீசி சென்றது ஏன்? கடத்திவரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குழந்தையை குப்பை தொட்டிக்குள் வீசி சென்று இருப்பதும் குழந்தை அழுத படியே சோர்ந்து உயிருக்கு போராடியபடி கிடந்து இருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வடமாநிலங்களில் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டணி கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கி உள்ளன.
- காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளை மாற்றிவிட்டு புதிய தொகுதிகளை கொடுக்கவே தி.மு.க. விரும்புகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இன்னும் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை 'சீட்' என்பதும் முடிவாகவில்லை.
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளுமே கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றன.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் தேசிய அளவிலான பிரதான கட்சியாக இருப்பதால் கூடுதலான எம்.பி.க்களை கைப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறது.
வடமாநிலங்களில் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டணி கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கி உள்ளன.
இந்த நிலையில் காங்கிரசுக்கு நம்பிக்கை கொடுத்து வரும் தி.மு.க.வும் தொகுதிகளில் கை வைக்குமோ என்ற அச்சம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்று டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் பேசினார்கள்.
அப்போது 15 தொகுதிகள் பட்டியலை கொடுத்து 12 தொகுதிகள் குறைய கூடாது என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் 5 தொகுதிகள்தான் தர இயலும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய முடியாமல் பேச்சுவார்த்தை முடிந்தது.
ஆனால் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது.
தி.மு.க. தரப்பில் தங்கள் நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே டி.ஆர்.பாலு முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போதே காங்கிரசுக்கு குறைவான தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என்பதையும் அதற்கான காரணத்தையும் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
அந்த தகவலை சிதம்பரமும் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டார். எனவே ஒன்றிரண்டு தொகுதிகள் குறைந்தாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் தரப்பில் இறங்கி வந்ததாக கூறுகிறார்கள்.
அதன்பிறகு ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளை மாற்றிவிட்டு புதிய தொகுதிகளை கொடுக்கவே தி.மு.க. விரும்புகிறது.
எதுவானாலும் பேசி முடிவு செய்யலாம் என்ற அளவுக்கு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளது. வருகிற 18-ந்தேதி மீண்டும் பேசலாம் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை. இதனால் காங்கிரஸ் கலக்கத்தில் உள்ளது.
காங்கிரசுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளும் கூடுதல் தொகுதி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.
கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அதிலும் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.
ஆனால் இந்த தேர்தலில் 4 தொகுதிகள் வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுள்ளார். உள்ளாட்சிகள் உள்பட அதிகாரமிக்க பதவிகள் எதுவும் இதுவரை தரவில்லை.
எனவே இந்த முறை எம்.பி. தொகுதிகள் அதிகம் வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்று சிறுத்தைகள் தரப்பில் உறுதியுடன் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த தேர்தலில் இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இந்த முறை கம்யூனிஸ்டு கட்சிகளும் முன்பைவிட கூடுதல் தொகுதி வேண்டும் என்பதில் கறாராக உள்ளன.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் 4 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் அழைப்பு ஏதும் வரவில்லை என்றும் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு தொகுதியாவது கூடுதலாக அதாவது 3 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மாநில செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவுவதால் தி.மு.க. விட்டு பிடிக்கிறது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காததால் கடைசி நேரத்தில் பார்த்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு தொகுதிகள் குறைவு, மாற்று தொகுதிகள் பற்றி ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவர்
கே.எஸ்.அழகிரியோடு பேசி உள்ளது. கடந்த தேர்தலை விட தொகுதிகள் எண்ணிக்கை குறைய கூடாது என்ற தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். புதுமுகங்கள் பலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாகவும் அதுபற்றியும் டெல்லி மேலிடத்திடம் தகவல் தெரிவிக்க உள்ளனர்.
கூட்டணிகள் உறுதியாகாததால் கட்சிகளிடையே குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
- டி.என்.ஏ பரிசோதனை உட்பட பல வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
- வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக நேரடி விசாரணை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 147 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் டி.என்.ஏ பரிசோதனை உட்பட பல வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சி.பி.சி.ஐ.டி-யும் பல மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் மந்தமான விசாரணை நடத்திவருவதாக, அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இறுதியாக வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.
இதனிடையே இதுநாள் வரை இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால் பாண்டி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
புதிய விசாரணை அதிகாரி கல்பனா இன்று தனது விசாரணையை தொடங்கினார். சம்பவம் நடைபெற்ற குடிநீர் தொட்டி மற்றும் வேங்கை வயல் கிராமத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- மகன்கள் மற்றும் மகள் திருமணத்திற்கு பிறகு மூதாட்டி ஜானகி பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார்.
- சொத்துக்களை மீட்டு தரும்படி வருவாய் துறை அதிகாரிகளை நாடிய மூதாட்டி ஜானகி அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் 90 வயது மூதாட்டி ஜானகி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு முன்பே கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன்கள் மற்றும் மகளை வளர்க்க மூதாட்டி ஜானகி பெரும் பாடுபட்டுள்ளார்.
மகன்கள் மற்றும் மகள் திருமணத்திற்கு பிறகு மூதாட்டி ஜானகி பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார். மேலும் சொத்துக்களை மூதாட்டி ஜானகியுடம் இருந்து பிள்ளைகள் எழுதி வாங்கியுள்ளனர். மருமகள்களாலும் மூதாட்டி ஜானகி தாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து சொத்துக்களை மீட்டு தரும்படி வருவாய் துறை அதிகாரிகளை நாடிய மூதாட்டி ஜானகி அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வருவாய்துறையினர் காலம்தாழ்த்தாமல் பிள்ளைகளிடம் இருந்து சொத்துக்களை மீட்டு தரும்படி மூதாட்டி ஜானகி கோரிக்கை விடுத்துள்ளார்.
- கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
- மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவானது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகி வந்தனர். விசாரணை முடிவில் கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி முத்துலட்சுமி பிறப்பித்தார். இதையடுத்து இன்று மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மீதமுள்ள மற்றொரு திருஞானம், கருப்பணன், சோலை, ராமலிங்கம் ஆகிய 4 பேரும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலையானதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
- மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
தொழிலாளர்களுக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் , வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், ரெயில்வே, பாதுகாப்பு , மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.
ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி அமைப்பினர் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்துகோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூர் குமரன் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- உழவர்களை கடன் சுமையில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.
- பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், காலப்போக்கில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய உழவர்களே இருக்க மாட்டார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40 சதவீதம் முதல் 94 சதவீதம் வரை விளைச்சல் குறைந்திருக்கிறது.
குறுவையைத் தொடர்ந்து சம்பா பருவத்திலும் விளைச்சல் வீழ்ச்சி அடைந்து விட்டதால் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன் வராதது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் கூட, கர்நாடகத்திடம் இருந்து போதிய தண்ணீர் பெற தமிழக அரசு தவறியதால் தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியவில்லை.
உழவர்களை கடன் சுமையில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுமையாகவும், 1.5 லட்சம் ஏக்கரில் ஓரளவுக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40,000 ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.5400 என்ற அளவில் தான் தமிழக அரசு இழப்பீடு வழங்கியது.
இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. சம்பா பயிர்களின் விளைச்சல் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு வாயைத் திறக்கவில்லை.
பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், காலப்போக்கில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய உழவர்களே இருக்க மாட்டார்கள்.
அதன்பின் அரிசிக்காக நான் பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்.
அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தீவிபத்து குறித்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
- நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது அய்யர்பாடி எஸ்டேட். இந்த எஸ்டேட்டில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள 7-ம் நம்பர் குடியிருப்பு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட்டுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது.
இந்த வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு திடீரென கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்து. இதை பார்த்த பொதுமக்கள் வேகமாக ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொது மக்களும் உதவி செய்தனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில், வனத்தில் இருந்த செடிகள், கொடிகள், மரங்கள் என அனைத்தும் எரிந்து சேதமாகி விட்டன.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வன பகுதி வழியாக செல்லும் மக்கள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தருமபுரி பகுதியில் 7 கடைகளில் கொள்ளையடித்த மர்ம நபர் தான் தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி பகுதியில் நேற்று 2-வது நாளாக மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 4 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.3.14 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் உள்ள எஸ்.வி.சாலையில் காந்தி நகர் 2-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது40). இவர் அன்னசாகரம் கூட்ரோடு பகுதியில் பாத்திர கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரையின் சிமெண்டு அட்டை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது பணப்பெட்டியில் இருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. மேலும், அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
இதேபோன்று கேசவனின் கடையின் பக்கத்தில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த நல்லசாமி (40) என்பவரது பத்திர கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவருக்கும் கேசவன் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த நல்லசாமி கடையயை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த உண்டியல் பணத்தை ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதேபோன்று அதே பகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி கணேசனின் மெடிக்கல் கடையில் ரூ.2 ஆயிரத்தையும், அதனருகில் உள்ள இளையராஜா என்பவரது ஆட்டோ மொபைல் கடையில் ரூ.5 ஆயிரத்தையும் மர்ம திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து கேசவன் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்ததில், இந்த 4 கடைகளிலும் மர்ம நபர் ஒருவர் மேற்கூரையை உடைத்து உள்ளேபுகுந்து ரூ.3.14 லட்சம் திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அந்த பகுதியில் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், அதில் பதிவான மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தருமபுரி பகுதியில் 7 கடைகளில் கொள்ளையடித்த மர்ம நபர் தான் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரியில் உள்ள சோகத்தூர் கூட்ரோடு, குண்டல்பட்டி ஆகிய பகுதிகளில் மொத்தம் 7 கடைகளில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கதவை உடைத்து பணம் கொள்ளயைடித்த சம்பவம் அரங்கேறி முழுவிசாரணை முடிவதற்குள் நேற்று இரவு மீண்டும் அதே மர்ம நபர் எஸ்.வி. சாலையில் உள்ள 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மர்ம நபரின் இந்த துணிகர செயலால் தருமபுரி நகர் பகுதியில் வியாபாரிகள், வணிகர்கள் பெரும் தங்களது கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போயுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த எஸ்.வி. சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், "மக்களுடன் முதல்வர்"
- 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் "மக்களுடன் முதல்வர்"
* ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காக போராடுவோம், வாதாடுவோம்.
* ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவோம்.
* "மக்களுடன் முதல்வர்" திட்டம் மூலம் அரசு சேவைகளை பெற அலைய தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
* மக்களை தேடி அரசு இயந்திரம் செல்கிறது.
* மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், "மக்களுடன் முதல்வர்"
* 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
* இதுவரை 60 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.
* தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார்.






