என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
- போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
சென்னைக்கு அடுத்தபடியாக மிக பெரிய விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 705 நாட்களாக மாலை நேரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தேர்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 58 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை தவிர மற்ற 57 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏகனாபுரம் கிராமத்தை புறக்கணிப்பு செய்வதை கண்டித்தும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 3-ந்தேதி (புதன் கிழமை) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மட்டும் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
இதன் காரணமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.
- கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னை:
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது.
இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன. எனவே அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது.
இந்த குழுவினர், தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர். அதாவது ஒரே தெருவில் வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருந்தால், அதனை ஒன்றாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர். ஆனால் புதிதாக மதிப்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 10-ம் தேதி பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டன.
பின்னர் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டர்கள் தலைமையிலான துணைக்குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.

இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய வழிகாட்டி மதிப்பினை இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. அதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன. அதன் காரணமாக அந்த இணையதளம் https://tnreginet.gov.in சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும்.
- தமிழக மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
- கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
மீனவர்கள் கைது நடவடிக்கையால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கியாஸ் விலையை மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும்.
- இன்று கியாஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும். அந்த வகையில், ஜூலை 1 ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டது.
அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 31 குறைந்துள்ளது. இதன் காரணமாக இதன் விலை ரூ. 1809.50 ஆக மாறியுள்ளது. இந்த மாதமும் விலை குறைக்கப்பட்டதை அடுத்து கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக 4 ஆவது மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
- பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.
பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.
- டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் ‘கிக்’ இல்லாததால், கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்.
- கள்ளச்சாராயத்தை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கள்ளச்சாராய விற்பனை, கள்ளச்சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனை, மக்களை மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவைதான் கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்.
இவற்றைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை என்பது ஆளும் கட்சியினரின் ஆசியோடு நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், ஆளும் கட்சியினர் மீது அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டின.
அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை நிரூபிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றி இருக்கிறார்.
அமைச்சர் துரைமுருகன் தன்னுடைய உரையில், "உழைப்பவர்கள் தங்கள் அசதிக்காக மது குடிக்கின்றனர் என்றும்; டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் 'கிக்' இல்லாததால், கள்ளச்சாராயம் குடிக்கின்றனர் என்றும்; கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என்றும்; மனிதர்களாக பார்த்து திருந்தாவிட்டால், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்றும் கூறி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அதாவது, கள்ளச்சாராயத்தை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று சொன்னாலே, கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், 'கிக்' இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக அமைச்சரே தெரிவிப்பது, கள்ளச்சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க வழிவகுக்கும்.
அரசே இதை ஊக்குவிப்பது போல் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசுக்கு, அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ள
வர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னையில் LGBTQ+ மக்களின் 'வானவில் சுயமரியாதை' பேரணி கோலாகலமாக நடைபெற்றது.
- இப்பேரணியில் வண்ண உடைகள் அணிந்து ஏராளமான LGBTQ+ மக்கள் பங்கேற்றனர்.
LGBTQ+ மக்களுக்காக ஜூன் மாதத்தில் சர்வதேச Pride Month கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி இன்று சென்னையில் LGBTQ+ மக்களின் 'வானவில் சுயமரியாதை' பேரணி கோலாகலமாக நடைபெற்றது. இப்பேரணியில் கரகாட்டம், தப்பாட்டம் என மேளதாளம் முழங்க வண்ண வண்ண உடைகள் அணிந்து ஏராளமான LGBTQ+ மக்கள், அதன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சர்வதேச Pride Month-ஐ நினைவுகூரவும், பொதுமக்களுக்கு LGBTQ+ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் வானவில் வண்ணங்களில் ஒளிரவிடப்பட்டது.
- கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
- மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.
மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபானங்கள் கள்ளச்சாராய மரணங்களுக்கு தீர்வல்ல. ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும்.
கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
- கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு.
தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
- பொன்மனச் செம்மல் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி கண்ட தமிழினத்தின் திருநாள்!
- மண்ணிலும் மக்கள் மனதிலும் மாற்றமுடியாத இயக்கமாக இருக்கும்,
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,
ஏழைகளின் ஏற்றமே நாட்டின் முன்னேற்றம் எனக் கருதி ஏழை எளியோரின் வலியுணர்ந்து வாரி தந்த வள்ளல்!
தமிழ்நாட்டை சுயநலத்திற்காக சூறையாட நினைத்த சதிகார கும்பலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி கோட்டையில் கழக கொடியை பறக்க விட்ட பொன்னாள்!
பொன்மனச் செம்மல் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி கண்ட தமிழினத்தின் திருநாள்!
30.06.1977-ல் முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்று 11-ஆண்டுகள் கடைக்கோடி மக்களுக்காகவே கழக ஆட்சியை தந்தவர் நம் தங்கத்தலைவர்!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வார்த்தை வரிகளுக்கு ஏற்ப நூறாண்டு தாண்டி நூற்றாண்டு கண்டாலும் மண்ணிலும் மக்கள் மனதிலும் மாற்றமுடியாத இயக்கமாக இருக்கும்! இயங்கும்! என்று கூறியுள்ளார்.
- சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது.
- சுகாதாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடப்பது கிடையாது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியது என்னதான் ட்ரால் மீம் ஆக பார்த்தாலும் கூட, சட்டசபையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது. உதாரணமாக, ஸ்வச் பாரத்தில் 44வது இடத்தில் இருந்த சென்னை இப்போது 200வது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
மக்கும் குப்பை மக்காத குப்பைகளை அவர்கள் பிரித்தெடுப்பதே கிடையாது. இதன் வெளிப்பாடுதான் சிறுவன் உயிரிழப்பு சம்பவம்.
அடுத்தது, மழைநீர் குப்பைகளுடன் கலக்கும் அது குடிநீர் பைப் வழியாக செல்லும். மக்கள் அதனை பருகுவார்கள். ஆனால் இதை பற்றி எல்லாம் சுகாதாரத்துறை அமைச்சருக்கோ மற்றவர்களுக்கோ கவலை இல்லை.
இதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடப்பது கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் பேசுவது கிடையாது.
ஈஷா பொறுத்தவரை யானை வழித்தடம் இல்லை.
முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் ஒரு முதல்வர் வெள்ளை அறிக்கை வழங்காமல் தொடர்ந்து வெளிநாட்டு பயணம் சென்றுக் கொண்டிருக்கிறார்.
துபாய் சென்று வந்து 2 வருடங்கள் ஆகிறது. ஆனால், அங்கு சென்று வந்ததற்கான பயன் என்ன ? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்தீர்கள் ? இதேபோல், சிங்கப்பூர், ஜப்பான் சென்றார்கள். பணம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன ?
அரசு செலவில் ஒரு முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்றால் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சென்னை:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்னிலும் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்திருந்தது.
இதற்கிடையே, நேற்று நடந்த இரண்டாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் ஸ்நே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.






