என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காலை, மாலை என இரு நேரங்களிலும் யானைகள் கூட்டம் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன.
    • யானைகள் நடமாட்டத்தை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம்.

    தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.

    இந்த யானைகள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.

    இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போக்கு காட்டி விட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதியில் நுழைந்தது. தற்போது இந்த யானை கூட்டம் ஒகேனக்கல் ஆலம்பாடிவனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

    காலை, மாலை என இரு நேரங்களிலும் யானைகள் கூட்டம் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன.

    இந்த நிலையில் நேற்று மாலை 20-க்கும் மேற்பட்ட யானைகள் 5 குட்டிகளுடன் சாலையை கடந்தது. பின்னர் சாலையை கடந்து காவிரி ஆற்றின் கரைக்குச் சென்றது. பின்னர் குட்டிகளுடன் யானைகள் தண்ணீர் குடித்து உற்சாகமாக குளியல் போட்டது. அதன் பின்னர் யானைகள் கூட்டமாக மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியது. இதனால் அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    யானைகள் நடமாட்டத்தை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.

    யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றனர்.

    • கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • விடுதலையான 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 3-ந்தேதி காலை 492 விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ராபர்ட் (வயது 40), பெஸ்கர் உள்பட 23 பேரை சிறைப்பிடித்தனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று 23 மீனவர்களும் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 20 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் மீதமுள்ள 3 பேரில் ராபர்ட், பெஸ்கர் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், மற்றொருவர் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அதேபோல் விடுதலையான 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்
    • சென்னை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் வரும் மாதங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று வெயில் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் 4 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெயில் அதிகரித்தது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு உள்ளது. இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 73 டிகிரி முதல் 90 டிகிரி வரை இருக்கும். நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி வெயில் பதிவானது. நாமக்கல்லில் 96 டிகிரி, மதுரையில் 95 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே, வாரணாசி, சிம்லா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் அனல் காற்றின் விளைவு தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

    அதில், 'சென்னை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் வரும் மாதங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வருடத்தில் 97 சதவீதம் நாட்களுக்கு மேல் அதிக சராசரி வெப்பநிலை இருக்கும். இந்தியாவில் பல நகரங்களில் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். சில நகரங்களில் அனல் காற்று ஜூலை வரை நீடிக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லையில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும், அனைத்திந்திய கிராமப்புற விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தர்மன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 ஊதியமாக வழங்க வேண்டும் என்று கூறியும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் பச்சை நிற துண்டு தோளில் போட்டபடி கொக்கிரக்குளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்கள் கழுத்தில் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அடங்கிய தொகுப்பை மாலையாக கட்டி அணிந்திருந்தனர். மேலும் கையில் மோடி என்ற வாசகம் அடங்கிய தடியங்காயை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் உடன் இணைந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து கையில் வைத்திருந்த தடியங்காயை சாலையில் போட்டு உடைத்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    • நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
    • பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராயபுரம்:

    இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிப்பு என்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. கட்டுரை, கதை , நாவல்கள் உள்ளிட்டவற்றை செல்போன்களில் ஒலியாகவே கேட்கும் வசதி வந்து விட்டதால் வாசிப்பு பழக்கம் முடங்கிவிட்டது.

    இந்த நிலையில் பொதுமக்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் மேம்படுத்தும் விதமாகவும் பூங்காக்களில் சிறிய நூலகம் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளனர்.

    இதில் முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்திற் குட்பட்ட சென்னை சூளை ஏ.பி.சாலையில் உள்ள ராகவேந்திரா பூங்கா மற்றும் சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் சிறிய நூலகம் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் காமிக்ஸ், சிறுகதைகள் போன்ற புத்தகங்கள் உள்ளன.

    பூங்காவிற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்காக வருபவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து பசுமையான பூங்காவில் அமர்ந்து படிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். புத்தகங்களை பூங்காவை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும் நூலகம் தொடர்பாக பொதுமக்கள் அங்கு வைத்துள்ள நோட்டு புத்தகத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளிப்படுத்தலாம்.

    புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

    இதைத்தொடர்ந்து வடசென்னை பகுதியில் மேலும் 8 பூங்காக்களில் வரும் நாட்களில் இதேபோல் சிறிய நூலகம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து இளநிலை பொறியாளர் எஸ்.சர்தாஜ் கூறும்போது, பூங்காவில் அமைக்கப்படும் சிறிய நூலகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் புத்தகம் வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில் எம்.ஆர்.எப். கார்டன், பூந்தோட்டம் பூங்கா, மணலி மண்டலத்தில் 2-வது பிரதான சாலையில் உள்ள பூங்கா, எம்.எம்.டி.ஏ. பூங்கா, மாதவரம் மண்டலத்தில் பத்மகிரி பூங்கா, கே.கே.ஆர்.கார்டன், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஜி.என்.டி. சாலையில் உள்ள அன்சா கார்டன் மற்றும் ஜீவாபூங்காவில் நூலகம் திறக்கப்பட உள்ளது என்றார்.

    • காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு களாக மாற்றியதைக் கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.

    விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைப்படி நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.



    அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தமும், காளை மாடு சிலை அருகில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி, எம்.எல்.எப், ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஈரோடு காளைமாடு சிலை அருகே ரெயில் மறியலுக்காக திரண்டு நின்றனர்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்லிங்கம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தொ.மு.ச. கவுன்சில் பேரவை மாவட்ட செயலாளர் கோபால், தலைவர் தங்கமுத்து, ஏ.ஐ.டி.யுசி. சின்னுசாமி, எச்.எம்.எஸ். சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் காளை மாட்டு சிலை அருகில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற போராட்ட குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். டி.எஸ்.பி. சேகர் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அழைத்து சென்றனர்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், 50 பெண்கள் என 250-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • நீதிபதி டாக்டர் ஜோதிமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் சங்க கொடி ஏற்றி வைத்தார்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது நாடார் சேவை மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    நீதிபதி டாக்டர் ஜோதிமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் சங்க கொடி ஏற்றி வைத்தார்.


    • 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலியில் இன்று (16-02-2024) நடைபெற்றது. இதில் ஈஷாவின் தன்னார்வலரான திரு.பிரேம் பங்கேற்று பேசுகையில்:

    "கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.


    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 14 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தூத்துக்குடி, கூடங்குளம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை, நட்டாலம், புதுக்கடை, மார்த்தண்டம், மேலப்புறம் ஆகிய பகுதிகளிலும் வலம் வர இருக்கிறது. முன்னதாக இந்த ரதம் பிப் 8 ஆம் தேதி முதல் பிப் 13 ஆம் தேதி வரை தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளுக்கு வருகை தந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் சென்றடைய உள்ளன.

    ரதம் பயணிக்கின்ற ஊர்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

    மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷாவின் மஹாசிவராத்திரி நேரலை செய்யப்பட உள்ளது.


    அந்த வகையில் திருநெல்வேலியில் சேரன்மகா தேவி ரோட்டில் அமைந்துள்ள ஜெயம் மஹால், தூத்துக்குடியில் வி.இ ரோட்டில் அமைந்துள்ள அழகர் மஹால், கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, காரைக்குடி, கூடங்குளம், நாகர்கோவில், சாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு நடக்கும் அனைத்து இடங்களிலும் பங்கேற்கும் மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
    • 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மகளிர் திட்டத்தில் சிறு தானிய உணவு பொருட்கள் விற்பனையகத்தை வீட்டுவசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் பவானிசாகர் அணையின் உபரிநீரை கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளோம். 1045 குளங்களும் தண்ணீர் விட்டு சோதனை செய்து முடித்து விட்டோம்.

    ஏற்கனவே போடப்பட்டு உடைந்த பைப்புகள் சரி செய்யப்பட்டது. 6 மோட்டார் இயங்குவதற்கான போதிய அளவு தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    2016-ம் ஆண்டுக்கு முன்பு வீட்டுமனை அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29-ந் தேதி இறுதி நாள். மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் 60 இடங்களில் உள்ள வாடகை கட்டிடங்களில் 10 ஆயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததை இடித்து தற்போது வீடுகள் கட்ட உள்ளோம். அந்த இடங்களில் தேவையான வீடுகள் குறித்து கணக்கெடுத்து கட்ட உள்ளோம்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் செய்ய உள்ளோம். மேலும் உடுமலைப்பேட்டையில் 110 தனித்தனி வீடுகள் கட்டி விற்காமல் இடிந்துள்ளது. திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 14 ஆயிரத்து 6 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 363 மனுக்கள் ஏற்று அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் கொடுத்தால் அதன் மீது பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து மாதம் கணக்கில் அறிவுறுத்தப்பட்டு அதிகமாக கால அவகாசம் வழங்கிய பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.



    ஆனால் எடப்பாடி பழனிசாமி 14 மட்டும் தான் நடக்கவில்லை என்று பட்டியலிட்டு உள்ளார். அப்படி என்றால் மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டதை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார் என்று தானே அர்த்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
    • புதிய உறுப்பினர்கள் 6 வருடம் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணக்குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார் பொருளாதார வல்லுநர், முனைவர் பிரேம்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிய உறுப்பினர்கள் 6 வருடம் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.

     

    • அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.
    • எனக்கு ஜாமின் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒரு வழக்கு சம்பந்தமாக அவருக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

    இவர் ஏற்கனவே தனக்கு ஜாமின் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை பெஞ்சில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், சட்டத்துக்கு புறம்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீ சார் என்னை கைது செய்து உள்ளனர். தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனக்கு ஜாமின் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன். எனவே எனக்கு ஜாமின் அளித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஜாமின் மனு குறித்து தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது.
    • ஆட்சியில் இருக்கிற நேரத்தில் மக்களுக்கு திட்டங்களை தீட்டுவோம். நன்மைகளை வழங்கி கொண்டே இருப்போம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டமான 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் 35 நாட்களில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து 'மக்களுடன் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை விழா நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இருசக்கர வாகனங்களை வழங்கினார். அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    மேலும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணிநியமன ஆணைகளை வழங்கியும் அதை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரையை பதிக்கக் கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம். அதிலே குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக்கொண்டே போக முடியும்.

    இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிற திட்டங்களாக அமைந்திருக்கிறது. இந்த வரிசையில், இந்த திராவிட மாடல் அரசால், உருவாக்கப்பட்ட திட்டம்தான் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்.

    'மக்களிடம் செல் மக்களோடு வாழ். மக்களுக்காக வாழ்' என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்து விடமாட்டோம்.

    ஆட்சி இல்லாத போது மக்களுக்காக போராடுவோம். வாதாடுவோம். ஆட்சியில் இருக்கிற நேரத்தில் மக்களுக்கு திட்டங்களை தீட்டுவோம். நன்மைகளை வழங்கி கொண்டே இருப்போம்.

    அரசுத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் போய்ச் சேருகிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில், 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றேன். நான் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது, அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது. மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதை முழுமையாக போக்கவேண்டும் என்பதற்காகதான், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக 'மக்களுடன் முதல்வர்' என்கின்ற திட்டம் தீட்டப்பட்டது. 18.12.2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.

    அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. சேவைகளை பெற அலையத் தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். விண்ணப்பித்தால் விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்தோம்.

    தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளை குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகின்றது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோருக்கான சேவைகளை முதலிலேயே கண்டறிந்து, தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

    முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது.

    இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.

    இது தொடர்பாக, மேலும் சில புள்ளிவிவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது.

    மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக, 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது.

    குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில்

    3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம், கடன் உதவிகள், கருவிகள், அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது.

    கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்ய விரும்புறேன். இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? இத்தனை இலட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள்.

    இன்றைக்கும், எல்லா மாவட்டங்களிலும், நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக நானும் பங்கேற்றிருக்கிறேன்.

    மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கி இருக்கிறோம். கழகம் ஆட்சிக்கு வந்தது முதலாவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, ஜோசப் சாமுவேல், மயிலை த.வேலு எழிலன், பரந்தாமன் எம்.எல்.ஏ. கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் புத்தகம் பரிசளித்து கவுரவித்தார். அனைவரையும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார்.

    முதல்வரின் முகவரி சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

    ×