search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special View"

    • மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
    • நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்ததால், தி.மு.க., பா.ம.க.விடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் அ.தி.மு.க.வினரின் ஓட்டுகளை பெற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். அவை பின்வருமாறு:-

    விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது. இந்தத் திட்டம் முழுமை பெற்றால் இந்த தொகுதியில் சுமார் 40 ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    இந்த தொகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைகளை தேடி வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்கின்ற நிலை உள்ளது. இந்த பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும்.

    விக்கிரவாண்டி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு புதிய கட்டிட வசதியோடு இயங்கி வருகிறது. இந்த தாலுகாவை இணைக்கும் வகையில் காணை ஒன்றிய பகுதிகளில் இருந்து இந்த தொகுதியின் கடைக்கோடி பகுதி அன்னியூர், நல்லாபாளையம், கண்டாச்சிபுரம், கடையம், லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் வழியாக விக்கிரவாண்டி தாலுகாவை அடையும் வகையில் பஸ் வசதி மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதற்கு லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் அல்லது நரசிங்கனூர், புதுப்பாளையம், விக்கிரவாண்டி, வழியாக வருவதற்கு பஸ் வசதிசெய்து தர வேண்டும்.

    முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகற்றப்படும் மருத்துவ கழிவுகள் மலை போல் குவிந்து பல்வேறு நோய்கள் பரப்பும் விதமாக உள்ளது. இந்த மருத்துவக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செஞ்சி பகுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரத்தூர் முண்டியம்பாக்கம் வழியாக வரும் பொழுது முண்டியம்பாக்கம் ரெயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் ஆகவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

    சமீபத்தில் விக்கிரவாண்டி பேரூராட்சி காணை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் கடல் குடிநீர் ஆகும் திட்டம் மரக்காணம் பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை இருப்பினும் மேற்கண்ட பகுதிகள் பயன்பெறு வகையில் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் .

    தமிழகத்தின் தென்மாவட்டம் கன்னியாகுமரி முதல் தலைநகரான சென்னைக்கு விழுப்புரம் விக்கிரவாண்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். விக்கிரவாண்டியில் சென்னை செல்லும் அரசு பஸ்களும், சென்னையில் இருந்து திருச்சி வரைக்கும் செல்லும் அரசு பஸ்களும் புறவழிச் சாலையில் நின்று செல்வதில்லை.

    பயணிகள் விக்கிரவாண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிடப்படுகின்றனர். நிரந்தரமாக விக்கிரவாண்டி புறநகர் பஸ்கள் கட்டாயம் நின்று செல்லும் வசதி செய்து தர வேண்டும் மற்றும் விக்கிரவாண்டியில் உள்ளஅரசு பஸ் பணிமனை விரிவாக்கப்பட்ட அரசு பணிமனையாக அமைக்க வேண்டும்.

    விவசாயம் மற்றும் விவசாய நிலத்தடி நீர் மற்றும் உயரம் வகையில் பம்பை ஆறு மற்றும் வராக நதி ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

    விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் குறு வட்டத்தைச் சேர்ந்த நல பாளையம், கடையம், புது கருவாச்சி , பழைய கருவாச்சி,டி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு வரவேண்டும் என்றால் கண்டாச்சிபுரம் வந்து கண்டாச்சி புரத்திலிருந்து விழுப்புரம் வந்து, பின்னர் விக்கிரவாண்டி வரவேண்டிய நிலை உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் 3 பஸ் மாறி வர வேண்டிய நிலை உள்ளது.

    தற்போது கண்டாச்சிபுரம் தாலுக்கா அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், இந்த தாலுக்காவை சேர்ந்த கிராமங்களை கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைத்தால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தாலுக்கா சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்பகுதி மக்கள் காணை ஒன்றியத்திற்கு செல்வதற்கு நேரடி பஸ் வசதியும் செய்து தர வேண்டும்.

    இது மட்டுமல்லாமல் தாலுக்கா கருவூலம், மாவட்ட நூலகம், உட்கோட்ட காவல்துறை, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையத்திற்கு தனி இட வசதி. அரசுதொழிற்கல்லூரி, கிராமங்களை இணைக்கும் கிராம சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதி மக்களின் கனவு கோரிக்கைகளாகவே இருக்கிறது.

    ×