search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வறட்டு இருமல், தொண்டை வலியுடன் வைரஸ் காய்ச்சல் பரவல்- தண்ணீரை காய்ச்சி குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்
    X

    வறட்டு இருமல், தொண்டை வலியுடன் 'வைரஸ்' காய்ச்சல் பரவல்- தண்ணீரை காய்ச்சி குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

    • அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

    மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.

    Next Story
    ×