என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
- தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
சென்னை:
கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.
அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.
கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.
மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.
இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.
- கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
- ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது.
சென்னை:
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்கள் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.
2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 65 சதவீதம் உயர்மட்ட பாதையாகவும் மீத முள்ளவை சுரங்கப் பாதையாகவும் அமைகிறது.

திருமயிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பணி தொடங்கியது.
பிளமிங்கோ என்ற சுரங்கம் தோண்டும் எந்திரமும் ஈகிள் என்ற 2-வது எந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த இரண்டு எந்திரங்க ளும் மெரினா கடற்கரை காந்திசிலை அருகே உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, திருமயிலை மெட்ரோ வரை கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் ஒரு மாதத்தில் கலங்கரை விளக்கத்தை வந்தடையும். வருகிற 20-ந் தேதி பிளமிங்கோ எந்திரமும், ஏப்ரல் 20-ந் தேதி ஈகிள் இரண்டாவது எந்திரமும் அதே இடத்தை அடையும்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளமிங்கோ எந்திரம் 134 மீட்டர் நீள சுரங்கப்பாதையை முடித்து தற்போது மெரினா கடற்கரையில் உள்ள வீரமா முனிவர் சிலைக்கு அருகில் உள்ளது.
அதே நேரத்தில் ஈகிள் எந்திரம் 71 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை முடித்துள்ளது. 19-ந் தேதி முக்கியமான பணிகள் தொடங்கப்படும்.
கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் அடித்தள அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.

திருமயிலையில் சில கடைகளை அகற்றுவதில் சிரமமாக உள்ளது. அதனால் தண்டவாளத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என்றார்.
இது பற்றி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், திருமயிலை மெட்ரோ 3 மற்றும் 4 வழித்தடங்களின் பரிமாற்றமாக இருக்கும். மேலும் அருகில் உள்ள சில ரெயில் நிலையங்கள் 2028-ம் ஆண்டில் கடைசி இரண்டு நிலையங்களாக திறக்கப்படும்.
ஏனென்றால் இந்த ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது. ஆனாலும் நடைபாதை 4-ல் தொடரும் கலங்கரை விளக்க மெட்ரோ, திருமயிலை மெட்ரோ இயக்கப்படுவதற்கு முன்பு திறக்கப்படும்.
கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் தயாரானாலும் போரூர், பூந்தமல்லி வரை வசிக்கும் மக்கள் எளிதாக மெட்ரோ ரெயிலில் மெரினா கடற்கரையை அடையலாம் என்றார்.
- அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.
- உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.
சென்னை:
அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசாமி அருளிய 'சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் எழுதிய அந்த புத்தகத்தை வெளியிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அவர் கூறுகையில்,
அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார். அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்து வந்தார். அப்போதிருந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை கொண்டுவர முயற்சித்தார்.
சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார். ஐரோப்பாவை கிறிஸ்தவம் அடையும் முன்பே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. 1600-ம் ஆண்டுகளில் கிழக்கு இந்திய கம்பெனி இங்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஆட்சியை ஏற்படுத்தியதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அறிந்தனர். அதனால் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டனர் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.
* ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் கவர்னர் பேசி உள்ளது வருந்தத்தக்கது.
* அய்யா வைகுண்டர் குறித்து கவர்னர் புரிந்து பேச வேண்டும்.
* உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.
* அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம்.
* கவர்னர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார் என்று கூறி உள்ளார்.
- வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.
- ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. செங்கவள நாட்டார்களால் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் லாவகமாக மடக்கி பிடித்தனர்.
ஜல்லிக்கட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதை தொடர்ந்து உள்ளூர் காளைகளும் பின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில
காளைகள் களத்தில் நின்று கெத்து காட்டியதோடு, அருகில் வந்த காளையர்களை பந்தாடியது.
பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அடக்கினர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, கிரைண்டர், டைனிங்டேபிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. பவுல்ராஜ் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
- திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி வரவேற்று பேசினார்.
- கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முதலமைசசர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளரும் நகர்மன்ற துணை தலைவருமான செங்குழி ரமேஷ் தலைமை தாங்கினார். உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், ஆழ்வை மத்திய பகுதி செயலாளர் நவின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. அமைப்பு துணை செயலாளர் தாயகம் கவி, சண்முகய்யா எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் தந்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்தி உள்ளார்.
அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ரூ1,000, குடிசை வீடுகள் இல்லாத தமிழகம் என்ற அடிப்படையில் வீடு இல்லாதவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.
இந்த அரசு சிறுபான்மை மக்கள் நலன் காக்கும் அரசாக உள்ளது. கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை. மழை வெள்ளம் காலங்களில் அவர் சிறப்பாக பணியாற்றினார். கலைஞரின் மறு உருவமாக கனிமொழி எம்.பி மீண்டும் இந்த தொகுதியில் எம்.பி.ஆக நிற்கிறார். இந்தியா கூட்டணி வெற்றி பெறப்போகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி தான் வரப்போகிறது.
தொழிலாளர் அனைவரையும் காக்கும் ஒரு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார். நிச்சயமாக பா.ஜ.க.வை வீழ்த்தி காட்டுவார் மு.க.ஸ்டாலின். அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வருவார்.
தற்போது அ.தி.மு.க. காணாமல் போய்விட்டது. இந்த தேர்தலோடு அதுவும் முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.
- சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று அங்கு ஒரு மர பர்னிச்சர் கம்பெனியில் பணிபுரிந்தார்.
அங்கு 14 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அந்த கம்பெனிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுத்து, அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
இதனால் இனி சொந்த ஊரில் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி உடனே சண்முகராஜனை தொடர்பு கொண்டு நீங்கள் தொடங்கி உள்ள பர்னிச்சர் ஷோரூமை பார்க்க இந்தியாவுக்கு வருவதாக கூறினார்.
இதையடுத்து அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் கார் மூலம் ஆயக்காரன்புலம் வந்தனர். அவர்களை வித்தியாசமான முறையில் அழைத்து செல்ல சண்முகராஜன் முடிவு செய்தார்.
அதன்படி சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி, ஊர்வலமாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரை குதிரை சாரட்டு வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பர்னிச்சர் ஷோரூமுக்கு அழைத்து சென்றார். அங்கு அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து பூக்கள் தூவி வரவேற்றனர்.
பின்னர் சண்முகராஜன் தொடங்கியுள்ள மர பர்னிச்சர் ஷோரூமை பார்வையிட்டு அவரை கட்டி தழுவி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது கோலிஞ்சி கூறும்போது, என்னிடம் வேலை சண்முகராஜன் மர பர்னிச்சர் ஷோரூமை சிறப்பாக நடத்தி தொழிலதிபராக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
சிங்கப்பூரிலிருந்து உரிமையாளர், தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் ஷோரூமை பார்க்க வந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
- பிரதமருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்து பேசிய விஷயம் அதன் பிறகுதான் வெளியே தெரிய வந்தது.
சென்னை:
பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி தமிழ்நாடு வந்த போது பல்லடம் பொதுக் கூட்டத்திற்கு பிறகு மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார்.
அதன் பிறகு இரவு 8 மணிக்கு பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு மதுரையில் ஓட்டலில் தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடிக்கு சென்றார்.
இந்நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரை வீர பாஞ்சான் பள்ளி ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்று சால்வை அணிவித்தார்.
இந்த நிலையில் அன்றைய தினம் பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அமைச்சர் பழனிவேல் பழனிவேல் தியாகராஜன் அங்கே சென்றும் பிரதமர் மோடியை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லியில் இருந்து சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி ஓட்டலில் இருந்து பிரதமர் புறப்பட்டபோது, முதல் நபராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதமரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது. இருவரும் என்ன பேசிக் கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை. அதன் பிறகு மதுரை விமான நிலையத்திற்கு சென்றும் பிரதமரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழியனுப்பி வைத்தார்.
பிரதமருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்து பேசிய விஷயம் அதன் பிறகுதான் வெளியே தெரிய வந்தது.
இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
மதுரை வந்த பிரதமர் மோடியை நான் 4 முறை சந்தித்தேன். அவரை வர வேற்பதற்காக தமிழக அரசு எனக்கு 2 முறை புரோட்ட கால் கொடுத்தது. முதலில் அனுப்பப்பட்ட புரோட்ட காலில் பிப்.27-ல் ஓட்ட லுக்கு சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. பிப்ரவரி 27 இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பு எனக்கு வந்தது உண்மை தான். அப்போது மாநில அரசின் வழி காட்டுதலையே நான் பின்பற்றினேன்.
பிரதமர் அலுவலகம் எனக்கு சிறப்பு அழைப்பு விடுத்ததை நான் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதில்லை. அதன் நகல் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சென்று விடும்.
பிரதமர் பயணத்தில் மாநில அரசின் புரோட்ட கால்படி துணை செயலாளர் ஒருவரும் இருப்பார்.
அவரும் எனக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு குறித்து தகவல் தெரிவித்தார். பிரதமரிடம் என்ன பேசினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது. ஆனால் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை தேங்க்யூ பாய்.. தேங்யூ பாய் என்று தட்டிக் கொடுத்தார்.
பிரதமரை சந்தித்த போட்டோவை எங்கும் நான் வெளியிடவில்லை. ஆனால் பா.ஜ.க.வினர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விவகாரத்தை கிளப்பி விட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
- போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ளனர்.
சென்னை:
டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும் அரசியல் பிரமுகருமான ஜாபர் சாதிக் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
- நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் ஈடுபடும் ராகு, கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜைகள் இந்த ஆண்டு தடை செய்யப்படவில்லை வழக்கம் போல் நடைபெறும்.
ராகு, கேது பூஜை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் என காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.
- உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது
கோவை:
தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் அன்று கலைஞர் மகளிரி உரிமை தொகை திட்டத்தை தொடங்கியது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையும் தற்போது வரவு வைக்கப்பட்டு விட்டது. இதனைதொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ வந்துள்ளது.
அந்த வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. இதுவரை 6 ஆயிரம் ரூபாய், உங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும்.
எந்தவித தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நான் உங்களுக்கு வழங்கி கொண்டிருப்பேன். இது உங்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது என்பது எனக்கு நன்கு தெரியும்.
அப்படி பயன்பட்டு வரும் இந்த தொகையிலும், சில தாய்மார்கள் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமித்து வைப்பதாக தெரிகிறது. இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.
எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அருமை தாய்மார்களே உங்களுக்கு உதவ, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்றுமே நான் இருப்பேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
- போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தில், குழிபிறை கிராமத்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு குழிப்பிறை கிராமத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
பேருந்தில் பயணித்துள்ள சக பயணிகள் முதியவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவரின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் அசைவு ஏற்படவில்லை. இதனால் பேருந்தின் டிரைவர் சந்திரசேகரனும், கண்டக்டர் சுந்தரும், மருத்துவமனை செல்ல முடிவு செய்து பேருந்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அருகில் இருந்த வெங்கமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் அவரை பரிசோதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது செந்துறையை சேர்ந்த தனசாமி என்பவரின் மகன் ஆரோக்கியராஜ் என்பதும், குழிப்பிறையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு, பேருந்தில் வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டதும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக தங்கம் விலை சவரன் ரூ.48 ஆயிரத்தை தாண்டியது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுஅதிகரித்து 78 ரூபாய்க்கு 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,200-க்கு விற்பனையாகிறது.






