என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் நீட்டிப்பு.
- புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பறக்கும் படையினர் அங்கு சோதனை செய்தபோது 20 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் சுந்தரி தலைமையிலான பறக்கும் படையினர் நெல்லை சட்டமன்ற தொகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை தச்சநல்லூரில் இருந்து டவுன் செல்லும் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையோரம் தேனீர்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை கவனித்தனர். இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் விரைந்து சென்றனர்.
இதை பார்த்த சிலர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சோதனை செய்தபோது 20 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
- வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர்.
- சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து வேங்கைவயல், இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது.
இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் வேதனையில் இருந்து வரும் நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்தின் முகப்பில் இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு நீதி கிடைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு என்று தெரிவித்துள்ளனர்.
- 2 பேரின் உடலையும் போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாசானம். இவரது மகன் சுடலைமணி (வயது 27).
இவரும், பாளை சக்தி நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் மகாராஜன் (24), அதே பகுதியை சேர்ந்த அருண் (21) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.
இவர்கள் இன்று காலை பாளை-திருச்செந்தூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள தனியார் பள்ளியின் எதிரே தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு கிணறு அமைந்துள்ள பகுதியின் நுழைவாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததால் 3 பேரும் சுவர் ஏறி குதித்து குளிக்க சென்றுள்ளனர்.
இதில் மகாராஜனுக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மகாராஜன் தண்ணீரில் மூழ்கினார்.
உடனே அவரை காப்பாற்றுவதற்காக சுடலை மணி போராடியுள்ளார். ஆனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதைப்பார்த்த அருண் உடனடியாக பாளை போலீஸ் நிலையத்திற்கு ஓடி சென்று தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பாளை போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் மூழ்கிய சுடலைமணி, மகாராஜன் ஆகிய 2 பேரையும் தேடிய நிலையில் சுடலை மணி முதலில் பிணமாக மீட்கப்பட்டார்.
சிறிது நேரத்தில் மகாராஜனும் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர்கள் 2 பேரின் உடலையும் போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
- சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
நாகர்கோவில்:
மது உள்ளிட்ட போதைப் பொருட்களால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதனால் போதை பழக்கத்தை ஒழிக்க அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் போதை பழக்கமும் அதனால் பல பிரச்சனைகளும் தினமும் தொடர்ந்தே வருகின்றன.
இந்த நிலையில் சினிமாவில் போதைக் கும்பல், யாரிடமாவது வம்பிழுத்து விரட்டி விரட்டி தாக்குவது போன்ற ஒரு காட்சி, சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஒரு வாலிபரை, ஒரு கும்பல் மாறி மாறி தாக்குவதும் அந்த வாலிபர் கீழே விழுந்த நிலையிலும், அவரை தாக்கி சட்டையை கிழிப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளன.
மது போதை தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. அதுவும் போலீஸ் நடமாட்டம் அதிகம் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு வட்டக்கரை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்துள்ளது. வட்டக்கரை வாலிபர் மது வாங்கி விட்டு புறப்பட்ட போது, அந்தக் கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் இது மோதலாக மாறியது. மது அருந்திக் கொண்டிருந்த கும்பல், வட்டக்கரை வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது. அந்த வாலிபர் சாலையில் கீழே விழுந்தபோதும், கும்பல் விடாமல் தாக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் அவரது சட்டை கிழிந்தது. இருப்பினும் விடாமல் கும்பல் தாக்கியது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்களில் சென்ற பலரும் இதனை கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது இது போன்ற தாக்குதல் இந்தப் பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் போதைக்கு அடிமையான கும்பல் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் தெரிவித்தனர். சம்பத்தன்று நடந்த தாக்குதல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மோதல் சம்பவம் குறித்த வீடியோ வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பது யார்? என்பது அதை விட பரபரப்பாக உள்ளது. சம்பவம் நடந்த பகுதி நேசமணி நகர் போலீசுக்கு உட்பட்டதா? கோட்டார் போலீசுக்கு உட்பட்டதா? என்பதில் ஒரு உடன்பாடு வராததால் வழக்கு பதிவு செய்வதில் தாமதமான நிலை நிலவுகிறது.
- சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.
- கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது.
விழாவின் கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு கடையில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு இடையார்குப்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் ஒரு கடையில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் கடையின் உரிமையாளர் இடையார் குப்பத்தை சேர்ந்த குணசுந்தரி (வயது 30) என்பதும், மூட்டையில் சுமார் 750 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரமாகும். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குணசுந்தரியை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம்.
- செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டை காக்கும் தருணம் என்பதால் பரப்புரைக்கு நான் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு காரணம். இப்போது மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரத்தை பிரதமர் எப்படி உருவாக்குவார்.
மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.
கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 சட்டமன்ற தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்வதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டது தான் ஒன்றிய அரசு.
ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன்.
ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ்.டி., வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னாலும் மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு மாறி விட்டது. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். நாட்டைக்காக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
- உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்
திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.
படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரியகாட்டுபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரை, மோட்டார் சைக்கிளில் மீது மோதாமல் அதன் டிரைவர் சாதுர்யமாக நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து கார் பின்னால் வந்த மற்றொரு காரும் நின்ற நிலையில், 3-வதாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதற்கு பின்னால் வந்த 4-வது காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து முதலில் நின்ற கார் மீது, 2-வதாக நின்ற கார் மோதியது.
இந்த விபத்தில் 4 காரும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த புதுவை மாநிலம் மணமேட்டை சேர்ந்த பூவரசன், கடலூர் மாவட்டம் உள்ளேரிப்பட்டை சேர்ந்த கதிரேசன், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கோகுல்ராஜ், அஜய், சரத்குமார் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 21-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மாலை 4 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* வருகிற 17-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 21-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
- பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார்.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கிராமம் கிராமமாக கூட்டணி கட்சியினருடன் சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். கீழக்கரை, ஏர்வாடி இதம்பாடல், சிக்கல், மாரியூர், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் மற்றும் தரைக்குடி, சேதுராஜபுரம் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி.உதயகுமார், அன்வர்ராஜா, மணிகண்டன். தேர்தல் பொறுளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி. நிறைகுளத்தான், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் மு.சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முனியசாமி பாண்டியன் தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா, ஒன்றிய செயலாளர்கள் பிரவீன் குமார் ராஜேந்திரன், அந்தோனிராஜ், உள்பட அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
பிரசாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சென்ற இடமெல்லாம் இரட்டை இலைக்கு அதிக மவுசு உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் சுயேட்சைகள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார். சாயல்குடி பகுதியில் அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி வீடு, வீடாக சென்று பா. ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.






