search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. தேர்தல் அறிக்கையை இந்த வாரம் ஒப்படைக்கின்றனர்: மு.க.ஸ்டாலின் இறுதி வடிவம் கொடுக்கிறார்
    X

    தி.மு.க. தேர்தல் அறிக்கையை இந்த வாரம் ஒப்படைக்கின்றனர்: மு.க.ஸ்டாலின் இறுதி வடிவம் கொடுக்கிறார்

    • எழுத்துப் பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் வரப்பெற்றன.
    • சென்னையில் மட்டும் அண்ணா அறிவாலயத்தில் 2 நாட்கள் பரிந்துரைகள் பெறப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், அப்துல்லா, ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், எழிலன், மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று பொதுமக்களிடம் பரிந்துரைகளை பெற்றனர். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    எழுத்துப் பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் வரப்பெற்றன.

    தொலைபேசி வாயிலாக 18 ஆயிரம் அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டது. அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பினார்கள்.

    சென்னையில் மட்டும் அண்ணா அறிவாலயத்தில் 2 நாட்கள் பரிந்துரைகள் பெறப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் பரிந்துரைகள் பெறும் பணிகள் முடிந்ததால் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையில் எந்தெந்த பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும் என்று பட்டியலிட்டு வருகின்றனர்.

    இவற்றை முழுமையாக தொகுத்து இந்த வாரம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க உள்ளனர். அவற்றை சரி பார்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதி வடிவம் கொடுக்க உள்ளார்.

    இம்மாதம் 10-ந்தேதிக்குள் தேர்தல் அறிக்கையை தயாரித்து முடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×