என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
- பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இரணியல்:
இரணியல் அருகே உள்ள நெய்யூர் செட்டியார் மடம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 38). இவரது மனைவி சோபிகா (37). இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நவநீதன் (45), அவரது மனைவி அமுதா (32). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று சோபிகா வீட்டின் குப்பைகளை அந்த பகுதியில் தீ வைத்து எரித்த போது, நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா இருவரும் தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டனர். அப்போது சோபிகாவின் மாமனார் மணி அதை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நவநீதன் இரும்பு கம்பியால் மணியை அடிக்க வந்தார். இதை பார்த்த சோபிகாவின் கணவர் ஜெகதீஷ் தடுத்த போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஜெகதீஷை, அமுதாவும் சரமாரியாக தாக்கினார்.
இதை தடுக்க வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18) என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த ஜெகதீஷ், மணிகண்டன் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சோபிகா இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெகதீஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் நவநீதனை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமுதாவை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- சென்னையில் ஜூன் மாதம் வழக்கமாக பொழியும் மழையை விட 5 மடங்கு அதிக மழை இந்த ஜூனில் பெய்துள்ளது.
- சென்னையில் இந்த ஜூன் மாதம் மட்டும் 10 நாட்கள் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
நேற்று மாலையில் இருந்தே குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இரவு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் மழையின் வேகம் அதிகரித்தது.
நேற்று இரவு 11 மணி தாண்டியும் பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
இந்நிலையில் சென்னையில் இன்று இரவும் நல்ல மழை பெய்யும் என தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
3வது நாளாக இன்று இரவும் சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் ஜூன் மாதம் வழக்கமாக பொழியும் மழையை விட 5 மடங்கு அதிக மழை இந்த மாதம் பெய்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் இதுவரை மட்டும் 10 நாட்கள் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னையில் ஜூன் சராசரி மழை அளவு 6 செ.மீ தான். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதுவரை 30 செ.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- சீருடை அணியாத போலீசார் மீனவர்களோடு மீனவர்கள் போல கடலில் படகுகளில் வந்தனர்.
- கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் ஒத்திகை நடந்தது.
நெல்லை:
இந்திய கடல் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் அவ்வப்போது சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும், நாளையும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன்வளத்துறை, வருவாய்த்துறையினரும் கலந்து கொண்டனர்.
அவர்கள் கடலுக்குள் ரோந்து சென்று சந்தேகப்படும்படியான நபர்கள், அந்நியர்கள், சந்தேகத்திற்கு இடமான படகுகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்கள் சட்ட விரோதமாக கடல் வழியாக நுழைவதை தடுப்பது குறித்து ஒத்திகை நடத்தினர்.
சீருடை அணியாத போலீசார் மீனவர்களோடு மீனவர்கள் போல கடலில் படகுகளில் வந்தனர். அவர்களை துல்லியமாக கண்டறிந்து கைது செய்யும் ஒத்திகை நடைபெற்றது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். மேலும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் ஒத்திகை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாப்பன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நாளையும் 2-வது நாளாக நடக்கிறது.
இந்த பணியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அவர்கள் கடலுக்குள் ரோந்து சென்று பயங்கரவாதிகள் வேடத்தில் வந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். தொடர்ந்து மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு எடுத்து கூறினர்.
- மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
- நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்ததால், தி.மு.க., பா.ம.க.விடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் அ.தி.மு.க.வினரின் ஓட்டுகளை பெற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதி மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். அவை பின்வருமாறு:-
விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது. இந்தத் திட்டம் முழுமை பெற்றால் இந்த தொகுதியில் சுமார் 40 ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.
இந்த தொகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைகளை தேடி வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்கின்ற நிலை உள்ளது. இந்த பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும்.
விக்கிரவாண்டி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு புதிய கட்டிட வசதியோடு இயங்கி வருகிறது. இந்த தாலுகாவை இணைக்கும் வகையில் காணை ஒன்றிய பகுதிகளில் இருந்து இந்த தொகுதியின் கடைக்கோடி பகுதி அன்னியூர், நல்லாபாளையம், கண்டாச்சிபுரம், கடையம், லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் வழியாக விக்கிரவாண்டி தாலுகாவை அடையும் வகையில் பஸ் வசதி மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதற்கு லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் அல்லது நரசிங்கனூர், புதுப்பாளையம், விக்கிரவாண்டி, வழியாக வருவதற்கு பஸ் வசதிசெய்து தர வேண்டும்.
முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகற்றப்படும் மருத்துவ கழிவுகள் மலை போல் குவிந்து பல்வேறு நோய்கள் பரப்பும் விதமாக உள்ளது. இந்த மருத்துவக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செஞ்சி பகுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரத்தூர் முண்டியம்பாக்கம் வழியாக வரும் பொழுது முண்டியம்பாக்கம் ரெயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் ஆகவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் விக்கிரவாண்டி பேரூராட்சி காணை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் கடல் குடிநீர் ஆகும் திட்டம் மரக்காணம் பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை இருப்பினும் மேற்கண்ட பகுதிகள் பயன்பெறு வகையில் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் .
தமிழகத்தின் தென்மாவட்டம் கன்னியாகுமரி முதல் தலைநகரான சென்னைக்கு விழுப்புரம் விக்கிரவாண்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். விக்கிரவாண்டியில் சென்னை செல்லும் அரசு பஸ்களும், சென்னையில் இருந்து திருச்சி வரைக்கும் செல்லும் அரசு பஸ்களும் புறவழிச் சாலையில் நின்று செல்வதில்லை.
பயணிகள் விக்கிரவாண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிடப்படுகின்றனர். நிரந்தரமாக விக்கிரவாண்டி புறநகர் பஸ்கள் கட்டாயம் நின்று செல்லும் வசதி செய்து தர வேண்டும் மற்றும் விக்கிரவாண்டியில் உள்ளஅரசு பஸ் பணிமனை விரிவாக்கப்பட்ட அரசு பணிமனையாக அமைக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் விவசாய நிலத்தடி நீர் மற்றும் உயரம் வகையில் பம்பை ஆறு மற்றும் வராக நதி ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்
விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் குறு வட்டத்தைச் சேர்ந்த நல பாளையம், கடையம், புது கருவாச்சி , பழைய கருவாச்சி,டி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு வரவேண்டும் என்றால் கண்டாச்சிபுரம் வந்து கண்டாச்சி புரத்திலிருந்து விழுப்புரம் வந்து, பின்னர் விக்கிரவாண்டி வரவேண்டிய நிலை உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் 3 பஸ் மாறி வர வேண்டிய நிலை உள்ளது.
தற்போது கண்டாச்சிபுரம் தாலுக்கா அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், இந்த தாலுக்காவை சேர்ந்த கிராமங்களை கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைத்தால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தாலுக்கா சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்பகுதி மக்கள் காணை ஒன்றியத்திற்கு செல்வதற்கு நேரடி பஸ் வசதியும் செய்து தர வேண்டும்.
இது மட்டுமல்லாமல் தாலுக்கா கருவூலம், மாவட்ட நூலகம், உட்கோட்ட காவல்துறை, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையத்திற்கு தனி இட வசதி. அரசுதொழிற்கல்லூரி, கிராமங்களை இணைக்கும் கிராம சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதி மக்களின் கனவு கோரிக்கைகளாகவே இருக்கிறது.
- பலரும் அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் ஆதார் அட்டையை கொடுத்து தான் பணியில் சேர்ந்துள்ளனர்.
- தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதால் முழு தகவலையும் இப்போது வெளியிட முடியாது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் விஜயமங்கலம், வாய்ப்பாடி, திங்களூர், காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி என பெருந்துறை தாலுகா முழுவதும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்து வகை தொழில் நிறுவனங்கள், ஓட்டல், கடைகள், தறிப்பட்டறை மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் என எல்லா பகுதியிலும் வட மாநில தொழிலாளர்களே அதிக அளவில் பணிபுரிகின்றனர். பின்னலாடை, ஸ்பின்னிங், டையிங், விசைத்தறி மற்றும் நாடா இல்லாத தறி பட்டறைகளிலும், விவசாய தொழிலுக்கும் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை வட மாநிலத் தொழிலாளர்களே பூர்த்தி செய்து வருகின்றனர்.
மேற்குவங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா என வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருந்துறை தாலுகாவில் மட்டும் 2 லட்சம் பேருக்கு மேல் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இவர்களில் பலரும் அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் ஆதார் அட்டையை கொடுத்து தான் பணியில் சேர்ந்துள்ளனர்.
மற்றபடி பணியில் சேருபவர்களின் பின்னணி அவர்களுடைய சொந்த மாநிலத்தில் ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா? தேடப்படும் குற்றவாளியா? என்பன உள்ளிட்ட எந்த பின்னணி தகவல்களும் இருப்பதில்லை. அவர்கள் அளிக்கும் ஆதார் அட்டையும் போலியானதா என்பதும் உறுதிப்படுத்தப் படுவதில்லை.
குறிப்பாக வங்காள தேசத்தில் இருந்து பாஸ்போர்ட், விசா இல்லாமல் மேற்கு வங்காளம் வழியாக ஊடுருவி தமிழகத்தின் பல பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் என்ற பெயரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பற்றிய முழு தகவல்களையும் போலீஸ் நிலையங்கள் மூலமாக சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாலைமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பெருந்துறை போலீசார், பெருந்துறை பணிக்கம்பாளையம், கிருஷ்ணாம்பாளையம், காடபாளையம் பகுதிகளில் தங்கி உள்ள வட மாநில தொழிலாளர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று இரவு நடைபெற்ற இந்த விசாரணையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி சிப்காட்டில் பணி புரிந்து வந்த வங்காளதேசத்தை 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில் இந்திய நாட்டில் வசிப்பதற்கான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாத 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர்கள் அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு எப்படி ஊடுருவி வந்தார்கள் என்பது குறித்தும், அவர்கள் கொடுத்துள்ள ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் கூறுகையில், வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 9 பேரை பிடித்து விசாரித்ததில் முதல் கட்டமாக 5 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது உறுதியாகி உள்ளது. இவர்களிடம் முறையான பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதால் முழு தகவலையும் இப்போது வெளியிட முடியாது. முழுமையான விசாரணைக்கு பிறகே வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் பற்றிய முழுவிவரத்தையும் வெளியிட முடியும் என்று தெரிவித்தனர்.
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- கிராமுக்கு 40 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.60-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.95,600-க்கும் விற்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.53,520-க்கும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,690-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.60-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.95,600-க்கும் விற்கப்படுகிறது.
கடந்த 17-ந்தேதியில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
- வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க அயராது மக்களுக்காக உழைத்து வரும் அன்பு தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
மக்களின் பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் மக்களின் ஆசி மற்றும் பிரார்த்தனையால் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.
- வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி கேர்மாளம், விளாமுண்டி, தலமலை, பவானிசாகர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.
ஈரோடு வனக்கோட்டத்திற்குள்பட்ட தந்தை பெரியார் வனச்சரணாலயத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகங்களும், சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட 20 வனச்சரகங்களும், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் உள்ளிட்ட 8 வனச்சரகங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.
இந்த வனச்சரணாலய பகுதிகளில் ஆயிரக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. வனச்சூழலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்தும் வகையில் தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வனச்சரணாலயப் பகுதிகளில் ஒவ்வொரு வனச்சரகத்திலும் வசிக்கும் யானைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன.
தற்போது வனச்சரகங்களில் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தப் பகுதிகளில் வசிக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல்களை மத்திய வனத்துறை மூலம் அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது:-
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கி அதன் தொடர்ச்சியாக உள்ள மோயாறு பள்ளத்தாக்கு, சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வனக்கோட்டம் வரையிலான பகுதிகளில் இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டில் 720-க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. தமிழகத்தில் நடைபெற்றதை போலவே அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரித்து இறுதியாக வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.
சத்தியமங்கலம் வனக்கோட்டத்தைப் பொருத்த வரை யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளதால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதை யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டு மொத்தமாக கணக்கீட்டின் அடிப்படையிலேயே தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக்.
- தி.மு.க., பா.ம.க., தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ள நிலையில் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே அங்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்கியுள்ள நிலையில் பா.ம.க. வேட்பாளராக வன்னியர் சங்க துணைத் தலைவரான சி.அன்புமணி நிறுத்தப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிட்ட போதிலும் தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே தான் அங்கு நேரடி மோதல் ஏற்பட்டு உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் இந்த முடிவு தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் தேர்தல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க.வுக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72 ஆயிரத்து 188 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 39.57 சதவீதமாகும்.
அதேநேரத்தில் அ.தி.மு.க.வுக்கு 65 ஆயிரத்து 365 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது 35.83 சதவீதமாகும். இந்த தொகுதியில் பா.ம.க.வுக்கு 32,198 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது 17.54 சதவீதமாகும்.
தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 6823 வாக்குகளே வித்தியாசமாகும். இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் தி.மு.க.வுக்கு கடும்போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்கிற கருத்தும் உள்ளது.
இந்த தொகுதியில் வன்னியர்கள் ஓட்டு அதிகமாக இருப்பதால் பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து தேர்தலை சந்தித்தால் தி.மு.க.வை தோற்கடித்திருக்க முடியும் என்றே கூறப்படுகிறது.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் 93 ஆயிரத்து 670 வாக்குகள் கிடைத்தன.பா.ம.க. உடன் இணைந்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. 84 ஆயிரத்து 157 ஓட்டுகளை பெற்றது. இதன் மூலம் பா.ஜ.க., பா.ம.க. அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் அது தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கும் என்பதும் கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 41,428 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலி லும் அதிக வாக்குகளை பா.ம.க. பெற்றுவிட்டால் அ.தி.மு.க. வுக்கு 3-ம் இடம் தான் கிடைக்கும் என்று கருதியும் அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இது எடப்பாடி பழனிசாமியால் பா.ம.க.வுக்கு வைக்கப்பட்டுள்ள செக் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வாக்குகள் யாருக்கும் செல்லாமல் தடுக்கப்படும் சூழலில் பா.ம.க. குறைவான வாக்குகளையே பெற முடியும் என்பதும் அ.தி.மு.க.வின் கணக்காக உள்ளது.
பா.ம.க.வால் வன்னியர்கள் நிறைந்த தொகுதியில் தடம் பதிக்க முடியவில்லை என்கிற பிரசாரத்தை அ.தி.மு.க.வால் முன்வைக்க வசதியாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இது வரும் காலங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதாயத்தை தேடித்தரும் என்றும் அவர் நம்புகிறார்.
இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலையும் அந்த கட்சிக்கு ஏற்பட்டு இருக்கிறது.
அதேநேரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. எப்போதும் இல்லாத வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேர்தல் பணியாற்றி வருகிறது.
இதனால் தி.மு.க.வுக்கும் பா.ம.க. வுக்கும் தேர்தல் களத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் எப்போதுமே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியிலும் அது நீடிக்குமா? இல்லை பா.ம.க. அதிரடி மாற்றத்தை ஏற்ப டுத்துமா? என்பதே இப்போது பலத்த கேள்வியாக எழுந்துள்ளது.
பா.ம.க.வுக்கு நிகராக தி.மு.க. வினரும் வன்னியர் வாக்குகளை பிரிப்பதால் சாதி ரீதியிலான வாக்குகள் சிதறி அங்கு கடும் பலப்பரீட்சை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
- போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.
அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.
- மழை எதிரொலியால் ஓடைகளில் குளிக்க தடை.
- இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவி லுக்கு அமாவாசை, பவுர்ண மிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் பிரதோ ஷம், ஆனி மாத பவுர்ண மியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பிரதோஷ நிகழ்ச்சியில் பங் கேற்க சென்னை, நெல்லை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நள்ளிரவு முதல் வருகை தந்தனர்.
வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்வது போன்ற சூழல் நிலவியதால் குறைந்த அளவிலான பக்தர்களே வந்திருந்தனர். இதையடுத்து காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்துவிடப்பட்டது. குளுமையான சூழலால் பக்தர்கள் சிரமமின்றி மலையேறி சென்றனர். தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாலும், மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், அப்படியே வந்தாலும் கோவிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது.
இன்று மாலை சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்றும், தரிசனம் முடிந்து திரும்பி வருபவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆனி மாத பவுர்ணமி நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.
- வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.
இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.
இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.
இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டியது. அதாவது வீராணம் ஏரியின் மொத்தமாக 1465 கன அடி நீர் தேக்கி வைக்கமுடியும். இதில் 1343.50 கன அடி நீர் தற்போது உள்ளது.
மேலும், வீராணம் ஏரி நிரம்பியதால் கீழணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. மேலும், நேற்று இரவு காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 14 மி.மீ. மழை பதிவாகியது.
இதனால் ஏரிக்கு வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் அறுவடை நடைபெறுவதால் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக நிரம்பியுள்ளது.






