என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
- நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் ஈடுபடும் ராகு, கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜைகள் இந்த ஆண்டு தடை செய்யப்படவில்லை வழக்கம் போல் நடைபெறும்.
ராகு, கேது பூஜை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் என காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.
- உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது
கோவை:
தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் அன்று கலைஞர் மகளிரி உரிமை தொகை திட்டத்தை தொடங்கியது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையும் தற்போது வரவு வைக்கப்பட்டு விட்டது. இதனைதொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ வந்துள்ளது.
அந்த வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. இதுவரை 6 ஆயிரம் ரூபாய், உங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும்.
எந்தவித தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நான் உங்களுக்கு வழங்கி கொண்டிருப்பேன். இது உங்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது என்பது எனக்கு நன்கு தெரியும்.
அப்படி பயன்பட்டு வரும் இந்த தொகையிலும், சில தாய்மார்கள் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமித்து வைப்பதாக தெரிகிறது. இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.
எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அருமை தாய்மார்களே உங்களுக்கு உதவ, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்றுமே நான் இருப்பேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
- போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தில், குழிபிறை கிராமத்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு குழிப்பிறை கிராமத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
பேருந்தில் பயணித்துள்ள சக பயணிகள் முதியவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவரின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் அசைவு ஏற்படவில்லை. இதனால் பேருந்தின் டிரைவர் சந்திரசேகரனும், கண்டக்டர் சுந்தரும், மருத்துவமனை செல்ல முடிவு செய்து பேருந்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அருகில் இருந்த வெங்கமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் அவரை பரிசோதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது செந்துறையை சேர்ந்த தனசாமி என்பவரின் மகன் ஆரோக்கியராஜ் என்பதும், குழிப்பிறையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு, பேருந்தில் வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டதும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக தங்கம் விலை சவரன் ரூ.48 ஆயிரத்தை தாண்டியது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுஅதிகரித்து 78 ரூபாய்க்கு 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,200-க்கு விற்பனையாகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன்.
- இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது.
சென்னை:
மதுரையில் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மதுரை வந்த பிரதமர் மோடியை அரசு சார்பில் வரவேற்க சென்றேன்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன். இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது.
* பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவுபோல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர் என்று கூறினார்.
- தமிழகத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்போது 15 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.
- தேர்தல் பணியாளர்கள் தொடர்பான பட்டியல் இதுவரை பெறப்படவில்லை.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்போது 15 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். அதில், சென்னை மாநகராட்சியில் 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஆவடி, தாம்பரம், கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளுக்கு தலா 1 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
மேலும் கோவை சரகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனியும்; மதுரை சரகத்தில், மதுரை மற்றும் விருதுநகருக்கு 1 கம்பெனியும்; நெல்லை சரகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசிக்கு 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் 15 கம்பெனி துணை ராணுவத்தினரும் பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர்.
7-ந் தேதியன்று வரும் 10 கம்பெனி துணை ராணுவத்தினரில், காஞ்சிபுரம் சரகத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; வேலூர் சரகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; விழுப்புரம் சரகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; சேலம் சரகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி;
திருச்சி சரகத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனி; தஞ்சாவூர் சரகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனி;
மதுரை சரகத்தில் மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி; திண்டுக்கல் சரகத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி; ராமநாதபுரம் சரகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி துணை ராணுவத்தினர் பிரித்து அனுப்பப்படுவார்கள். தற்போது மிகவும் குறைவான அளவு துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர்.
தேர்தல் பணியாளர்கள் தொடர்பான பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. பட்டியல் பெறப்பட்டதும், அவர்களுக்கான பயிற்சி குறித்து முடிவெடுக்கப்படும். 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 5 பேர் என்ற அடிப்படையில் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அந்த வகையில், 3.32 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்களின் முதல்கட்ட சரிபார்த்தல் பணி முடிவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக, வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாகவும், பின்னர் வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து அவை மீண்டும் சரிபார்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வணிகம் மற்றும் குடியிருப்புகளில் முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
- இந்த பகுதியில் தொடர்ந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து, அவற்றை கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார் அகற்ற வேண்டும்.
மதுரை:
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கடந்த 2018-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி மலையின் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தது. பின்னர் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிப்பது, பக்தர்களுக்கு பேட்டரி கார் வசதி செய்வது, சுற்றுலா வாகனங்களுக்கு தனி இடவசதி செய்து தருவது என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், "கிரிவலப்பாதைகளில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் தற்போதுவரை அகற்றப்பட்டு உள்ளன. 134 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் வணிகம் மற்றும் குடியிருப்புகளில் முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "பழனி மலை கிரிவலப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொடைக்கானல் சாலை பகுதியில் இருந்து கிரிவலப்பாதைக்கு அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்," என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த பகுதியில் தொடர்ந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து, அவற்றை கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார் அகற்ற வேண்டும். கிரிவலப்பாதைகளில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்வது உள்ளிட்ட எந்தவித வணிக நோக்க நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை கோவில் இணை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சம்பந்தமான நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
- ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.
சென்னை:
முதலமைச்சரின் முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாதவாறு உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வகையில் 'நேரடி பயனாளர் பரிவர்த்தனை' முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்பணியை எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
அப்போதே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேர்விலும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நேரத்திலும், சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன. இந்நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைக்கும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறையினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தளத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
- கல்பாக்கம் பகுதியில் மக்களுக்கு அதிகளவு புற்றுநோய் ஏற்படுகிறது.
- வெளிநாட்டினர் மாமல்லபுரத்தில் மீன் சாப்பிட மாட்டார்கள்.
கடலூர்:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் பொய் பிரசாரம் செய்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலமாக குஜராத் உள்ளது.
அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்க போதைப் பொருள் பரவலுக்கு காரணம் பா.ஜனதாதான்.
அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா வழக்கில் பலரும் சிக்கினர். யார், யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்பது பத்திரிகைகளில் வந்தன.
கட்சியை சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக செயல்பட்டார் என கேள்விபட்டவுடன், அடுத்த 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி செய்தாரா?
கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாதபோதே புரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆலையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், முதலமைச்சர் நாகரீகமாக பங்கேற்கவில்லை.
கல்பாக்கம் பகுதியில் மக்களுக்கு அதிகளவு புற்றுநோய் ஏற்படுகிறது. வெளிநாட்டினர் மாமல்லபுரத்தில் மீன் சாப்பிட மாட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றத்திற்கு சென்று எப்படி தடுத்து நிறுத்தினோமோ அதேபோல், இந்த ஆலையையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.
- மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைவதற்கு தமிழ்நாடு போலீஸ்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப்பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 1,914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தம்பெட்டமைன், 700 டேபண்ட்டால் 100 எம்.ஜி. மாத்திரைகள், 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2 ஆயிரத்து 20 டைடால் மாத்திரைகள் என ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், 21 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 6 கார்கள் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரையில் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றவாளிகள் பல்வேறு கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சட்ட அமலாக்கம் தவிர, மாணவர்கள் இடையே போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 73 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்க பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண்-10581, 94984 10581 என்ற 'வாட்ஸ் அப்' எண் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குடும்ப அரசியல் செய்பவர்கள், உழைப்பில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவர்கள்.
- எனக்கு வருங்கால சந்ததியினர் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியா கூட்டணியின் ஒரு முக்கியமான விஷயத்தில் இன்று உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்பபை வழங்கியுள்ளது.
காங்கிரஸ், திமுக, இந்தியா கூட்டணி, ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் மூழ்கி இருக்கும் கட்சிகள். இவர்களால் தான் இளைஞர்கள் இந்திய அரசியலில் இருந்து விலகி நிற்கிறார்கள்.
எனக்கு பிடித்த பணி இந்தியாவை தூய்மைப்படுத்துவது, என்ன கஷ்டங்கள் வந்தாலும் நான் நாட்டை தூய்மைப்படுத்துவேன்.
குடும்ப அரசியலுக்கு ஒரு குணம் உண்டு. இவர்கள் உழைப்பில் இருந்து வெகு தூரத்தில் இருப்பவர்கள்.
இதனால் பலரின் ஆசைகள், நிறைவேறாமல் போய்விட்டன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தாய், தந்தையரும் நான் கூறும் விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள கட்சியின் ஆதரவோடு போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனால் எனக்கு வருங்கால சந்ததியினர் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.
நீங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுப்போம். இது எனது உத்தரவாதம்.
வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு, வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடிப்படையாக இருக்கும். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் நீங்கள் எனக்கு ஆசிர்வாதம் தர வந்துள்ளீர்கள்.
இந்த பெருங்கூட்டம் பொய் செய்திகளை உருவாக்குபவர்களின் தூக்கத்தை கெடுக்கும்.
வந்தே மாதரம்..!
இவ்வாறு கூறி பிரதமர் மோடி கூட்டத்தை நிறைவு செய்தார்.
- குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன.
- ஆனால், நான் நாட்டு மக்களை நினைத்து அரசியல் செய்கிறேன்.
சென்னையில் நடைபெற்று வரும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டுள்ளது.
திமுக அரசின் மனக்குறை என்னவென்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக செல்வதே.
லட்சக்கணக்கான கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என திமுக வருந்துகிறது.
நீங்கள் கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும்.
குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன.
ஆனால், நான் நாட்டு மக்களை நினைத்து அரசியல் செய்கிறேன்.
ஒரு லட்சம் வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இன்று கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே உருவான ஈனுலை தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஈனுலை பணி செய்ய தொடங்கும்போது இந்தியா உலகின் 2வது நாடாக இருக்கும்.
இலக்கு பெரியதாக இருக்கும்போது, உழைப்பும் பெரியதாக இருக்க வேண்டும்.
பாரதம் தன்னுடைய மின் சக்தி தேவைகளுக்காக எவ்வளவு பெரிய பணியை செய்ய வேண்டியுள்ளது என தெரியுமா ?
தெலுங்கானாவில் 1,600 மெகாவாட் தெர்மல் பவர் பிளான்ட்டிற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கடந்த 50 நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் மின் சக்தி உற்பத்திக்கான பல ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன.
நான் இப்போது கூறும் விஷயத்தை கவனமுடன் கேளுங்கள். சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரஜனால் இயங்கும் படகு ஒன்றை தொடங்கி வைத்தேன்.
இந்தியாவில் உள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் தரும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். பிரதமரின் சூரிய வீடு திட்டம் உங்களுக்கானது, முழுவதும் இலவசமானது.
நீங்கள் உங்கள் வீட்டின் மேற்கூரையின் சோலார் தகடுகள் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
அதிகப்படியான மின்சாரத்தை நீங்கள் விற்கலாம். உங்களுக்கு லாபம்.
இந்த திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு திமுகவையும் தெரியும், காங்கிரசையும் தெரியும், இவர்களை போல் பலர் உள்ளனர்.
இவர்களின் குறிக்கோள் குடும்பம் முதலில், ஆனால் எனக்கோ நாடு முதலில்.
மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள், அவர்களுக்கு குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடுவதா ?
இந்த நாடு தான் எனவு குடும்பம், நாட்டு மக்கள் தான் எனது குடும்பம். நாட்டின் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர்.
"நாட்டு மக்கள் தான் எனது குடும்பம்"/"நாட்டின் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர்.
நான் தான் மோடியின் குடும்பம் என தொண்டர்கள் முழக்கம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் என்னுடைய சொந்தங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






