search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் காவிரி கரையோரம் சுற்றித்திரியும் யானை கூட்டம்
    X

    ஒகேனக்கல் காவிரி கரையோரம் சுற்றித்திரியும் யானை கூட்டம்

    • காலை, மாலை என இரு நேரங்களிலும் யானைகள் கூட்டம் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன.
    • யானைகள் நடமாட்டத்தை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம்.

    தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.

    இந்த யானைகள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.

    இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போக்கு காட்டி விட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதியில் நுழைந்தது. தற்போது இந்த யானை கூட்டம் ஒகேனக்கல் ஆலம்பாடிவனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

    காலை, மாலை என இரு நேரங்களிலும் யானைகள் கூட்டம் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன.

    இந்த நிலையில் நேற்று மாலை 20-க்கும் மேற்பட்ட யானைகள் 5 குட்டிகளுடன் சாலையை கடந்தது. பின்னர் சாலையை கடந்து காவிரி ஆற்றின் கரைக்குச் சென்றது. பின்னர் குட்டிகளுடன் யானைகள் தண்ணீர் குடித்து உற்சாகமாக குளியல் போட்டது. அதன் பின்னர் யானைகள் கூட்டமாக மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியது. இதனால் அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    யானைகள் நடமாட்டத்தை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.

    யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றனர்.

    Next Story
    ×