என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும்.
- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கினார். இதை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று பல்லடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதற்கான நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் மதுரை வந்தடைகிறார். மதுரையில் உள்ள வீரபாஞ்சான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்தில் வந்து இறங்குகிறார்.
அதே பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறு, குறு தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொழில் அதிபர்களுடன் பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சிவகங்கை ரோடு, ரிங் ரோடு, கப்பலூர் வழியாக திருநகர் அருகே உள்ள பசுமலையில் அமைந்திருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை, தெற்கு வெளிவீதி வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்.
அங்கு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு மதுரை நகருக்குள் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அதே வழியில் மீண்டும் பசுமலை நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வந்திருந்தார். அப்போது அவர் மதுரையில் இரவு தங்கினார். இந்த பயணத்தின்போது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தார். அதேபோல் தற்போது 2-வது முறையாக மதுரையில் தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணம் செய்யும் சாலைகளில் மத்திய கமாண்டோ படை போலீசாருடன் மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, அபிநவ் குமார் மற்றும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 300 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற்பட்ட வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை வருகை தரும் பிரதமர் மோடி இன்று இரவு தங்க இருக்கும் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சி.
மதுரை விமான நிலையம், பிரதமர் தங்கும் தனியார் விடுதி, திருப்பரங்குன்றம் சாலை, தொழில் அதிபர்கள் மாநாடு நடைபெறும் தனியார் பள்ளி, மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி பிரதமர் வந்து இறங்கும் தனியார் பள்ளி ஹெலிபேட் மைதானம், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம், ஓட்டல் போன்ற இடங்களுக்கு காரில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடியின் மீனாட்சி அம்மன் கோவில் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி நாளை அதிகாலை இயற்கை எழில் சூழ்ந்த மலை குன்றில் அமைந்துள்ள ஓட்டலில் தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கிறார். காலை 8 மணி அளவில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காரில் விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடவில்லை.
- தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓசூர்:
ஓசூரில் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தும் அரசு நிகழ்ச்சியில் செல்லக்குமார் எம்.பி. பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடவில்லை.
நிகழ்ச்சிக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடங்கியிருக்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
- இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.
ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.
இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்துள்ளது.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கும் பார் வெள்ளி ரூ.75,500-க்கும் விற்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,815-க்கும் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கும் பார் வெள்ளி ரூ.75,500-க்கும் விற்கப்படுகிறது.
- போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு அரசு எந்திரத்திற்கே தொடர்பு இருக்கிறது
- போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக இயங்குகின்ற டெல்லியினுடைய சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த கும்பலுடைய தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக் தான் என்ற செய்தியும், அவரை காவல் துறை தேடுகிறது என்ற செய்தியும் வந்தபோதுதான், உண்மையிலேயே தமிழக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் அமைச்சர்களுடன் எடுத்துள்ள புகைப்படங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டு உள்ள மிகப் பெரிய தலைகுனிவாகும்.
இன்று, தமிழ் நாட்டைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் தலைவனாக செயல்பட்டு உள்ள தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கால் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழக காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் ஒரு நிகழ்ச்சியில், மேற்படி ஜாபர் சாதிக்குக்கு பரிசளித்துப் பாராட்டுகின்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
இதன்மூலம் போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு அரசு எந்திரத்திற்கே தொடர்பு இருக்கிறது என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. எனவே,'வேளியே பயிரை மேய்கிறதா?'என்ற சந்தேகம் தமிழ் நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது. அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிப்படுத்த வேண்டிய தலையாய கடமை எனக்கு இருக்கிறது.
எனவே, தி.மு.க. அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்; தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்து, அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய அமைப்புகளின் சார்பில், வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசி வரும் நிலையில் தே.மு.தி.க. மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
- பிரேமலதா தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு விரைவில் நியமிக்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்பது பற்றி மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை கூறினார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என்றும் ஒரு சிலர் பா.ஜ.க. உடன் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.
ஆனாலும் அது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தே.மு.தி.க.வை அ.தி.மு.க.வும் பாரதீய ஜனதாவும் தங்கள் பக்கம் இழுக்க மறைமுகமான வேலைகளில் ஈடுபட்டனர். தங்கள் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மூலம் ரகசியமாக தே.மு.தி.க. தலைமை பொறுப்பாளரிடம் பேசி வருகின்றனர்.
4 அல்லது 5 தொகுதிகள் வரை கூட்டணியில் ஒதுக்குவதாக பேசி வருகின்றனர். ஆனாலும் இது பற்றி தே.மு.தி.க. தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அ.தி.மு.க. அணியில் சேர்வதா? பா.ஜனதா அணியில் சேர்வதா? என்று முடிவெடுக்காமல் மதில் மேல் பூனையாக தே.மு.தி.க. இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசி வரும் நிலையில் தே.மு.தி.க. மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தே.மு.தி.க. எந்தவித சலசலப்பும் இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் இருப்பது ஏன் என்று அதன் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவரது விளக்கம் ஏற்புடையதாக இருந்தது. அவர் கூறியதாவது:-
இந்த கட்சி ஒரு குடும்பத்தைப் போல கட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 60 நாட்கள் கட்சியில் துக்க நாட்களாக பின்பற்றப்பட்டு வருவதால் தேர்தல் பணியில் இதுவரை ஈடுபடவில்லை.

டிசம்பர் மாதம் 28-ந்தேதி விஜயகாந்த் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து 60 நாட்கள் கட்சியிலும் சரி குடும்பத்திலும் சரி எவ்வித முக்கிய காரியங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் துக்க நாட்கள் நாளையுடன் முடிகிறது.
அதன் பின்னர்தான் தேர்தல் கூட்டணி, தொகுதிகள் பங்கீடு குறித்து பேசுவோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் கட்சியின் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கப்படும் முதல் தேர்தல் என்பதால் யாருடன் கூட்டணி வைப்பது என்பதை முடிவு செய்வதோடு எத்தனை இடங்களில் போட்டி இடுவது என்பது பற்றியும் இறுதி செய்து எங்களது நிலைப்பாட்டிற்கு ஒத்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம். வெற்றி பெறுவோம். பாராளுமன்றத்தில் தே.மு.தி.க.வின் குரல் ஒலிக்கும். அது நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்த் மறைவு துக்க நாட்கள் அனுசரிப்பு நாளையுடன் முடிவதால் மார்ச் 1-ந்தேதி முதல் தேர்தல் பணிகளை தீவிரபடுத்த கட்சி தலைமை திட்டமிட்டு உள்ளது.
பிரேமலதா தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு விரைவில் நியமிக்கப்படுகிறது. குழுவினரிடம் அ.தி.மு.க. பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் விருப்ப மனுக்கள் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் தே.மு.தி.க. அடுத்து வரும் சில நாட்களில் கூட்டணியை இறுதி செய்கிறது.
- நாடு முழுவதும் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
- நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதியாகியுள்ளது.
நீலகிரி:
பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியிருப்பதாவது:-
பாண்டிச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
நாடு முழுவதும் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதியாகியுள்ளது.
வேட்பாளர் யார் என்று கட்சி தலைமை, பாராளுமன்ற குழு அறிவிக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- தென்னக ரயில்வேயில் பயணிகள் ரெயிலுக்கான கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நகரப் பகுதிகளோடு கிராமப்புற மக்களை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பாசஞ்சர் ரெயில் என்று கூறப்படும் இந்த ரெயில்கள் எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
முக்கிய நகரங்களில் இருந்து 200 கி.மீ. தூரத்திற்குள் மட்டும் சென்று வரும் ரெயில்களில் கட்டணம் குறைவாக இருந்ததால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தினர். விவசாய விளைபொருட்கள் எடுத்துச் செல்லவும் இது உதவுவதால் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த உணவு பொருட்களை நகரப்பகுதிகளுக்கு கொண்டு வருவது வழக்கம்.
எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்வதால் பயணிகள் ரெயில்களுக்கு கிராம மக்கள் இடையே அதிக வரவேற்பு இருந்தது.
இதற்கிடையே, கொரோனா காலத்தில் பயணிகள் ரெயில், மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டது. இதனால் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது அப்போது எதிர்ப்பை ஏற்படுத்தினாலும் கொரோனா காலத்தில் பெரிதாக பேசப்படவில்லை. கடந்த 3 ஆண்டாக மெயில் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இந்த ரெயில்கள் பயணிகள் ரெயில்களாக மாற்றம் செய்து ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 21-ம் தேதியில் இருந்து இது மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
நாடு முழுவதும் உள்ள மெயில் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களாக மாற்றப்பட்டதால் கட்டணமும் குறைந்தது. தமிழகத்தில் சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட டிவிஷன்களில் இயக்கப்படும் இத்தகைய ரெயில்களில் இனி சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.
இதுவரையில் மெயில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய அறிவிப்புக்கு பிறகு பயணிகள் ரெயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணம் தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.
- 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்.
- ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைப்பு.
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தையும், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் 'கலைஞர் உலகம்' என்ற பெயரில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் என்றாலே போராட்டம்தான்.
அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை.
- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு.
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக, பேரறிஞர் அண்ணாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர், கருணாநிதி நினைவிடம் முன்பு நிறுவப்பட்டுள்ள சிலையை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திறப்பு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
கருணாநிதியின் நினைவிடத்தை சுற்றிலும் அவரது பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கும். அங்கு, கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களை பொன்னாடை போர்த்தி முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார்.
- கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு கொலை செய்துள்ளனர்.
- சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு.
திண்டுக்கல் மாநகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் சிவக்குமாரின் தந்தை நாகராஜன். மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென நாகராஜனை சூழ்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மர்ம நபர்கள் விரட்டியபோது கவுன்சிலரின் கண்களில் மிளகாய் பொது தூவிவிட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.
- வேலை நிறுத்தத்தில் மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால், வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.






