என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.
- தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், கடலூர் மாவட்ட மீனவர் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் என மொத்தம் 10 பேர் கடந்த ஜூன் 23-ம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர், தங்களின் சுற்றுக்காவல் படகை தமிழக மீனவர்களின் படகு மீது மோதியுள்ளனர்.
அதில் சுற்றுக்காவல் படகில் இருந்த ரத்னாயகா என்ற வீரர் கடலில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழக மீனவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாளே கடலில் விழுந்து மீட்கப்பட்ட கடற்படை வீரர் ரத்னாயகா உயிரிழந்து விட்டதால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகாவின் உயிரிழப்புக்கு தமிழக மீனவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அவர்கள் அப்பாவிகள். வங்கக்கடலில் பிழைப்புக்காக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்யும் நோக்குடனும், தாக்கும் நோக்குடனும் அவர்களின் படகுகள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள், தங்களின் ரோந்து படகுகளை அதிவேகமாக ஓட்டி வந்து மோதினார்கள்.
அதனால் ஏற்பட்ட நிலைகுலைவில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா முதுகுத் தண்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார். இது முழுக்க முழுக்க விபத்து. அதுவும் இலங்கைக் கடற்படையினரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து. அதற்கு எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழக மீனவர்களை பொறுப்பாக்குவதும், தண்டிக்கத் துடிப்பதும் நியாயமல்ல.
இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொலை வழக்கில் தமிழக மீனவர்களை தொடர்புப்படுத்தி இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் என்ன பதில் கூறினார்கள்? என்பது தெரியவில்லை. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.
அதற்காக தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவற்றை மத்திய அரசு ஏற்கக் கூடாது. இன்னும் கேட்டால் இதுவரை 800-க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு காரணமான சிங்கள வீரர்களை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி தான் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்திற்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் கிராமம் இடையன் கிணறு நால்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை தாராபுரம் திருப்பூர் சாலையில் மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சூரியநல்லூர் மற்றும் கொழுமங்குழி, இடையன் கிணறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்களை மறியலை கைவிடவில்லை. இதைய டுத்து டி.எஸ்.பி., கலையரசன், தாசில்தார் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைத்தால் விபத்துக்கள் அதிகம் நிகழும். எனவே கடை அமைக்கக்கூடாது என்றனர். தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
- வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வரும் பாதையான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனையடுத்து பல்வேறு புகார்கள் வந்ததன் பேரில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதும் ஒருசில இடங்களில் ஆக்கிரமிப்புகள் நீடித்து வந்தது.
பழனி மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவீதியில் அண்ணா செட்டிமடம் என்ற இடம் உள்ளது. பாதவிநாயகர் கோவிலில் இருந்து மின்இழுவை ரெயில்நிலையம் செல்லும் முக்கிய சந்திப்பான இங்கு 100ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிரி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அண்ணா செட்டிமடம் பகுதியில் குடியிருக்கும் 140 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதற்கு அவகாசம் கேட்ட வருவாய்த்துறையினருக்கும் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து 139குடும்பங்களுக்கு பழனியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் தலா 1½ சென்ட் இடம் வழங்கி கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று அனைவரும் தங்களது வீடுகளை காலி செய்தனர். தொடர்ந்து கோார்ட்டு உத்தரவின் பேரில் இன்று அதிகாலை முதலே வருவாய்த்துறை, தேவஸ்தான நிர்வாகமும் இணைந்து டி.எஸ்.பி தனஞ்செயன் தலைமையில் ஏராளமான போலீசார் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. வாகனங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பழனி மலை அடிவாரத்தில் படிப்பாதை அருகில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல தனியார் பஞ்சாமிர்த கடையான சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது. குடியிருப்புகளை அகற்றும்போது அங்கு ஏற்கனவே வசித்த குடியிருப்பு வாசிகள் தடுத்து இடையூறு செய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றும்பணி நடைபெற்ற போது பல ஆண்டுகளாக குடியிருந்தவர்கள் சாலை ஓரத்தில் நின்று தாங்கள் வசித்த வீடு இடிபடுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
- மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்-மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும்.
8 நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும், 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்போது சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய்எ மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பஸ்கள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட 1 பஸ் என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பஸ்களில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி, மிதவை அமைப்பு வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய ஜி.பி.எஸ்.கருவி, ஒய்பை வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35 பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருட்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கா.ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் மணிவாசன், மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி கலந்து கொண்டனர்.
- மக்கள் உயிரைக் காப்பதில் கடவுளுக்கு அடுத்தபடியாக வாழும் தெய்வங்களாக நாம் கருதுவது மருத்துவர்களைத் தான்.
- மருத்துவர்கள் தினத்தில் மருத்துவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவர்களின் வரலாற்றில், மறக்க முடியாத நாள் இன்று மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியம் அளிக்கப்படுவது மிகவும் அவமானத்திற்குரியது.
தகுதிக்கு ஏற்ற ஊதியம் வேண்டி அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாகவே போராடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நம்முடைய முதல்வர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமில்லாமல், தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் 2021-ம் ஆண்டு இதே மருத்துவ தினத்தன்று "இந்த அரசு மக்களுக்கான அரசு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கான அரசும் தான் "எனவும் தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மருத்துவர்களின் உழைப்பை மட்டும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தத் தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம் 6 வாரத்திற்குள் மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டும், எந்தவிதமான கோரிக்கையும் நிறைவேற்றாமல் இருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கக் கூடியது. அது மட்டுமில்லாமல் கடந்த 28-ந்தேதி சட்டசபையில் சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் போது அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு இருந்த மருத்துவர்களுக்கு அரசு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதிய பட்டை நான்கு என்ற மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை வழங்கப்படும், என்ற இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சரை தே.மு.தி.க. சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் உயிரைக் காப்பதில் கடவுளுக்கு அடுத்தபடியாக வாழும் தெய்வங்களாக நாம் கருதுவது மருத்துவர்களைத் தான் எனவே மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு வேண்டிய, ஊதிய உயர்வை அளிக்க வேண்டும். மருத்துவர்கள் தினத்தில் மருத்துவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 10 ஆண்டு காலமாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.
- இந்தியா வலுவான கட்டமைப்பு உள்ள நாடு.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடுமுடியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நாங்குநேரி, ராதாபுரம் வட்டத்தில் சுமார் 16 கிராம மக்கள் பயன் அடைவார்கள். விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை செலவழித்து நல்ல முறையில் கார் பருவ சாகுபடி செய்ய வேண்டும்.
இலங்கை அரசு நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இந்தியா வலுவான கட்டமைப்பு உள்ள நாடு. ஆனால் இலங்கை போன்ற சிறுநாடுகள் இந்திய மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும் மீனவர்கள் கைது செய்யப்படும் நிலை இருந்த போதிலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், அப்போதைய மேலவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு சென்று மீனவர்களின் படகுகளை திரும்ப கொடுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.
அதன் விளைவு இன்றளவும் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியும், மத்திய அரசும், பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் அதனை பொருட்டாக எடுக்காமல், அந்த கோரிக்கையை பரிசீலனை கூட செய்வது இல்லை. 10 ஆண்டு காலமாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அவர் மீனவர்களையும், மீன்வளத்துறை அதிகாரிகளையும், இலங்கை அரசின் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
இதற்கு முன்பு கச்சத்தீவை தாண்டி சென்றால் தான் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்யும். மேலும் வழக்கமாக நாட்டுப்படகை பிடிக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அதனையும் சிறை பிடிக்கின்றனர் என்றால், மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர்.
- கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் ஏ.புதுப்பட்டி பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கொடைக்கானலில் இருந்து கம்பம் நோக்கி சென்ற கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் 250 கிராம் கஞ்சா, ஒரு பாக்கெட் கஞ்சா சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காரில் 50 கிராம் எடை கொண்ட 30 மெத்தபட்டமைன் போதை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவரவே அதனை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.1.75 லட்சமாகும். இதனை தொடர்ந்து காரில் வந்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த விகாஸ் ஷியாம் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த ஆரிப் ராஜா (22), கம்பம் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களுடன் வந்த சல்மான் என்பவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் பெங்களூரில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்து போதை பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. போதை கும்பல் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்க ளில் தேடுதல்வேட்டை மேற்கொண்டனர். கோவையை சேர்ந்த அன்பழகன் (25), வருசநாடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (23), பெங்களூரை சேர்ந்த யாசர் முத்தர் (23) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 25 கிராம் மெத்தபட்டமைன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 6 பேர்களையும் தேனி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம் மெத்தபட்டமைன், 10 கிராம கோகைன், போதை ஸ்டாம்பு, கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய குற்றவாளி களான நோகன் மற்றும் சல்மான் ஆகியோர் கேரளா மற்றும் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
இந்த கும்பல் கொடைக்கானலில் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எவ்வளவு விலை கொடுத்தும் போதை பொருட்களை வாங்கிவிடுவார்கள் என்பதால் அதுபோன்ற நபர்களை குறிவைத்து இவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி போல பணத்தை செலுத்தியதும், அவர்கள் இருக்கும் இடத்திற்கு போதை பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். இதனால் யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர். இதன் நெட்ஒர்க் பல மாநிலங்களை கடந்து செல்வதால் மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கள்ளச்சாராய விவகாரம் தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்தது.
- எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் கடந்த மாதம் 65 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்தது.
இதையொட்டி தமிழகம் முழுக்க கள்ளச்சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தொலைகாட்சியில் அளித்த நேர்காணல் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து நீதிபதிகள் கூறும் போது, கல்வராயன் மலையில் வேலைவாய்ப்பின்றி உள்ளூர்வாசிகளால் கள்ளச்சாராம் காய்ச்சப்படுகிறது. கல்வராயன் மலைப்பகுதியில் எந்த வேலைவாய்ப்பும் இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளது.
கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியுள்ளது. தமிழக தலைமை செயலாளர், மத்திய மாநில பழங்குடியின நலத்துறை, டிஜிபி, சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் இந்த விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது என்றனர்.
- இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
- இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் இடத்தை எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது.
சென்னை :
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன். இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார். செயல்பட்டார். பாராளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார்.
இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் பேணி வந்தார். கலைஞர் அவர்களின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார்.
2015-ஆம் ஆண்டில் சம்பந்தன் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, "எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது" என்று கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2016-ஆம் ஆண்டு 13-ஆவது முறையாக கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பந்தன் அவர்களும், "இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்" என வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கை தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திராவிடமணி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார்.
- மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நடந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.
இதனால் அந்த பள்ளியை கலவரக்காரர்கள் உடைத்து சேதப்படுத்தி பள்ளி பஸ் மற்றும் பள்ளி கட்டிடத்திற்கு தீவைத்து எரித்தனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுபோலீசார் விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு அப்போது நியமனம் செய்து உத்தரவிட்டது. அதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சிமாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மாணவியின் தாய் ஸ்ரீமதி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திரா விடமணி ஆகியோரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாணவியின் தாய் செல்வி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி காவல் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி திராவிடமணி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது சிறப்பு புலனாய்வு குழு டிஎஸ்பி. அம்மாதுரை தலைமையிலான போலீசார் திராவிடமணியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகதுருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.
- பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.
சென்னை:
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றான, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டது.
தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று வழங்கி உள்ளது.
சுமார் 600 பக்கங்கள் கொண்ட பரிந்துரைகளை மாநில கல்விக்கொள்கை உருவாக்க குழு சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் சில...
* 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.
* தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.
* பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.
* பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும்.
* நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கூடாது.
- உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளர். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன்(40). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே ஊரை சேர்ந்த சிலருடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி சாராயம் வாங்கி வந்து குடித்ததும், அவர்களை தவிர மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு சாராயம் குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், மதுவில் கொசு மருந்து கலந்த தண்ணீரை கலந்து குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்களுக்கு சாராயம் விற்றது யார்? என்று ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. அவர் மீது ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






