என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
- ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இலுவைமடிவலை மீன்பிடி முறையை தடை செய்ய வேண்டும், நேற்று நடைபெற்ற கோஷ்டி மோதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கடலில் மாயமான மீனவரை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை புஷ்பவனம் வாணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- வேண்டும் மோடி. மீண்டும் மோடி என்பது பா.ஜனதாவினரின் கோஷம்.
- மோடி மீண்டும் மீண்டும் தமிழகத்துக்கு வருவது பா.ஜனதாவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
பிரதமர் மோடி இன்றும், நாளையும் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இன்று பல்லடத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு மதுரையிலும், நாளை தூத்துக்குடி, நெல்லையிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் மோடி மீண்டும் 5 நாட்களில் தமிழகத்துக்கு வருகிறார்.
அதாவது வருகிற 4-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அன்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகிறார். இதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுகிறது. மாலை 3 மணியளவில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
வேண்டும் மோடி. மீண்டும் மோடி என்பது பா.ஜனதாவினரின் கோஷம். அதை போலவே மோடி மீண்டும் மீண்டும் தமிழகத்துக்கு வருவது பா.ஜனதாவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அரசியல் களத்தை கலகலக்க வைத்துள்ளது.
இந்த தேர்தலில் தமிழகத்திலும் சில தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று திட்டமிட்டு இருப்பதால் மோடியே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பது மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது.
பிரதமர் மோடியின் வருகை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏராளமான பொது மக்களை திரட்டுவது, வரவேற்பு ஏற்பாடுகள் செய்வது பற்றி சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் கரு.நாகராஜன் தலைமையில் நாளை மாலையில் அமைந்தகரை அய்யாவு மகாலில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
- மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கி வருகிறது. இதற்கிடையே புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ள இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
அவர்களுக்கு தண்டனை வழங்குவதை கண்டித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்தநிலையில் மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து பாம்பன் தெற்கு வாடி துறைமுக கடற்கரையில் மீனவ காங்கிரஸ் சார்பில் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், பதவி ஆசையில் விஜயதாரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
இந்த போராட்டத்தில் மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிப்பு.
- 2 மாவட்ட தி.மு.க. செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
சென்னை:
தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் துரை முருகன் கூறியிருப்பதாவது:-
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜெகதீஷனும் நியமிக்கப்படுகிறார்கள்.
- ரெயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.
- வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சத்தமில்லாமல் சுற்றறிக்கை.
சென்னை:
மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ரெயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.
வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சத்தமில்லாமல் சுற்றறிக்கை.
தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின் கோரிக்கை மத்திய அரசின் நினைவுக்கு வருகிறது என கூறியுள்ளார்.
இரயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 27, 2024
வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க
சத்தமில்லாமல் சுற்றறிக்கை.
தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின்… pic.twitter.com/Bl508PUJxc
- 20 லட்சத்திற்கும் அதிக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையான தீமைகள் ஏற்படுகின்றன.
- நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை கொடுங்கையூரில் 342 ஏக்கரில் குப்பைக் கொட்டும் வளாகம் உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் 66 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குவிந்து கிடக்கின்றன. அவ்வப்போது தீப்பிடித்து எரியும் குப்பைகளால் அப்பகுதியில் வாழும் 20 லட்சத்திற்கும் அதிக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையான தீமைகள் ஏற்படுகின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் உதவியுடன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டத்தின் மூலம் அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது.
அதேநேரத்தில், அதே குப்பைக் கொட்டும் வளாகத்தில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ.1026 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி அப்பகுதியில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரிப்பதற்கான எரிஉலை நிறுவப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் உற்பத்து செய்யப்படும். உயிரி அகழாய்வு திட்டம் சுற்றுச் சூழலை காக்கக் கூடிய திட்டம் என்றால், எரிஉலை திட்டம் அதற்கு நேர் எதிரான கேடுத்திட்டம் ஆகும். எனவே, கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக, சுழியக் குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியது உள்ளது.
- அ.தி.மு.க.தான் கூட்டணி வேண்டாம் என்று கூறி கொண்டு பா.ஜ.க., பா.ஜ.க. என புலம்பி கொண்டு இருக்கிறது.
திருப்பூர்:
திருப்பூரில் இன்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நிறைவு விழா நடைபயணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
மிகப்பெரிய ஆட்கள் பா.ஜ.க.வுக்கு வர உள்ளார்கள். பொறுத்து இருந்து பாருங்கள். அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கலாம். முக்கிய புள்ளிகளை கட்சிக்குள் கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளது. அதற்கு ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியது உள்ளது. அ.தி.மு.க.தான் கூட்டணி வேண்டாம் என்று கூறி கொண்டு பா.ஜ.க., பா.ஜ.க. என புலம்பி கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது.
- தமிழக அரசின் மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2006-ஆம் ஆண்டு துவக்கத்தில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுத்தபோது, ஆந்திர முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியதோடு, உடனடியாக பொதுப் பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விரிவாக விவாதித்து, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-ன்கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அம்மா. ஆனால், இன்று தி.மு.க. ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினையும் ஆந்திர முதல்-மந்திரி நடத்தியிருப்பது, நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது. பாலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர அரசு, பாலாற்றில் தடுப்பணைக் கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததும், அடிக்கல் நாட்டியதும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக பாலாற்றில் ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாயும் பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வறண்ட நிலை தான் காணப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு மீண்டும் ஒரு தடுப்பணையைக் கட்ட முயற்சி எடுத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பாலாற்றில் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அம்சம் என்னாச்சு, இதற்கு முன்பு ஆந்திர அரசிடம் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன, இப்போது தடுப்பணைக் கட்ட அடிக்கல் நாட்டியப் பிறகும், நிதி ஒதுக்கிய பிறகும் தமிழக அரசின் நிலை என்ன என பல கேள்விகளுக்கு பதில் என்னவென்றால் தமிழக அரசின் மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- எங்கள் மடியில் கனமில்லை. பா.ஜ.க. பிள்ளை பிடிப்பவர்கள் போல அலைகிறார்கள்.
- நான் இங்கு ராஜாவாக இருக்கிறேன். நான் ஏன் பா.ஜ.க.வில் போய் கூஜாவாக இருக்க வேண்டும்.
கோவை:
கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.
அந்த சமயத்தில் நான் ஓட்டல் அருகே உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். உடனே நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அவினாசி சாலை என்பது பா.ஜ.க.வினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு பொது வழிச்சாலை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம்.
அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்ததால் தான் பா.ஜ.க.வால் சட்டமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் உயிரை கொடுத்து உழைத்து வெற்றி பெற வைத்தோம்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க.வில் இணைத்தது போல் இங்கும் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இது வடநாடு கிடையாது. இங்கிருந்து ஒரு தொண்டனை கூட பா.ஜ.க.வில் இணைக்க முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோவையில் வெற்றி பெற்றால் நான் அரசியல் வாழ்வை விட்டு விலகி கொள்கிறேன். எங்களால் தான் பா.ஜ.க.வினர் வெற்றி பெற்றார்கள் என்பதை மறுக்க இயலாது. கள நிலவரம் எங்களுக்கு தான் தெரியும். தமிழகத்தில் கோவை அ.தி.மு.க.வின் கோட்டை. பா.ஜ.க.வால் தனித்து வெல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.
- 2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 2 தனி தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.
முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.
2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்பதால் தி.மு.க.விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருமாவளவனும் கடந்த முறையைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்டு பெறுவதில் உறுதியாக உள்ளார்.
இந்த நிலையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.விடம் இருந்து நாளை அழைப்பு வரும் என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். நாளை நடக்கும் பேச்சு வார்த்தையின் போது எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தி.மு. க. தரப்பில் வலியுறுத்தப்படும்.
கடந்த முறை திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதியை தவிர மேலும் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த உள்ளார்.
- பிரதமரின் நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெற உள்ளது.
- மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி வருகை தந்ததும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கிறது.
பல்லடம்:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தை நிறைவு விழாவாகவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவும் பல்லடத்தில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் மலை எதிரில் உள்ள 1400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு இன்று 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இன்று பகல் 12 மணியளவில் பல்லடம் மாதப்பூரில் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பா.ஜ.க.வின் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்தனர்.
இன்று காலை முதல் பொதுக்கூட்டம் மைதானத்திற்கு பொதுமக்கள், பனியன் நிறுவன தொழிலாளர்கள் என ஏராளமானோர் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சாரை சாரையாக திரண்டு வந்தனர். அவர்களை பா.ஜ.க.வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்து மைதானத்திற்குள் அழைத்து சென்றனர். தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அமருவதற்காக மைதானத்தில் ஏராளமான சேர்கள் போடப்பட்டு இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் பங்கேற்க திரண்டு வந்தனர். அவர்களை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்து மைதானத்திற்குள் அனுப்பி வைத்தனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதியம் 1.30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்தை வந்தடைகிறார்.
அங்கு அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பிரதமரின் நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெற உள்ளது.

முன்னதாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த திருப்பூர் தெற்கு, வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் வகையில் இன்று பகல் 11 மணியளவில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். சிறிது தூரம் வரை நடந்து சென்ற அவர், பின்னர் திறந்த வெளிவாகனத்தில் யாத்திரையை மேற்கொண்டார்.
பி.என்.ரோடு வழியாக புஷ்பா சந்திப்பு, குமரன் ரோடு, வளம் பாலம், மத்திய பஸ் நிலையம் வழியாக சென்றார். அப்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் எதிரே உள்ள குமரன் நினைவு ஸ்தூபிக்கு அண்ணாமலை மரியாதை செலுத்தினார். மேலும் மாநகராட்சி அலுவலகம் அருகே காந்தி சிலை, வித்யாலயாவில் உள்ள தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்கிறார். தொடர்ந்து பல்லடம் சாலை வழியாக மாதப்பூரில் பொதுக்கூட்டம் நடை பெறும் மைதானத்தை சென்றடைகிறார்.
பாதயாத்திரை நிறைவு விழா நடைபயணம் என்பதால் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அண்ணாமலைக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாதப்பூர் வரை வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது. நடைபயணத்தின் போது பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் அண்ணாமலை கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி வருகை தந்ததும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி அண்ணாமலையுடன் திறந்த ஜீப்பில் 1 கி.மீ., தூரம் சென்று தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கிறார். இதற்காக அங்கு பிரத்யேக சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேடை அருகே சென்றதும் அண்ணாமலையின் நடைபயணத்தை நிறைவு செய்து வைக்கிறார். பின்னர் பிரதமர் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கூட்டத்தில் பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார் என்று பா.ஜ.க.வினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பொதுக்கூட்டம் மைதானம் 5 லட்சம் பேர் அமரும் வகையிலும், 10 லட்சம் பேர் வரை நின்று பங்கேற்கும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டு இருந்தது.
வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு மேடையின் பின்புறம் பிரத்யேக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. உணவுக்கூடம், வாகன பார்க்கிங், கழிப்பிடம், தண்ணீர் விநியோகம் என 5 ஆயிரம் பா.ஜ.க. தொண்டர்கள் சேவைப்பணியில் ஈடுபட்டனர்.
1.12 ஆயிரம் சதுர அடியில் 3 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள், பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது.
பொதுக்கூட்ட மைதான வளாகத்திற்குள் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் சின்டெக்ஸ் டேங்குகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இது தவிர 5 லட்சம் தண்ணீர் பாட்டில்களும் தயாராக வைக்கப்பட்டு இருந்தது.பொதுக்கூட்ட அரங்குக்கு வெளியே ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
பொதுக்கூட்ட மைதானத்திற்குள் போதை பொருட்கள், நெகிழி பைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் தொண்டர்கள், பொதுமக்கள், பொதுக்கூட்டம் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்பே பொதுக்கூட்டம் தொடங்குகிறது. 10 தீயணைப்பு வாகனங்கள், 30 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

பொதுக்கூட்ட மேடையானது தெற்கு நோக்கி இருக்கும் வகையில் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்டதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மேல் பகுதியில் தாமரைசின்னம் பொறிக்கப்பட்டு வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் மோடி மற்றும் அண்ணாமலையின் படங்கள் இடம் பெற்றிருந்தது. 5 லட்சம் சேர்கள் போடப்பட்டு இருந்தது.
- பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.
- தேர்தல் அறிக்கையில் அவசியம் இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலர் ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அரசு கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், நா. எழிலன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்துகளைப் பெற இந்தக் குழுவினர் மண்டல வாரியாக பயணம் மேற்கொண்டனர். கடந்த 5-ந் தேதி தூத்துக்குடியில் பயணத்தைத் தொடங்கிய குழுவினர், வெவ்வேறு மண்டலங்களில் பயணத்தை முடித்த நிலையில், இறுதியாக சென்னையில் நேற்று கருத்துகளைக் கோரினர்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.
முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி. பேசுகையில்,
மக்களுடைய கருத்துகளை எதிரொலிக்கும் வகையில் அவர்களுக்கான அறிக்கையாக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, விவசாயிகள், நெசவாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தோம். அவர்கள் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று கருத்துக்களை முன்வைத்தார்களோ, அதையெல்லாம் ஒருங்கிணைத்து தி.மு.க. தலைவரிடம் ஒப்புதலைப் பெறுவோம். அதன்பின்னர் தேர்தல் அறிக்கையை தயாரிக்க இருக்கிறோம் என்றார்.
சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகள், கட்சியைச் சேர்ந்த துணை அமைப்புகளிடம் இருந்தும் கோரிக்கைகள், கருத்துகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பெறப்பட்டன.
இன்று தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் கனிமொழி எம்.பி. குழுவினரிடம் மனுக்களை கொடுத்தனர். தேர்தல் அறிக்கையில் அவசியம் இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இதுவரை சுமார் 25 ஆயிரம் மனுக்கள் குவிந்து இருக்கிறது. அதில் சுமார் 18 ஆயிரம் கருத்துக்கள் போன் மூலம் வந்தவையாகும். 2,500 கருத்துக்கள் இ-மெயில் மூலம் வந்திருக்கின்றன.
சமூக வலைதளங்கள் மூலம் 4 ஆயிரம் கருத்துக்கள் கனிமொழி எம்.பி.யிடம் வந்து சேர்ந்து இருக்கிறது. நேரடியாக மக்களிடம் இருந்தும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஆய்வை முடிக்கும் போது சுமார் 40 ஆயிரம் பரிந்துரைகள் பெறப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த 40 ஆயிரம் பரிந்துரைகளில் இருந்து முக்கிய அம்சங்களை தொகுத்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக தயாரிக்க உள்ளனர்.






