என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திராவிடமணி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார்.
    • மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நடந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.

    இதனால் அந்த பள்ளியை கலவரக்காரர்கள் உடைத்து சேதப்படுத்தி பள்ளி பஸ் மற்றும் பள்ளி கட்டிடத்திற்கு தீவைத்து எரித்தனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுபோலீசார் விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு அப்போது நியமனம் செய்து உத்தரவிட்டது. அதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சிமாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


    இதையடுத்து அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மாணவியின் தாய் ஸ்ரீமதி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திரா விடமணி ஆகியோரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாணவியின் தாய் செல்வி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி காவல் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திராவிடமணி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது சிறப்பு புலனாய்வு குழு டிஎஸ்பி. அம்மாதுரை தலைமையிலான போலீசார் திராவிடமணியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகதுருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.

    • தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.
    • பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.

    சென்னை:

    புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றான, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டது.

    தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று வழங்கி உள்ளது.

    சுமார் 600 பக்கங்கள் கொண்ட பரிந்துரைகளை மாநில கல்விக்கொள்கை உருவாக்க குழு சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் சில...

    * 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.

    * தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.

    * பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.

    * பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும்.

    * நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கூடாது.

    • உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளர். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன்(40). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே ஊரை சேர்ந்த சிலருடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி சாராயம் வாங்கி வந்து குடித்ததும், அவர்களை தவிர மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு சாராயம் குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், மதுவில் கொசு மருந்து கலந்த தண்ணீரை கலந்து குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இருப்பினும் அவர்களுக்கு சாராயம் விற்றது யார்? என்று ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. அவர் மீது ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிர்வாக காரணங்களுக்காக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
    • முறையான முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

    சென்னையில் முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    சென்னையில் இருந்து டெல்லி, சீரடி, ஐதராபாத்துக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் ரத்தாகி உள்ளது.

    நிர்வாக காரணங்களுக்காக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. முறையான முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

    • ஒரு கிராம் ரூ.6,685-க்கும் சவரன் ரூ.53.480-க்கும் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜூலை மாத தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.

    ஒரு கிராம் ரூ.6,685-க்கும் சவரன் ரூ.53.480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.94.70-க்கும் கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து கிலோ வெள்ளி ரூ.94,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை.
    • அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    விக்கிரவாண்டி:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து திருவாமத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை. இது சட்டசபை இல்லை சாராய சபை. வேறு ஒன்றையும் பேசவில்லை. சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. தண்ணீர் விஷம் ஆகிவிட்டது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

    சாராயம், குடிநீர் அனைத்தும் இப்பொழுது விஷமாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு மாற்றம் வர வேண்டும் என சொல்கின்றனர்.

    அந்த மாற்றத்தை யார் கொண்டு வருவது, தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, 7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது. மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மாறாது மாற்றம் என்பது ஒரு செயல், நாம் தான் அதை மாற்ற வேண்டும். மாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்,

    கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம், பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்க ரூ,25 ஆயிரம். அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா?. இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    தமிழக மக்கள் நீங்கள் நன்றாக சிக்கிக் கொண்டீர்கள் இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மைக் சின்னத்திற்கு வாக்களிப்பது தான், உழைத்து கலைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ் நாடு அரசின் விண்வெளி கொள்கை அறிமுகம்.
    • ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கொள்கையின் கீழ் குலசேகரப்பட்டினத்தை சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே (Space Bay) ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்கிறது.

    வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    • கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    சேலம்:

    கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை, கபினி அணை, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 369 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதே போல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 560 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தமிழக எல்லையான பிலிக்குண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலையும் அதே அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 39.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1038 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 11.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
    • கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 6-ந்தேதி வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 24-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 30 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை மறுநாள் (3-ந்தேதி) தொடங்குகிறது.

    முதலாம் ஆண்டுக்கான முதல் பருவத் தோ்வுகள் (செமஸ்டா்) அக். 31-ல் தொடங்கி, நவ. 25-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிச. 16-ந் தேதி அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
    • போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னைக்கு அடுத்தபடியாக மிக பெரிய விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 705 நாட்களாக மாலை நேரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தேர்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 58 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை தவிர மற்ற 57 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

    இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

    சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏகனாபுரம் கிராமத்தை புறக்கணிப்பு செய்வதை கண்டித்தும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 3-ந்தேதி (புதன் கிழமை) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மட்டும் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    இதன் காரணமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.
    • கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது.

    இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன. எனவே அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது.

    இந்த குழுவினர், தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர். அதாவது ஒரே தெருவில் வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருந்தால், அதனை ஒன்றாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர். ஆனால் புதிதாக மதிப்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

    இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 10-ம் தேதி பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டன.

    பின்னர் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டர்கள் தலைமையிலான துணைக்குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.

    இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

    இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதிய வழிகாட்டி மதிப்பினை இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. அதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன. அதன் காரணமாக அந்த இணையதளம் https://tnreginet.gov.in சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

    இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும்.

    • தமிழக மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
    • கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    மீனவர்கள் கைது நடவடிக்கையால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×