என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.
சென்னை:
முதலமைச்சரின் முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாதவாறு உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வகையில் 'நேரடி பயனாளர் பரிவர்த்தனை' முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்பணியை எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
அப்போதே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேர்விலும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நேரத்திலும், சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன. இந்நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைக்கும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறையினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தளத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
- கல்பாக்கம் பகுதியில் மக்களுக்கு அதிகளவு புற்றுநோய் ஏற்படுகிறது.
- வெளிநாட்டினர் மாமல்லபுரத்தில் மீன் சாப்பிட மாட்டார்கள்.
கடலூர்:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் பொய் பிரசாரம் செய்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலமாக குஜராத் உள்ளது.
அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்க போதைப் பொருள் பரவலுக்கு காரணம் பா.ஜனதாதான்.
அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா வழக்கில் பலரும் சிக்கினர். யார், யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்பது பத்திரிகைகளில் வந்தன.
கட்சியை சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக செயல்பட்டார் என கேள்விபட்டவுடன், அடுத்த 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி செய்தாரா?
கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாதபோதே புரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆலையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், முதலமைச்சர் நாகரீகமாக பங்கேற்கவில்லை.
கல்பாக்கம் பகுதியில் மக்களுக்கு அதிகளவு புற்றுநோய் ஏற்படுகிறது. வெளிநாட்டினர் மாமல்லபுரத்தில் மீன் சாப்பிட மாட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றத்திற்கு சென்று எப்படி தடுத்து நிறுத்தினோமோ அதேபோல், இந்த ஆலையையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.
- மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைவதற்கு தமிழ்நாடு போலீஸ்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப்பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 1,914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தம்பெட்டமைன், 700 டேபண்ட்டால் 100 எம்.ஜி. மாத்திரைகள், 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2 ஆயிரத்து 20 டைடால் மாத்திரைகள் என ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், 21 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 6 கார்கள் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்க பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண்-10581, 94984 10581 என்ற 'வாட்ஸ் அப்' எண் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குடும்ப அரசியல் செய்பவர்கள், உழைப்பில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவர்கள்.
- எனக்கு வருங்கால சந்ததியினர் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியா கூட்டணியின் ஒரு முக்கியமான விஷயத்தில் இன்று உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்பபை வழங்கியுள்ளது.
காங்கிரஸ், திமுக, இந்தியா கூட்டணி, ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் மூழ்கி இருக்கும் கட்சிகள். இவர்களால் தான் இளைஞர்கள் இந்திய அரசியலில் இருந்து விலகி நிற்கிறார்கள்.
எனக்கு பிடித்த பணி இந்தியாவை தூய்மைப்படுத்துவது, என்ன கஷ்டங்கள் வந்தாலும் நான் நாட்டை தூய்மைப்படுத்துவேன்.
குடும்ப அரசியலுக்கு ஒரு குணம் உண்டு. இவர்கள் உழைப்பில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவர்கள்.
இதனால் பலரின் ஆசைகள், நிறைவேறாமல் போய்விட்டன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தாய், தந்தையரும் நான் கூறும் விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள கட்சியின் ஆதரவோடு போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனால் எனக்கு வருங்கால சந்ததியினர் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.
நீங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுப்போம். இது எனது உத்தரவாதம்.
வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு, வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடிப்படையாக இருக்கும். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் நீங்கள் எனக்கு ஆசிர்வாதம் தர வந்துள்ளீர்கள்.
இந்த பெருங்கூட்டம் பொய் செய்திகளை உருவாக்குபவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.
வந்தே மாதரம்..!
இவ்வாறு கூறி பிரதமர் மோடி கூட்டத்தை நிறைவு செய்தார்.
- குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன.
- ஆனால், நான் நாட்டு மக்களை நினைத்து அரசியல் செய்கிறேன்.
சென்னையில் நடைபெற்று வரும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டுள்ளது.
திமுக அரசின் மனக்குறை என்னவென்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக செல்வதே.
லட்சக்கணக்கான கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என திமுக வருந்துகிறது.
நீங்கள் கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும்.
குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன.
ஆனால், நான் நாட்டு மக்களை நினைத்து அரசியல் செய்கிறேன்.
ஒரு லட்சம் வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இன்று கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே உருவான ஈனுலை தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஈனுலை பணி செய்ய தொடங்கும்போது இந்தியா உலகின் 2வது நாடாக இருக்கும்.
இலக்கு பெரியதாக இருக்கும்போது, உழைப்பும் பெரியதாக இருக்க வேண்டும்.
பாரதம் தன்னுடைய மின் சக்தி தேவைகளுக்காக எவ்வளவு பெரிய பணியை செய்ய வேண்டியுள்ளது என தெரியுமா ?
தெலுங்கானாவில் 1,600 மெகாவாட் தெர்மல் பவர் பிளான்ட்டிற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கடந்த 50 நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் மின் சக்தி உற்பத்திக்கான பல ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன.
நான் இப்போது கூறும் விஷயத்தை கவனமுடன் கேளுங்கள். சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரஜனால் இயங்கும் படகு ஒன்றை தொடங்கி வைத்தேன்.
இந்தியாவில் உள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் தரும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். பிரதமரின் சூரிய வீடு திட்டம் உங்களுக்கானது, முழுவதும் இலவசமானது.
நீங்கள் உங்கள் வீட்டின் மேற்கூரையின் சோலார் தகடுகள் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
அதிகப்படியான மின்சாரத்தை நீங்கள் விற்கலாம். உங்களுக்கு லாபம்.
இந்த திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு திமுகவையும் தெரியும், காங்கிரசையும் தெரியும், இவர்களை போல் பலர் உள்ளனர்.
இவர்களின் குறிக்கோள் குடும்பம் முதலில், ஆனால் எனக்கோ நாடு முதலில்.
மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள், அவர்களுக்கு குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடுவதா ?
இந்த நாடு தான் எனவு குடும்பம், நாட்டு மக்கள் தான் எனது குடும்பம். நாட்டின் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர்.
"நாட்டு மக்கள் தான் எனது குடும்பம்"/"நாட்டின் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர்.
நான் தான் மோடியின் குடும்பம் என தொண்டர்கள் முழக்கம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் என்னுடைய சொந்தங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜகவிற்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது.
- திமுக அரசு, மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கு இடையூறாக இருக்கிறது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டம் இன்று மாலை தொடங்கியது.
இந்நிலையில், வணக்கம் சென்னை என கூறி தமிழில் உரையாற்ற பிரதமர் மோடி தொடங்கினார்.
அவர் பேசியதாவது:-
இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வர்த்தகம், பாரம்பிரயம் உள்ளிட்டவற்றில் ஒரு அழியா புள்ள சென்னை.
சமீப காலத்தில் தமிழகம் வரும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. பாஜகவிற்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது.
வளர்ச்சி அடைந்த பாரதத்தோடு, வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் மோடி இலக்காக கொண்டுள்ளேன். சென்னை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக அரசு, மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கு இடையூறாக இருக்கிறது.
இயற்கை பேரிடர் ஏற்பட்டபோது மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக விளம்பரம் மட்டுமே செய்தார்கள். நீங்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவில்லை.
மத்தியில் உள்ள பாஜக அரசு, உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறது. உங்களுக்காக பணியாற்றுகிறது. ரேசனில் இலவச அரிசி தருகிறது. இலவசமாக கொரோனா தடுப்பூசி தந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்பாக்கத்தில் 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டம் தொடங்கியது.
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றார்.
அங்கு, 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, பின்னர் சாலை மார்க்கமாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.
இந்நிலையில், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார்.
- பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது.
- அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், வரும் 6ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது.
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ள இயலும்.
- பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, 26-2-2024 அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன், கருணாநிதியின் இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் "கலைஞர் உலகம்" என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6-3-2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும். இதனை பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் நிலவறையில் கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம் 6-3-2024 புதன்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. - இணைய தளம் மூலம் அனுமதிச் சீட்டு பெற்றுப் பார்வையிடலாம்.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/pHjWqIheZz
— TN DIPR (@TNDIPRNEWS) March 4, 2024
- சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர்.
- பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து இலையூர் கண்டியான் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி கனகா. நேற்று இவரது 8 வயது மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் சிறுவனை கையைப் பிடித்து அழைத்து சென்றதாக தெரிகிறது.
இதை பார்த்த அந்த சிறுவனின் தாத்தா அவரிடம் இருந்து சிறுவனை மீட்டவாறு கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் வடமாநில தொழிலாளியை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயத்துடன் இருந்த அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதனை தொடர்ந்து அவரிடமும் குழந்தையின் பெற்றோரிடமும் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடன் 12 பேர் வந்ததாகவும் தெரிவித்தார்.
அவருக்கு அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
- நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
- கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம்:
சென்னை பெரம்பூரில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக்தேவ்கர் (வயது51). இவரது நண்பர் சஞ்சய் ஜெயின் (52). சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். இவரிடம் தீபக்தேவ்கர் வட்டிக்கு 10 கோடி பணம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு சஞ்சய் ஜெயினும், அவரது மனைவி ரக்சாவும் கமிஷனாக ரூ.1 கோடி கொடுத்தால் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். அதற்கு தீபக்தேவ்கர் தன்னிடம் பணம் இல்லை நகைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து தீபக்தேவ்கர் சஞ்சய் ஜெயின் மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொண்டபோது நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ளோம். எனவே அங்கு வந்து நகைகளை தருமாறு கூறியுள்ளனர்.
அதன் பேரில் நத்தம் வந்த தீபக்தேவ்கர் பஸ் நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 21-ம் தேதி கடையில் இருந்த 350 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
2 நாட்கள் கழித்து தீபக்தேவ்கர் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடைசிவரை கடன் வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தீபக்தேவ்கர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து நகைகளுடன் மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர்.
- சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.
முசிறி, துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே சீனிவாசன் என்பவரது வீடு அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விரைந்து சென்று சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா (27) கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.






