என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர்.
- சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.
முசிறி, துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே சீனிவாசன் என்பவரது வீடு அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விரைந்து சென்று சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா (27) கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது.
- யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி நகர பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை கடந்த 3 நாட்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து காரிமங்கலம் வழியாக அண்ணாமலைஅள்ளி, சவுளுக்கொட்டாய் பகுதி யில் இருந்த கரும்பு தோட் டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது. படுகாயம் அடைந்த அந்தப் பெண் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கொட்டை அருகே மான்காரன் கோட்டை பகுதியை வந்து அடைந்தது அங்குள்ள கரும்பு தோட்டம், தீவனம் பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து, பின்பு இரவு அங்கிருந்து வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட தொடங்கினர்.
அப்போது அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. தொடர்ந்து வனத் துறையினர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 7 மணி அள வில் தருமபுரி திருப்பத்தூர் சாலையை கடந்து செட்டிகரை பகுதி பொறியியல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.
வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம், சனத்குமார்ஓடை அருகே தற்பொழுது யானை குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிக்கு யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது சனத்க்குமார் ஓடை அருகே உள்ள புதர் பகுதியில் புகுந்துள்ளதால் 3 வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
யானை நகரப் பகுதியில் தற்பொழுது இருப்பதால் இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும் யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- எழுத்துப் பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் வரப்பெற்றன.
- சென்னையில் மட்டும் அண்ணா அறிவாலயத்தில் 2 நாட்கள் பரிந்துரைகள் பெறப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், அப்துல்லா, ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், எழிலன், மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று பொதுமக்களிடம் பரிந்துரைகளை பெற்றனர். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
எழுத்துப் பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் வரப்பெற்றன.
தொலைபேசி வாயிலாக 18 ஆயிரம் அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டது. அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பினார்கள்.
சென்னையில் மட்டும் அண்ணா அறிவாலயத்தில் 2 நாட்கள் பரிந்துரைகள் பெறப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் பரிந்துரைகள் பெறும் பணிகள் முடிந்ததால் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையில் எந்தெந்த பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும் என்று பட்டியலிட்டு வருகின்றனர்.
இவற்றை முழுமையாக தொகுத்து இந்த வாரம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க உள்ளனர். அவற்றை சரி பார்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதி வடிவம் கொடுக்க உள்ளார்.
இம்மாதம் 10-ந்தேதிக்குள் தேர்தல் அறிக்கையை தயாரித்து முடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- பாதுகாப்பு கருதி போராட்டத்தில் ஈடுபட இருந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பனகல் மாளிகை அருகே திரண்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சென்னை:
சென்னைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்தது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று காலை 11 மணியளவில் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தார்கள். ஆனால் போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
பாதுகாப்பு கருதி போராட்டத்தில் ஈடுபட இருந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாறில் உள்ள தங்கபாலு, நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், போரூர் காரம்பாக்கத்தில் உள்ள மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், ராஜலட்சுமி, நிலவன், வினோத், மாவட்ட தலைவர்கள் டில்லிபாபு, எம்.எஸ்.திரவியம், முத்தழகன் உள்பட பலரது வீடுகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
தங்கள் எல்லைக்குள் போராட்டம் நடத்தக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிலரை போலீசார் விட்டனர். இதையடுத்து அவர்கள் பனகல் மாளிகை அருகே திரண்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தடையை மீறி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் இமயாகக்கன், பொதுச்செயலாளர்கள் டி.செல்வம், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், அடையாறு துரை மற்றும் திருவான்மியூர் டி.கே.முரளி உள்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கிண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளார்கள்.
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்.
அங்கு, 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பின்னர், அங்கிருந்து நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
- தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெறும் மகளிர் மாநாடு.
- நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பாவை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.
- ஜல்லிக்கட்டு போட்டியின் போது 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தருமபுரி:
தருமபுரி அடுத்த சோகத்தூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தருமபுரி சேலம், புதுக்கோட்டை, மதுரை, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.
இதில் தன்னை அடக்க வந்த வீரர்களை காளைகள் தூக்கி வீசியது. போட்டியில் காயம் அடைந்தவர்ளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மிக்சி, மின்விசிறி, ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஜல்லிகட்டில் சுமார் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம்.
- போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.
வேலூர்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் தாலுக்கா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்.
ஒருவனுக்கு தங்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் விண்ணில் ஊர்திகளை செல்கிறோம், சந்திரனுக்கு அனுப்புகிறோம், சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது மனிதாபிமானம் ஆகாது. அது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம்.
அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறோம்.
இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத சூழ்நிலையில் உள்ளது பஞ்சத்தில் உள்ளார்கள்.
உடுக்கும் உடை கூட யாராவது கொடுக்க மாட்டார்களா என காத்துக்கொண்டி ருக்கிறார்கள். இதை மாற்றுவது தான் நமது அரசு. தேர்தல் முடிந்த உடன் 8 லட்சம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும்.
மக்களுக்கு தொண்டு செய்வது எங்கள் தலையாய கடமை என கருணாநிதி செய்தார் அதை அவரது மகன் மு க ஸ்டாலின் இப்போது செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும்.
மதுரை எய்ம்ஸ் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான், அவர்கள் தான் செயல்படுத்தவில்லை. எங்கள் மீது பழி சொல்வது நியாயம் இல்லை. நாங்கள் தடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எந்த திட்டத்தை தடுத்தோமா? இல்லையா என்று சொல்ல வேண்டும்.
பா.ஜ.க.வினர் அ.தி.மு.க. தலைவர்கள் படத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள் என்று அதிமுகவினருக்கு தான் ரோசம், கோபம் வர வேண்டும்.
பிரதம மந்திரி பத்து முறை கூட வரலாம் யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.
இவ்வளவு நாள் தி.மு.க.வை பற்றி பேசினாரா பிரதமர். தேர்தல் வரும்போதுதான் தி.மு.க.வை பற்றி பேசுகிறார். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டி மாடு ஒரு மாறி தலையை ஆட்டும். அதுபோல தான் பிரதமரின் பேச்சு. இதெல்லாம் ஒரு அரசியல் சீசன்.
போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.
இதெல்லாம் பண்ணாமலா இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
- வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.
மதுரை:
சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக தேசிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ள மன் பிரகாஷ் என்பவரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். பின்னர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய அவரை மதுரை ரெயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கினர்.
அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில், போதைப்பொருள் 30 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள் மதுரை ரெயில்வே பாதுகாப்புபடை போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் பிரகாஷ் சென்னை கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருடன் தொடர்புகொண்ட ஜேசுதாஸ் என்பவர் போதை பொருளை ரெயிலில் மதுரைக்கு கொண்டு வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.180 கோடியாகும்.
மேலும் 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.
இதையடுத்து பிரகாசின் மனைவி மோனிஷா ஷீலாவை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வந்தனர். நேற்று முழுவதும் அவரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவில் போதைப்பொருளை கடத்த உத்தரவிட்ட ஜேசுதாஸ் என்பவரும் கைதானார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரகாஷ், அவரது மனைவி மோனிஷா ஷீலா ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இருவரும் சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
- புது மாவட்டங்கள் அறிவிக்கிறது பெரிசு அல்ல அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதுதான் மிக மிக முக்கியமானது.
- 150-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்படும்.
சென்னை:
மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.114.48 கோடியில் 7 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் நாகை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மயிலாடுதுறை மன்னம் பந்தல் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இவற்றை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மண்மனத்துடன் நெல் மணமும் கலந்து வீசும் வண்டல் நிலமும் அழகும் வரலாற்று சிறப்பும் கொண்ட டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்டங்கள் வழங்க கூடிய விழா மற்றும் மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழத்தஞ்சைக்கு உட்பட்ட இந்த 3 மாவட்டங்களில் மயிலாடுதுறை காவிரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்க கூடிய மாவட்டம் புகழ்பெற்ற பழமையான கோவில்கள் பல நிறைந்திருக்க கூடிய மாவட்டம்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி 1½ ஆண்டுகளுக்குள் இந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிற பெருமை கிடைத்துள்ளது.
புது மாவட்டங்கள் அறிவிக்கிறது பெரிசு அல்ல அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதுதான் மிக மிக முக்கியமானது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மாவட்டத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகள் தி.மு.க. ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் உங்கள் அரசான திராவிட மாடல் அரசும் இதை செய்திருக்கிறது.
இன்றைய நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ரூ.655 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள், மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,652 பயனாளிகளுக்கு ரூ.143 கோடியே 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.
நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தையும் எளிமையாக்கி இன்று தொடங்கி வைத்துள்ளேன். தமிழக வரலாற்றிலேயே கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலம் வழங்குவது இதுதான் முதல் முறை.
இந்த விழாவில் இன்னும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
150-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்படும். வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறுக்கிலும் சென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்றின் குறுக்கிலும் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி கிராமத்தில் நண்டாற்று குறுக்கிலும் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் ஒழுங்கிகள் ரூ.44 கோடி செலவில் அமைக்கப்படும்.
இதுபோன்று மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மயிலாடுதுறை பார்க் அவென்யூ பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ரூ. 5 கோடியில் நூலகம் கட்டி முடிக்கப்படும்.
எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கிற வகையில்தான் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். அதனால்தான் தி.மு.க. அரசு நம்மோட அரசு என்கிற அடிப்படை உணர்வு உள்ளது.
தமிழ்நாட்டில் இருக்க கூடிய ஒவ்வொருவர் மனதிலும் அது உருவாகி உள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கிறது. அது மட்டுமா? விடியல் பயண திட்டம் மூலம் 445 கோடி முறை பயணித்து மாதந்தோறும் 888 ரூபாய் வரை சகோதரிகள் சேமிக்கிறார்கள்.
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் வயிறாற சாப்பிட்டு வளமான தலைமுறையாக உருவாகி வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் மூலம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் போய் சேருகிறது.
2 ஆண்டுகளில் நான் முதல்வர் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். இல்லந்தேடி கல்வி திட்டம் மூலம் 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளி குழந்தைகள் பயன் அடைகிறார்கள். 2 லட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

2021 முதல் 2024 வரை பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 614 ஹெக்டேர் நிலங்களுக்கு ரூ.6 கோடியே 40 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.
இப்படி தமிழ்நாட்டில் வாழுகிற ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைய கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.
இந்த திட்டத்தோட பயன்கள் எல்லாம் உரிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்கு ஒரு புதிய திட்டத்தை வருகிற 6-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கப் போகிறேன். அந்த திட்டத்தோட பெயர் "நீங்கள் நலமா?"
இந்த நீங்கள் நலமா திட்டத்தின் மூலமாக முதலமைச்சரான நான் உள்பட அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறையின் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் என பொதுமக்களான உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்கப் போகிறோம்.
உங்களது கருத்துக்களின் அடிப்படையில் நமது அரசோட திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.
முதற்கட்டமாக நலத் திட்டங்கள் பற்றியும், அடுத்த கட்டமாக அரசு துறைகளில் வழங்கப்படுகிற சேவைகள் பற்றியும், கருத்துக்கள் பெற்று அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்படி ஒவ்வொரு நாளும் மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் பார்த்து பார்த்து திட்டங்களை உருவாக்கி வருகிறோம். நிதி நெருக்கடி அதிகமாக இருக்கிற சூழ்நிலையிலும், எந்த மக்கள் நலப்பணி திட்டங்களையும் நாம் நிறுத்தவில்லை.
ஏனென்றால் மக்கள் தொண்டு ஒன்றுதான் நம் ஆட்சியின் நோக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஒரு டெல்டாகாரன் உணர்வோடு இந்த விழாவில் திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளேன்.
தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போகிறவர்கள் நாங்கள் அல்ல. அப்படி வருகிறவர்கள் யார் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. அது யார் என்று உங்களுக்கு தெரியும்.
இப்போது தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கப் போகிறார்கள். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கி இருக்கிறார் நமது பாரத பிரதமர். வரட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.
தமிழ்நாட்டுக்கு நன்மை செய்து விட்டு நாம் வைக்கிற நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு வரட்டும். அப்படி இல்லாமல் தமிழ்நாட்டு மக்களோட வரிப் பணமும், ஓட்டு மட்டும் போதும்னு வருகிறார்கள்.
நாம் கேட்கிறது என்ன? சமீபத்தில் 2 இயற்கை பேரிடர்களை எதிர் கொண்டோம். அப்போது ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம். அதை கொடுத்து விட்டு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகிறாரா? இல்லை ஒரு ரூபாய் கூட சல்லி காசு கூட கொடுக்கவில்லை.
தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டாங்களாம். ஆனால் தங்களது பதவி நாற்காலியை காப்பாற்றி கிட்டு அதுக்காக ஆதரவு கேட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் இவர்களை பார்த்து ஏமாற மாட்டார்கள்.
தமிழ்நாட்டு உரிமைக்காகவும், தமிழ்நாட்டு வளர்ச் சிக்காகவும் பாடுபட்டு கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசு பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக நிற்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது
- குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது.
வண்டலூர்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கம் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டி பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வண்டலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பஸ் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மார்க்கத்தில் மகேந்திரா சிட்டி தொடங்கி சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் வரை சாலையோரத்தில் எந்த பஸ் நிறுத்த நிழற்குடையும் இல்லை.
இதனால் பயணிகள் சாலையோரத்தில் வெட்ட வெளியில் பஸ்களுக்கு காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்து அபாயமும் உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் சாலையில் காத்திருக்கிறார்கள்.
மகேந்திரா சிட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகளும், மறைமலைநகர், பொத்தேரியை சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. தினந்தோறும் மாணவ, மாணவிகள் பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சாலையோரம் பஸ்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் தவித்து வருகிறார்கள்.
இதேபோல் ஊரப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வழித் தடங்களிலும் பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி வரை சாலையோரத்தில் பஸ்நிறுத்த நிழற்குடை இல்லை.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது, சாலை விரிவாக்கம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பஸ்பயணிகளுக்கு நிழற்குடை, பஸ்நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. சாலையோரத்தில் எது பஸ் நிறுத்தம் என்று தெரியாமல் பயணிகள் கூட்டமாக நிற்கும் போது சிறிது தூரம் தாண்டி பஸ்கள் நிறுத்தப்படுகிறது.
பின்னர் பயணிகள் முண்டியடித்து ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது. மதியம் வெயிலில் வெட்டவெளியில் நிற்கமுடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் விரைவில் இந்த பகுதியில் பஸ்நிறுத்த நிழற்குடை அமைக்க சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர்.
- எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொது க்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி பேசியதாவது:-
மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட்டு, விட்டு , அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜெயலலிதா செய்த நல்ல பல திட்டங்களும், எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.






