என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
    • பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கிராமம் கிராமமாக கூட்டணி கட்சியினருடன் சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். கீழக்கரை, ஏர்வாடி இதம்பாடல், சிக்கல், மாரியூர், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் மற்றும் தரைக்குடி, சேதுராஜபுரம் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.


    வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி.உதயகுமார், அன்வர்ராஜா, மணிகண்டன். தேர்தல் பொறுளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி. நிறைகுளத்தான், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் மு.சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முனியசாமி பாண்டியன் தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா, ஒன்றிய செயலாளர்கள் பிரவீன் குமார் ராஜேந்திரன், அந்தோனிராஜ், உள்பட அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சென்ற இடமெல்லாம் இரட்டை இலைக்கு அதிக மவுசு உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் சுயேட்சைகள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார். சாயல்குடி பகுதியில் அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி வீடு, வீடாக சென்று பா. ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    • காலடி தடம், சிறுநீர் கழித்த அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பாதை கணக்கிடப்பட்டு, கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சிறுத்தை தற்போது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் நடமாடுவதாக தெரிய வந்துள்ளது.

    பெரம்பலூர்:

    மயிலாடுதுறை மாவட்டத்தின் சில கிராமங்களில், சிறுத்தை நடமாட்டம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து சிறப்பு குழு அமைத்து, சிறுத்தையை தேடும்பணி நடந்தது. இதனிடையே சிறுத்தை, அரியலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்கள் வழியாகச் சென்றது உறுதியானது. இதையடுத்து, சிறுத்தையின் காலடி தடங்கள், எச்சங்கள் அடிப்படையில் அதன் பாதையை வனத்துறையினர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சிறுத்தை குறித்த தகவல் தெரிந்தால் வாட்ஸ்அப்பில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வாரணவாசி அருகேயுள்ள சமத்துவபுரம் சாய் பாபா ஆலயத்தின் அருகே இரட்டை சிறுத்தை இருப்பதாக தகவல் பரவியது. அதை மறுத்துள்ள வனத்துறை, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேண்டுமென்றே தகவல் பரப்பப்பட்டள்ளதாக கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதில், தவறான செய்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு, 10 கி.மீ., வரை சிறுத்தை இடம் பெயர்வதாக தெரியவந்துள்ளது. இந்த அடிப்படையில், அதன் நகர்வு தொலைவு மற்றும் திசை கணக்கிடப்பட்டு வருகிறது.

    காலடி தடம், சிறுநீர் கழித்த அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பாதை கணக்கிடப்பட்டு, கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை தற்போது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் நடமாடுவதாக தெரிய வந்துள்ளது.

    இதனால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக கண்கணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தையை கண்காணித்து பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெரம்பலூரில் ஏற்கனவே, 2013-ம் ஆண்டில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. பின்னர் அந்த சிறுத்தை பிடிக்கப்பட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது.

    • தமிழ்நாட்டி பெற்ற ஊழல் பணத்தை எல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்தார்கள். பேங்க் திறந்து இருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலைமை.
    • திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்து வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு ஆகிய அனைத்தையும் உயர்த்தி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தர் பேருந்து நிலையம், அரணாரை, சங்கு பேட்டை, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம், ராஜா திரையரங்கம், வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். சிறுகனூரில் மேம்பாலம், தரைப்பாலம், ரேஷன் கடை போன்றவற்றை அமைத்து கொடுத்திருக்கிறேன்.

    இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 108 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மோடி தலைமையிலான 70 மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு 10 ஆண்டுகள் முதலமைச்சாராக இருந்தார். குஜராத்தில் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வசதி செய்து தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.

    வருகிற வெள்ளிகிழமை யாருக்கு வாக்களிப்பது என்று குழப்பத்தில் இருப்பீர்கள். 50 ஆண்டுகலமாக தமிழ்நாட்டை ஆளவிட்டீர்கள், உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டுக் கொண்டே இருந்தீர்கள். அவர்களும் வாழ்ந்தார்கள் உயர்ந்தார்கள். குடும்பம் வாழ்ந்தது சொத்து சேர்த்தார்கள். தமிழ்நாட்டி பெற்ற ஊழல் பணத்தை எல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்தார்கள். பேங்க் திறந்து இருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் நிலைமை.

    இங்கு உள்ள ஏழைகள், விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து இன்றைக்கு வரி கட்டுகிறார்கள். டாடா, பிர்லா மட்டும் வரி கட்டவில்லை. ஏழைகளான மக்களும் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். பாவப்பட்ட மக்கள் அளிக்கும் இந்த வரி பணத்தை திராவிட முன்னேற்றகழக அரசும், முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்களும் ஊழல் செய்து கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். 50 ஆண்டுகள் இந்த திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்து வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டணம், பத்திர பதிவு ஆகிய அனைத்தையும் உயர்த்தி உள்ளனர்.

    ஆகவே மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை ஆகவே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

    • நகைக்கடைக்குள் காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர்.
    • மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

    திருவள்ளூர்:

    ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் கடைக்குள் இருந்த பிரகாஷை மிரட்டி, அவரது கை, கால்களை கட்டி போட்டனர்.

    இதையடுத்து துப்பாக்கிமுனையில் அவரை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆத்திக்குளம், சர்வேயர் காலனி, நாராயணபுரம். பேங்க் காலணி, அய்யர் பங்களா, திருப்பாலை, மேனேந்தல், நாகனாங்குளம் ஆகிய இடங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது டாக்டர் சரவணனுக்கும், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் பேசுகையில், தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து விலை வாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு விரல் புரட்சி செய்து அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும். மதுரை மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன் என பேசினார்.

    பின்னர் ராஜன் செல்லாப்பா எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பா.ஜ.க. எண்ணியதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க.வோடு தொடர்ந்து கூட்டணி வைத்திருந்தால் அ.தி.மு.க.வை அழித்து இருப்பார்பார். அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது நூற்றுக்கு நூறு சரியானது என மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

    • 21-ந்தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
    • 22-ந்தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது.

    மதுரை:

    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின் 12 மாதங்களும் மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனைத்தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும்.

    மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (12-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந்தேதி) விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப்போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்.

    மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டும்போது பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. 21-ந்தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    22-ந்தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது.

    இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி ஏப்.23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்.23-ந்தேதிக்கு பதிலாக மே 11-ந்தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

    • தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
    • இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.

    உதகை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.

    • தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    மீனவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க இழைத்த இந்த அநீதியை மீனவ சமுதாயத்தினர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்படும் என மீனவர்கள் நம்புகின்றனர்.

    தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் மனதில் நிலவுகிறது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக வருவது அவசியம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

    பிரதமர் மோடியை 29 பைசா என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதை விட மிக மோசமான அரசியல் வேறு எதுவும் இருக்காது என மக்கள் நினைக்கின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில் நேரு காலத்திலிருந்து கோட்பாடு இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி, நீளம், அகலம், மாவட்டங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கோட்பாட்டை யாராலும் மீற முடியாது. இதைப் பிரித்துப் பார்ப்பது திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது.

    காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மனித நேயமற்ற இச்செயலுக்குக் கூட்டணி என்பதால் திமுக கண்டிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வருத்தத்தை அளிக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன. இதை விவசாயிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழுக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது பெருமை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
    • 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் GST: வரி அல்ல… வழிப்பறி! என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்" என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், "ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்'' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார்.

    பேச நா இரண்டுடையாய் போற்றி!

    ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?

    ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டி-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

    அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?

    1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

    ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.

    ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது.
    • அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார்‌.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் வந்து கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி ஆறுதல் கூறினர்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருப்பது புதிதாக (டெஸ்ட்) சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது.

    இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்த போது எட்டி பார்க்காத பிரதமர் எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

    நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) மீண்டும் காஞ்சிபுரம் வந்து அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

    திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்ன அந்த பொன்மொழியை அ.தி.மு.க. தொடர்ந்து கடைபிடித்து அதை நிறைவேற்றுவதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

    இன்று ஸ்டாலின் போற பக்கமெல்லாம் பேசுகிறார். அ.தி.மு.க. 3 ஆக போய் விட்டது 4 ஆக போய் விட்டது என்கிறார். மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு வந்து பார்க்கட்டும் அண்ணா பிறந்த மண், அண்ணா கண்ட கனவை நினைவாக்கும் கட்சி அ.தி.மு.க. காஞ்சிபுரமே குலுங்குகிற அளவுக்கு இன்று மக்கள் வெள்ளம். அ.தி.மு.க.வை பிரிக்க பார்க்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது. உங்களது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

    அண்ணா கண்ட கனவை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவோம். அது எங்களது இரு பெரும் தலைவர்களுடைய கொள்கை, லட்சியம். அதை நிறைவேற்றுவது தான் எங்களை போல் உள்ள தொண்டனுக்கு பெருமை.

    இந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள், நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம். உழைப்பாளர்கள் நிறைந்த இந்த பூமியிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    விவசாயம், நெசவுத்தொழில் இரண்டு தொழிலும் பிரதான தொழிலாக உள்ள காஞ்சி மாவட்டம் மென்மேலும் வளருவதற்கு நம்முடைய வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் வெற்றி பெற வேண்டும்.

    இன்றைக்கு எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதிலே அ.தி.மு.க.தான் முன்னிலையில் இருக்கும். இந்த மண்ணிலே எத்தனையோ தலைவர்கள் பிறக்கின்றார்கள். வாழ்கிறார்கள். இறக்கின்றார்கள்.

    இடைப்பட்ட காலத்திலே மக்களுக்கு நன்மை செய்கின்ற தலைவர்கள்தான் மக்கள் உள்ளத்திலே வாழ்வார்கள். அப்படி நமது முப்பெரும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா இந்த மண்ணிலே மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். இன்னும் சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிற தலைவர்கள். யார் என்று உங்களுக்கு தெரியும்.

    இன்றைக்கு இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று சொல்கிறார்கள். அது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. எனவே அ.தி.மு.க. ஆட்சி தான் இதற்கு காரணம்.

    ஏரிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் மணிமங்கலத்தில் நான் குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தேன். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறையில் இருக்கிறது. அதில் சுமார் 6,211 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து திட்டத்தில் கொண்டு வந்து முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு திட்டத்தை நிறைவேற்றினோம். இதற்கு மட்டும் சுமார் ரூ.1,240 கோடி நிதி ஒதுக்கினோம்.

    இந்த குடிமராமத்து திட்டம் மூலமாக ஏரிகள் ஆழமாக்கப்பட்டது. மழை நீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

    இந்த அற்புதமான திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

    இங்கு 40 வருடத்திற்கு ஒருமுறை அத்திவரதர் மக்களுக்கு அருள் புரிந்தார். அ.தி.மு.க. ஆட்சியில்தான் அத்திவரதர் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளித்தார். அந்த விழாவில் 60 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த காஞ்சிபுரம் நகரமே சிறப்பு பெற்றது.

    அப்படி அத்திவரதரை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் வந்து குழுமி பத்திரமாக வீடு திரும்பினாார்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சி நிர்வாக திறமை பிரதிபலித்தது.

    இந்த பகுதியில் கைத்தறி, விசைத்தறி இரண்டு தொழிலும் நலிவடைந்துள்ளது. இந்த தொழிலை நம்பிதான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. கைத்தறி நெசவு படிப்படியாக சரிந்து விட்டது. விசைத்தறி அதோடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும். நமது வெற்றி வேட்பாளர் ராஜசேகர் வெற்றி பெற்று இந்த தொழில் சிறக்க பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பார்.

    பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களை பாதுகாத்தோம். கைத்தறி நெசவு தொழில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்டது.

    காஞ்சி என்று சொன்னாலே பட்டுதான் நினைவுக்கு வரும். பட்டு விற்பனைக்கு பெயர் பெற்ற நகரம் பட்டு நெசவு இங்குதான் அதிகமாக உள்ளது.

    இந்த தொழில்கள் சிறக்க வேண்டும் என்றால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்திய-மாநில அரசுகள் இந்த மக்களுக்கு தேவையான திட்டங்களை எதுவும் இதுவரை செய்யவில்லை.

    இன்று கடுமையான மின் கட்டண உயர்வு உள்ளது. வீடுகளுக்கு பயன்படுத்துகிற மின் கட்டணம் உயர்ந்து விட்டது. விசைத்தறி மற்றும் கடைகளுக்கு பயன்படுத்துகிற கட்டணம் 'பீக் ஹவர்' என்று கூறி அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.

    மின் கட்டண உயர்வினால் கடுமையாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி பாதிக்கப்பட்டு விட்டது. கடைகளுக்கு அதிக வரி போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு வந்தாலே மின் கட்டணம் உயர்ந்து விடும். இது கோடை காலம். அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் தடையில்லா மின்சாரத்தை தந்தோம். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டில் விலைவாசி உயர்வு அதிகமாகி விட்டது. இன்று 1 கிலோ அரிசி 18 ரூபாய் உயர்ந்து விட்டது. எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, பருப்பு, சர்க்கரை விலை உயர்ந்து விட்டது. மளிகை பொருட்கள் விலை அனைத்தும் 40 சதவீதம் உயர்ந்து விட்டது. வேலையில்லை. வருமானம் இல்லை. செலவு அதிகம். மக்கள் இன்றைக்கு படாதபாடுபடுகிறார்கள்.

    இப்படிப்பட்ட அவல நிலைதான் தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் பேசும்போது என்ன சொல்கிறார், தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்கிற ஆட்சி என்று சொல்கிறார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய அரசு மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க. அரசை பார்க்கிறார்கள்.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சி புரிகிறதோ அப்போதெல்லாம் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சி மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது. மக்கள் படும் துன்பத்தை அவர்கள் பார்ப்பதில்லை. ஆகவே ஏழை மக்களுக்கு உதவி செய்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. அரசுதான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    • பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    கடலூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில வினாடிகள் லேசான தூறல் மழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது அதிகபட்சமாக 97 டிகிரி வெயில் பதிவாகி வரும் நிலையில், கணிசமாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரி யவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் ஷால் மற்றும் புடவைகளை போர்த்திய படி செல்கின்றனர்.நேற்று முதல் சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதோடு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு வெளியில் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

    ×