என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உலர் பழங்களை ஆர்டர் செய்தபோதும், பாலிசி எடுத்து தருவதாக கூறியும் ரூ.2½ லட்சம் சுருட்டல்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் வயதான முதியவர்களை குறி வைத்து ஆன்லைன் வாயிலாக 2 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெ.எல்.என். சர்மா என்பவரிடம் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் தனியார் வங்கி யின் இன்சூரன்ஸ் நிறுவனத் தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். நீங்கள் செலுத்தும் பாலிசி தொகை 45 நாட்களில் திருப்பி தரப்படும் என்று அவர் ஆசை காட்டியுள்ளார்.
இதனை நம்பி சர்மா, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் மறுநாள் மனைவியின் வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி எதுவும் நாங்கள் பேசவில்லையே? ஏன் பணத்தை அனுப்பினீர்கள்? என்று கேட்டுள்ளனர்.
இதன்பிறகே சர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதுபற்றி சூளைமேடு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 70 வயதான ஜெயஸ்ரீ என்பவர் ஆன்லைனில் உலர் பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் ஆர்டர் செய்ய முடியாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டில் இருந்து 6 முறை தலா ரூ.10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, "அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினால் அவர்களிடம் எச்சரிக்கையோடு பேச வேண்டும். இல்லையென்றால் இதுபோன்று இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளனர்.
- லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார்.
- யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.
இதனால் உணவு, குடிநீரை தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டுயானைகள் கூட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி என்ற பகுதியில் உள்ள கிரி என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை யானை கூட்டம் மிதித்து சேதப்படுத்தியது. அப்போது தோட்ட காவலில் இருந்த விவசாயிகள் யானைகள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.
பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. எனினும் யானை கூட்டங்கள் மிதித்து சேதப்படுத்தியதில் 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகள் கடும் சேதம் அடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார். தனக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் யானை கூட்டங்கள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே இரவு நேரத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை பறிகொடுக்க முடியாது.
- மக்களை நம்பி தொடர்ந்து தனித்தே களத்தில் நின்று போராடுவேன்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:-
கேள்வி:-நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனால் வாக்கு சதவீதம் அதிகரித்து வந்த போதிலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளதே? இது தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி விடாதா?
பதில்:- வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதே பெரிய வெற்றிதான். தலைவர், தொண்டர் என தனித்தனியே இருந்தால்தான் நீங்கள் சொல்வது போன்று சோர்வு, சலிப்பு எல்லாம் வரும். நாம் தமிழர் கட்சியில் அனைவருமே லட்சிய உறுதியுடன் புரட்சிகர அரசியலையே முன்னெடுத்துச் செல்கிறோம். 'சுதந்திர பசி கொண்ட மக்களை சோற்றுப்பசி ஒன்றும் செய்யாது' என்று எங்கள் தலைவர் சொல்கிறார்.
தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை பறிகொடுக்க முடியாது. தோற்கப் போகும் கோட்பாட்டை ஏற்று அதன் வெற்றிக்காக இன்று பாடுபடுவதைவிட என்றாவது ஒருநாள் ஜெயிக்கப்போகும் கோட்பாட்டை ஏற்று அதற்காக போராடி தோற்பதே மேன்மையானது என்கிறார் நேரு. அப்படித்தான் இதனை பார்க்க வேண்டும். அதனால் இங்கு சோர்வு என்பதே கிடையாது. எளிதாக எதுவும் நடந்து விடாது. ஒரே நாளில் மாறுதல் எப்படி நடக்கும். கத்தரிக்காய், வெண்டைக்காயை நீங்கள் பறிக்க வேண்டுமென்றால் கூட விதை போட்டு 3 மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.
புரட்சிகர மாறுதல் அரசியலில் எந்த விலையும் கொடுக்காமல் எப்படி வரும். எந்த பின்புலமுமின்றி நாங்கள் வளர்ந்து வருவதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். வாரிசு பின்புலம், கட்சி பின்புலம் எதுவுமின்றி எளிய பிள்ளைகளாகிய நாங்கள் ஒரு அரசியலை முன்னெடுத்து செல்கிறோம். அரசியல் அதிகாரம், பல ஆயிரம் கோடிகளை கொட்டி தேர்தலை சந்திக்கும் கட்சிகளுக்கு நடுவே எதுவும் இல்லாமல் வரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதும் வெற்றி தானே. சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாமன்ற உறுப்பினராக செல்வது மட்டுமே வெற்றி கிடையாது. எங்களது லட்சியங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுவதே வெற்றிதான்.

கே:- பாரதிய ஜனதா, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. என அனைத்து கட்சிகளும் கூட்டணி அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றனர். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?
ப:- கொள்கையில்லாத அரசியல் பாவம் என்கிறார் காந்தி. அப்படி கொள்கை அரசியலா? கூட்டணி அரசியலா? என்பதை பார்த்தால் கொள்கை அரசியலைத்தானே முன்னெடுக்க வேண்டும். கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்தால், கொலை செய்தால் அது சரியானது என்றாகி விடுமா? அது குற்றம் இல்லையா? மக்களை முழுமையாக நம்பாதவர்கள், நேசிக்காதவர்கள்தான், ஆள்பலம் தேடுவார்கள். தனித்த வீரன், நேர்மையானவன், நான் மக்களை நம்புகிறேன்... நேசிக்கிறேன்.
அவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஆள் துணை எனக்கு எதற்கு? கூட்டத்தில் ஒருவனாக நிற்பதற்கு துணிவு தேவையில்லை. தனித்து நிற்பதற்குத் தான் துணிவு தேவை. அதனால் நாங்கள் அதனை கணக்கிலேயே எடுத்துக் கொள்வது இல்லை. எனவே மக்களை நம்பி தொடர்ந்து தனித்தே களத்தில் நின்று போராடுவேன்.
கே:- நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதே? அதனை எப்படி அணுகப் போகிறீர்கள்? என்ன நினைக்கிறீர்கள்?
ப:- வேண்டுமென்றே அது செய்யப்பட்டுள்ளது. ஒரு சின்னத்தை பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் ஒரு சதவீத வாக்கு பெற்றிருந்தாலே அந்த கட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கரும்பு விவசாயி சின்னத்தில் 6 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். அவர்கள் சொல்வது போல வரியும் கட்டியுள்ளோம். 7 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளோம். அப்படி இருக்கும்போது இரண்டே தொகுதியில் போட்டியிட்டு 71 ஓட்டுகளையே பெற்றவருக்கு எங்கள் சின்னத்தை எப்படி ஒதுக்கினார்கள்? அவருக்கு அவசரம் அவசரமாக சின்னத்தை ஒதுக்கி கொடுத்தது ஏன்?
எனவே நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம்-புதுச்சேரியில் விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று வழக்குப் போட்டு உள்ளோம். அதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப்போகிறது? எனபதை பார்க்க வேண்டும். 4 அல்லது 5 நாட்களில் அது தெரிந்து விடும்.
கே:- தனித்தே போட்டியிடுவது என்கிற முடிவெடுத்துள்ள போதிலும் கூட்டணி பற்றி ரகசிய பேச்சுவார்த்தையில் எங்களோடு கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்று கூறியுள்ளீர்கள்? எதிர்காலத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு உள்ளதா? இல்லை சீமான் தனி வழியிலேயே பயணிப்பாரா?
ப:- நீங்கள் இப்படித்தான் (தனித்து) என்னை ஏற்க வேண்டும். என்னையென்றால் நான் கொண்டுள்ள தத்துவத்தை நீங்கள் ஏற்க வேண்டும். நான் தமிழ், தமிழர், தமிழ் தேசியத்தை முன்னெடுத்து பேசி வருகிறேன். நான் பேசுகிற அரசியலை எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரா? இல்லையா? இன்று அவர் வைத்திருக்கும் முழக்கம் என்ன? தமிழர் உரிமை மீட்போம். தமிழ்நாட்டை காப்போம் என்கிறார். இதைத்தானே நான் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்.
இப்படி எனது அரசியலை ஏற்று உங்கள் கருத்தை ஏற்கிறேன் என்று என்னோடு பயணிக்க யாராவது வந்தால் அதுபற்றி அப்போது யோசிக்க வேண்டும். அதே நேரத்தில் முறைகேடாக ஆட்சி செய்து வழக்குகளை சந்தித்தவர்களுடன் சேர்ந்தால் அவர்கள் மீது இருக்கும் கோபம் எங்கள் மீதும் திரும்ப வாய்ப்பு உள்ளது.
புதிய ஆற்றல்களாக அமைப்புகள் வந்தால் அவர்களோடு கூட்டணி சேர்ந்து பயணிக்கலாம். அதற்கு நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. மற்றவர்களின் தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டிக் கொள்வதை விட தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுபவர்களே மேலானவர்கள். அப்படி இருக்கும்போது மக்களுக்கு முன்பு நான் ஏன் போலியான உருவத்தை காட்ட வேண்டும்.
நான் இவ்வளவுதான் என்று தனித்து நின்று உண்மையான உருவத்தை காட்டிவிட்டு போய்விட வேண்டியதுதானே? தனித்து நின்றாலும் நாங்கள் தனித்துவத்தோடு நிற்கிறோம். அதனால் நாம் தமிழர் கட்சிதான் பெரிய கட்சி. 40 தொகுதியிலும் நான்தான் தனித்து போட்டியிடுகிறேன்.

எனக்கு முன்பு விஜயகாந்த் மட்டுமே அப்படி களம் கண்டுள்ளார். 2014-ம் ஆண்டு ஜெயலலிதா அதுபோன்று தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்தித்து 37 இடங்களிலும் வெற்றி பெற்றார். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட போகிறோம். எனவே நாங்கள்தான் பெரிய கட்சி. தனித்து நிற்பதற்கு இப்போது யாருக்கும் தைரியம் இல்லை என்பதே உண்மையாகும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
- முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பலின் செயல்பாட்டை பிரதமா் தொடங்கி வைக்கிறாா்.
- தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நாளை (28.2.2024) காலை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.
வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள், இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பலின் செயல்பாட்டை பிரதமா் தொடங்கி வைக்கிறாா். இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்பட்டது.
மேலும், வாஞ்சி மணியாச்சி-நாகா்கோவில் ரெயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரெயில் பாதை திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். சுமாா் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரெயில் பாதை திட்டம், கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரெயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.
தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
தேசிய நெடுஞ்சாலை 844-ல் ஜித்தண்டஹள்ளி-தருமபுரி இடையே நான்கு வழிப்பாதை, தேசிய நெடுஞ்சாலை 81-ல் மீன் சுருட்டி-சிதம்பரம் இடையே இருவழிப்பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-ல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையே நான்குவழிப்பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-ல் நாகப்பட்டினம்-தஞ்சாவூா் இடையே இருவழிப்பாதை ஆகிய இந்தத் திட்டங்கள் சுமாா் ரூ.4,586 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பயண நேரத்தைக் குறைத்து, சமூகப்-பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதுடன் புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
தொடா்ந்து 11.15 மணியளவில் திருநெல்வேலியில் நடக்கும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
- மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
- மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாலே:
மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி னார்.
மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது.
ராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10-ந் தேதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்,மே 10-ந் தேதிக்குள் மற்ற இரண்டு விமானப் படைத் தளங்களில் உள்ள ராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய படைகளுக்கு பதிலாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை கையாளவும் முதல் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் மாலத்தீவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சீனு கானில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்குப் பதிலாக ஹெலிகாப்டரை இயக்கும் குழுவினர் மாலத்தீவு வந்தடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும் இதற்கிடையில், லாமுகன் கத்தூ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவிடம் தங்களது பணியை ஒப்படைக்கும் நடைமுறையை தொடங்கினர்.
- ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது39), ஓய்வுபெற்ற ராணுவவீரர்.
இவரது 2-வது மனைவி வெண்ணிலா (28) மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4).கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார்.
இந்நிலையில் வெண்ணிலா தனது மகள்களுடன் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.
எர்ணாகுளம்-ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார்.
இதில் வெண்ணிலா மற்றும் அவரது மகள்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
அங்கு விரைந்த காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூக்கந்தரூபன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் பூக்கந்தரூபன் (வயது29). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் நேற்று மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார்.
அப்போது, அவர் கையில் கூலித் தொழிலாளி அனைவருக்கும் அரசு வேலை வேண்டும் என்று பதாகையை பிடித்தபடி நின்றார். பின்னர் அவர் திடீரென நான்கு வழிச்சாலை ஓரத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் அவரது உடல் முழுவதும் தீயில் கருகியது. உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பூக்கந்தரூபன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எருது விடும் திருவிழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
- 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, அத்திகானூரில் 71-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை ஊர்கவுண்டர் சங்கர், ஊர் செட்டியார் ராஜேந்திரன் மற்றும் முனுசாமி செட்டியார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகளை இந்த விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர்.
குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைக்கு முதல் பரிசாக ரூ.2.22 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1.77 லட்சமும், 3-ம் பரிசாக ஒரு லட்சமும் என 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
- பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
- பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்தநிலையில், பல்லடத்தின் முக்கிய இடங்களில் மோடியை வரவேற்று இரவில் ஒளிரும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசைத்தறிகளை ஒருநாள் நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்க போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- சிறு, குறு தொழில்களுக்கு மட்டுமன்றி கார்ப்பரேட், பிரைவேட் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் சட்டத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஈரோடு:
சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமானவரி சட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றம் அந்த துறையினருக்கு பாதகமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மார்ச் 31-ந்தேதி முதல் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தத்தின்படி இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்று இருந்தால் அவை வருமானமாக கருதப்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
இது சிறு, குறு தொழில்களை பாதிக்கும் என்பதால் அந்த துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த சட்டத்தை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நாளை (புதன்கிழமை) ஜவுளி வணிகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதில் ஈரோடு பகுதியில் உள்ள 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசைத்தறிகளை ஒருநாள் நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்க போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஈரோடு, பள்ளிபாளையம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் நாளை ஒரு நாள் நிறுத்தப்படும் என்றும், இதனால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தியும் பாதிக்கப்படும் என அவர்கள் கூறினர்.
சிறு, குறு தொழில்களுக்கு மட்டுமன்றி கார்ப்பரேட், பிரைவேட் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் இந்த சட்டத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
- எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன
- ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ரூ.5 கோடி கொடுத்து விட்டார். அதை கொண்டு வந்தவரை போடா ராஸ்கல் என்று சொல்லி திருப்பி அனுப்பினேன். உடனே எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இந்த தகவலை தெரிவித்தேன். அவர் அண்ணே நானும் கேள்விப்பட்டேன். நீங்கள் இனிமேல் வீட்டில் இருக்க வேண்டாம்.
நான் ஒரு இடம் ஏற்பாடு செய்கிறேன் அங்கே போய் இருங்கள் என்றார். எனக்காக லாட்ஜில் தனியாக அறை எடுத்துக் கொடுத்து 15 பேரை பாதுகாப்புக்காகவும் வைத்தார்.
எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. செல்போனில் தலை எடுப்பேன். உயிரை எடுப்பேன் என்று பல அறைகூவல்கள் வந்தன. அத்தனையையும் தாங்கிக் கொண்டேன். பணத்திற்காகவோ அல்லது என் உயிர் போகும் என்பதற்காகவோ பதவிக்காகவோ இந்த இயக்கத்தில் வாழ்பவன் தமிழ் மகன் உசேன் அல்ல.
மக்களுக்காக செயல்படுகிற பாடுபட ஏற்றமிகு தொண்டர்கள் உள்ள இயக்கம் அ.தி.மு.க. அதனை எண்ணிப் பார்த்து இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளித்தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தனக்கு சாதகமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வம் ரூ.5 கோடி அனுப்பி வைத்ததாக தமிழ் மகன் உசேன் பேசியது தற்போது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரதமர் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
- மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர்.
ஈரோடு:
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு புது வீதியில் வசிக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பிரதமர் நரேந்திர மோடி பல்லடம் வருகை எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.
தமிழகம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, இன்று வரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மறைமுகமாக துணை நிற்பதை கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகிலனை கைது செய்தனர்.






