என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேசுவதில் தாமதம்: அழைப்பு வராததால் காங்கிரஸ் கலக்கம்
    X

    கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேசுவதில் தாமதம்: அழைப்பு வராததால் காங்கிரஸ் கலக்கம்

    • வடமாநிலங்களில் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டணி கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கி உள்ளன.
    • காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளை மாற்றிவிட்டு புதிய தொகுதிகளை கொடுக்கவே தி.மு.க. விரும்புகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இன்னும் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை 'சீட்' என்பதும் முடிவாகவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளுமே கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் தேசிய அளவிலான பிரதான கட்சியாக இருப்பதால் கூடுதலான எம்.பி.க்களை கைப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறது.

    வடமாநிலங்களில் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டணி கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கி உள்ளன.

    இந்த நிலையில் காங்கிரசுக்கு நம்பிக்கை கொடுத்து வரும் தி.மு.க.வும் தொகுதிகளில் கை வைக்குமோ என்ற அச்சம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்று டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் பேசினார்கள்.

    அப்போது 15 தொகுதிகள் பட்டியலை கொடுத்து 12 தொகுதிகள் குறைய கூடாது என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் 5 தொகுதிகள்தான் தர இயலும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய முடியாமல் பேச்சுவார்த்தை முடிந்தது.

    ஆனால் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

    தி.மு.க. தரப்பில் தங்கள் நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே டி.ஆர்.பாலு முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போதே காங்கிரசுக்கு குறைவான தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என்பதையும் அதற்கான காரணத்தையும் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

    அந்த தகவலை சிதம்பரமும் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டார். எனவே ஒன்றிரண்டு தொகுதிகள் குறைந்தாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் தரப்பில் இறங்கி வந்ததாக கூறுகிறார்கள்.

    அதன்பிறகு ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளை மாற்றிவிட்டு புதிய தொகுதிகளை கொடுக்கவே தி.மு.க. விரும்புகிறது.

    எதுவானாலும் பேசி முடிவு செய்யலாம் என்ற அளவுக்கு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளது. வருகிற 18-ந்தேதி மீண்டும் பேசலாம் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை. இதனால் காங்கிரஸ் கலக்கத்தில் உள்ளது.

    காங்கிரசுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளும் கூடுதல் தொகுதி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.

    கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அதிலும் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.

    ஆனால் இந்த தேர்தலில் 4 தொகுதிகள் வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுள்ளார். உள்ளாட்சிகள் உள்பட அதிகாரமிக்க பதவிகள் எதுவும் இதுவரை தரவில்லை.

    எனவே இந்த முறை எம்.பி. தொகுதிகள் அதிகம் வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்று சிறுத்தைகள் தரப்பில் உறுதியுடன் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கடந்த தேர்தலில் இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இந்த முறை கம்யூனிஸ்டு கட்சிகளும் முன்பைவிட கூடுதல் தொகுதி வேண்டும் என்பதில் கறாராக உள்ளன.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் 4 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் அழைப்பு ஏதும் வரவில்லை என்றும் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு தொகுதியாவது கூடுதலாக அதாவது 3 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மாநில செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார்.

    கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவுவதால் தி.மு.க. விட்டு பிடிக்கிறது.

    தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காததால் கடைசி நேரத்தில் பார்த்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

    காங்கிரசுக்கு தொகுதிகள் குறைவு, மாற்று தொகுதிகள் பற்றி ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவர்

    கே.எஸ்.அழகிரியோடு பேசி உள்ளது. கடந்த தேர்தலை விட தொகுதிகள் எண்ணிக்கை குறைய கூடாது என்ற தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். புதுமுகங்கள் பலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாகவும் அதுபற்றியும் டெல்லி மேலிடத்திடம் தகவல் தெரிவிக்க உள்ளனர்.

    கூட்டணிகள் உறுதியாகாததால் கட்சிகளிடையே குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

    Next Story
    ×