search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடுதல் கேமராக்கள் அமைத்து சிறுத்தையை கண்காணிக்கும் வனத்துறையினர்
    X

    கூடுதல் கேமராக்கள் அமைத்து சிறுத்தையை கண்காணிக்கும் வனத்துறையினர்

    • காலடி தடம், சிறுநீர் கழித்த அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பாதை கணக்கிடப்பட்டு, கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சிறுத்தை தற்போது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் நடமாடுவதாக தெரிய வந்துள்ளது.

    பெரம்பலூர்:

    மயிலாடுதுறை மாவட்டத்தின் சில கிராமங்களில், சிறுத்தை நடமாட்டம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து சிறப்பு குழு அமைத்து, சிறுத்தையை தேடும்பணி நடந்தது. இதனிடையே சிறுத்தை, அரியலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்கள் வழியாகச் சென்றது உறுதியானது. இதையடுத்து, சிறுத்தையின் காலடி தடங்கள், எச்சங்கள் அடிப்படையில் அதன் பாதையை வனத்துறையினர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சிறுத்தை குறித்த தகவல் தெரிந்தால் வாட்ஸ்அப்பில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வாரணவாசி அருகேயுள்ள சமத்துவபுரம் சாய் பாபா ஆலயத்தின் அருகே இரட்டை சிறுத்தை இருப்பதாக தகவல் பரவியது. அதை மறுத்துள்ள வனத்துறை, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேண்டுமென்றே தகவல் பரப்பப்பட்டள்ளதாக கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதில், தவறான செய்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு, 10 கி.மீ., வரை சிறுத்தை இடம் பெயர்வதாக தெரியவந்துள்ளது. இந்த அடிப்படையில், அதன் நகர்வு தொலைவு மற்றும் திசை கணக்கிடப்பட்டு வருகிறது.

    காலடி தடம், சிறுநீர் கழித்த அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பாதை கணக்கிடப்பட்டு, கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை தற்போது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் நடமாடுவதாக தெரிய வந்துள்ளது.

    இதனால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக கண்கணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தையை கண்காணித்து பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெரம்பலூரில் ஏற்கனவே, 2013-ம் ஆண்டில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. பின்னர் அந்த சிறுத்தை பிடிக்கப்பட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது.

    Next Story
    ×