என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- கடலூர் நகர பகுதியில் பதட்டத்தையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.
கடலூர்:
கடலூர் வண்டிப்பாளையம் ஆலைக் காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன் (வயது 46), அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி, கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர். இவர் தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் புஷ்பநாதனை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேவதி உள்பட 3 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள், செல்போன் டவர்கள், கொலை செய்யப்பட்ட புஷ்பநாதனின் செல்போன் போன்றவைகளில் ஆய்வு செய்தனர்.
அதே பகுதியை சேர்ந்த நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 வாலிபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஓராண்டுக்கு 3 பேரும் சேர்ந்து ஆடுகளை திருடியுள்ளனர். இதனை அ.தி.மு.க. பிரமுகர் புஷ்பநாதனிடம் விற்பனை செய்து உள்ளனர். திருடப்பட்ட ஆடுகள் கடலூர் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமானதாகும். இது தொடர்பான புகாரில் ஆடு திருடிய நேதாஜி, அஜய், சந்தோஷ் உள்ளிட்டவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இதற்காக பயன்படுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்களை ஜாமீனில் எடுக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை போலீசாரிடம் இருந்து மீட்டு தரவும் புஷ்பநாதனிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் புஷ்பநாதன் உதவி செய்யவில்லை. தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த இவர்கள் இது குறித்து புஷ்பநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் புஷ்பநாதனுக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக புஷ்பநாதனை கொலை செய்ய திட்டமிட்ட நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகியோர், கடந்த சில தினங்களாக புஷ்பநாதனை நோட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு கொலை செய்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த புஷ்பநாதனின் உறவினர்கள் 3 பேரின் வீடுகளை சூறையாடினர். மேலும், அ.தி.மு.க. பிரமுகர் புஷ்பநாதனின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ள்தால், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடலூர் நகர பகுதியில் பதட்டத்தையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.
- விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
- வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதே போல் வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் விவசாய தோட்டங்கள் அமைந்து உள்ளன.
மேலும் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். அந்த பகுதி விவசாயிகள் ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இரவில் பட்டியில் கட்டி வைப்பது வழக்கம்.
அப்போது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டு உள்ள மாடு, ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் பகுதியில் சிவராஜ் (62) என்ற விவசாயி மாடுகளை வளர்த்து வருகிறார். அவர் இரவில் தோட்டத்தில் மாடுகளை கட்டி வைத்து வந்தார்.
இதே போல் நேற்று இரவும் அவர் மாடுகளை தோட்டத்தில் கட்டி வைத்து இருந்தார். அப்போது நள்ளிரவில் ஒரு சிறுத்தை புலி வனத்தை விட்டு வெளியேறி சிவராஜ் தோட்டத்துள் புகுந்தது. அங்கு தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 3 வயதுடைய ஒரு மாட்டை கடித்து கொன்றது.
இதையடுத்து சிவராஜ் இன்று அதிகாலை வந்து பார்த்தார். அப்போது அவரது ஒரு மாடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். இதில் சிறுத்தை புலி மாட்டை கடித்து கொன்றது தெரிய வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- காகிதக் குடுவையில் மதுவிற்பனை செய்யும் அபத்தமான, ஆபத்தான திட்டங்கள் தேவையில்லை.
- மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் 90 மி.லி. மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாசார சீரழிவு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விடும்.
காகிதக் குடுவைகளில் 90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. டாஸ்மாக் கடைகளில் குறைந்த அளவாக 180 மி.லி. மது மட்டுமே கிடைப்பதாகவும், அதன் குறைந்தபட்ச விலை ரூ.140 என்பதால், அவ்வளவு பணம் கொடுத்து டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடிக்க முடியாதவர்கள் தான் குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள் என்றும், குறைந்த விலையில் டாஸ்மாக் நிறுவனமே மதுவை விற்பனை செய்வதன் மூலம் கள்ளச்சாராயத்தை தடுக்கலாம் என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதை விட மிக மோசமான வாதம் இருக்க முடியாது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக ஆயிரமாயிரம் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்க பா.ம.க. தயாராக இருக்கிறது. அதை விடுத்து மலிவு விலை காகிதக் குடுவை மது போன்ற போகக்கூடாத ஊருக்கு தமிழக அரசு வழிகாட்டக் கூடாது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், அதை சாத்தியமாக்க மன உறுதியும், அரசியல் துணிச்சலும் தான் தேவை. மாறாக, காகிதக் குடுவையில் மதுவிற்பனை செய்யும் அபத்தமான, ஆபத்தான திட்டங்கள் தேவையில்லை.
எனவே, காகிதக் குடுவையில் 90 மி.லி. மதுவை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
- தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகழாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் குமரானந்தபுரம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் இளங்காமணி (வயது 47). பழைய இரும்பு கடைவைத்துள்ளார். தனது மனைவி மற்றும் 14 வயது, 9 வயது என இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இளங்காமணி, தனது மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் வைத்து பூட்டியதுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேச வேண்டும். இல்லையென்றால் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு பற்ற வைத்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகழாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இளங்காமணியை கதவை திறக்க செய்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் வீட்டுக்குள் சென்று குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இளங்காமணியை வீட்டிலிருந்து வெளியே மீட்டு வரும்போது, சீமானை பார்க்க வேண்டும் என்று கூறி, காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் கிழித்துள்ளார்.
இதில் லேசான காயமடைந்த அவரை போலீசார் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளங்காமணி கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து இவ்வாறு செய்துள்ளார். ஒரு வழியாக அவர்கள் செல்போன் மூலமாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன் காரணமாக போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்த்தனர்.
- தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம்.
- உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு மாநிலத்திற்காக கல்வி கொள்கையை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர், ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வுபெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் யூனி செப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ உள்ளிட்ட 14 பேர் இதில் இடம் பெற்றிருந்தனர்.
அனைவருக்கும் உள்ள கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு மாநில கல்வி கொள்கையை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை தயாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்கினார்கள்.
600 பக்கங்கள் கொண்டதாக அதன் அறிக்கை உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் என்னென்ன என்ற விவரம் வருமாறு:-
3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வைக்க கூடாது. பிளஸ்-1 பொதுத் தேர்வை தொடர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. பிளஸ்-1 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தேசிய கல்வி கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றபோது படிப்பதில் இருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்ற தேவையில்லை.
முதலாம் ஆண்டு மட்டும் படித்துவிட்டு பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிடவும், 2-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ், 3-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. அதனை மாநில கல்விக் கொள்கை நிராகரிக்கிறது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் என உள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம்.
தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படுவதோடு, மாணவர்கள் 10-ம் வகுப்பில் வாரிய தேர்வுகளை எடுக்கும் வரை, பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும்.
முந்தைய நிலைகளில் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் இருக்க கூடாது.
கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு தடகள நிகழ்வுகளில் கலந்து கொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம்.
அனைத்து தாய்-சேய் குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர பரிந்துரைக்கிறது.
ஸ்போக்கன் இங்கிலீஷ் தவிர ஸ்போக்கன் தமிழ் மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு மனநல ஆலோசகர் ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரை கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக்குழு அமைக்க வேண்டும்.
இரு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
- அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.
- தமிழக அரசியலில் தோற்றுப்போனவர்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க. அதன் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெறுப்பு அரசியலை செய்து வருகிறார்.
முதல்-அமைச்சர் மீதும் அவதூறு பேசுவது வாடிக்கையாகி விட்டது. எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள. இவரைப்போல் யாரிடமும் வெறுப்பும், திமிறும், ஆணவமும் இல்லை.
காங்கிரஸ் பற்றி எனக்கு தெரியாது என்கிறார். நான் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். முதலில் ஜன நாயகத்தை படிக்க வேண்டும். நான் காங்கிரஸ் பற்றி பேச தயார். நீங்கள் ஜனசங்கம், இந்து மகாசபா பற்றி பேச தயாரா?
தன் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்க முயற்சித்த விவகாரம், சிருங்கேரி மடம் முதல் பல விசயங்களை நாங்களும் தூசு தட்டுவோம்.
முதல்-அமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை கிண்டல் செய்கிறார். மோடி எத்தனையோ வெளிநாடுகளுக்கு செல்கிறாரே முதலீடுகளை கொண்டு வந்தாரா?
முதலில் அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்குத்தான் ஆதரவாக இருப்பாராம்.
தமிழக அரசியலில் தோற்றுப்போனவர். இப்போது உலக அரசியல் செய்யப் போகிறாராம். ஒரு வேளை அமெரிக்க அதிபராக முயற்சிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
01.07.2024 முதல் 05.07.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.
- லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்று தகவல் வெளியானது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து 6 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்படிப்பிற்காக லண்டன் செல்ல அனுமதி கேட்டு பா.ஜ.க. மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகவும், தற்போது வரை அவரது கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அண்ணாமலை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.
இதற்காக லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்று கடந்த வாரமே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது.
- பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை.
விழுப்புரம்:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.
இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
- பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக 'நீட் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.
தேசிய மகளிரணி தலைவரும், பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,
நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில், 'INDIA Impose NEET, Tamil Nadu Quit India' (நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்), 'இந்தியா ஒழிக' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், நீட் தேர்வு நடந்ததால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு புகார்கள் வந்துள்ளன. மத்திய பாஜக அரசின் உத்தரவுப்படி, இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வை வெளிப்படை தன்மையுடன், நியாயமான முறையில் நடத்திட நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயக வழியில் எதிர்க்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கலாம். போராடலாம். அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், 'நீட் எதிர்ப்பு' என்ற பெயரில், தேச பிரிவினையை தூண்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.
நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களில், 'இந்தியா ஒழிக' என்பது மட்டும் கைகளால் எழுதப்பட்டுள்ளது. ஆனால், 'INDIA Impose NEET, Tamil Nadu Quit India' என்ற பிரிவினையை தூண்டும் வாசகங்கள் அதற்கான பிரின்டிங் பிளாக்' தயாரிக்கப்பட்டு இதிலிருந்து தேசப்பிரிவினை பிரச்சாரத்தை அமைப்பு ரீதியாக திட்டமிட்டு செயல்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. தேசப் பிரிவினையை தூண்டும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனெனில், திமுக, 'தனித் தமிழ்நாடு' என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சி, நமது அரசியல் சட்டம் உருவான பிறகு, பிரிவினை கோரிக்கையை வெளிப்படையாக முன் வைத்தால், கட்சி நடத்த முடியாது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது என்பதால் பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனாலும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை ஒருபோதும் கைவிடவில்லை.
இப்போது பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக 'நீட் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. தேசத்திற்கு எதிரான அதுவும் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் அனுமதிக்க கூடாது. அவர்களை இரும்புக் கரம் கொண்டு கொடுக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் வாசகங்களை எழுதியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு எந்த இடமும் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
- விரைவில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைப்பதற்கான பணிகள் தொடங்கி நடக்கும்.
ஆலந்தூர்:
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டனர். டி.டி.வி. தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புகுழுவை நடத்தி வருகிறார்.
இதனால் அ.தி.மு.க. தொண்டர்களிடையே பிளவு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வால் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து ஒன்றுபட்ட அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும் என்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எனவே விரைவில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைப்பதற்கான பணிகள் தொடங்கி நடக்கும்.
நான் சசிகலாவை சந்திக்கும் நிகழ்ச்சி, உரிய நேரத்தில், தேவைப்படும்போது நாங்கள் சந்தித்து பேசுவோம்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
- வனத்துறை செயலாளராக செந்தில்குமார் நியமனம்.
- உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்.
சென்னை:
தமிழகத்தில் முக்கிய துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது பல்வேறு துறை சார்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த பணியிட மாற்றமானது நிர்வாக ரீதியிலானது என கூறப்படுப்படுகிறது.
அதன்படி, சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்.
பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் தராம் சர்மா நியமனம்.
வனத்துறை செயலாளராக செந்தில்குமார் நியமனம்.
நீர்வளத்துறை செயலாளராக மணிவாசன் நியமனம்.
சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக சந்திரமோகன் மாற்றம்.
உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்.






