என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டியில் வீடு வாடகை எடுத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
- சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பா.ம.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவாவும், பா.ம.க. சார்பில் சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஒட்டு மொத்த தமிழக அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அது போல் பா.ம.க வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கிராமம் கிராமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டியில் வீடு வாடகை எடுத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கடையம், கருவாட்சி, அத்தியூர் திருக்கை, கெடார் உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். கடையம் ஊராட்சியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது இந்த பிரசாரத்தில் பெண்கள் கலந்து கொள்ளாமல் இருக்க தி.மு.க.,வினர் பணம் கொடுத்து அடைத்து வைத்துள்ளதாக பா.ம.க.,வினர் குற்றம் சாட்டினர்.
இதற்கு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து பா.ம.க.,வினர் கடையம் மைதானம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம். எல்.ஏ., அருள் மற்றும் ஏராளமான பா.ம.க.வினர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது பெண்களை போகவிடாமல் தடுக்கும் விதமாக பணம் கொடுத்து அவர்களை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், இதற்கு துணை போகும் போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் அங்கு திடீர் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பா.ம.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர்.
- கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பணிக்காக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்களில் சென்று வருகின்றனர். தினமும் ஷிப்ட் முறையில் பணிபுரியும் இவர்கள் வேலை நேரத்திற்கு ஏற்றவாறு பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றனர்.
அதன்படி இன்று காலை நேர பணிக்காக 6.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அரசு டவுன் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மருத்துவ கல்லூரி செல்லும் டவுன் பஸ் வந்தது. அதில் ஏற அவர்கள் முயன்றனர்.
ஆனால் கண்டக்டர் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில ஏறுங்கள் என கூறினார். இதனால் அவர்கள் அடுத்து வந்த டவுன் பஸ்சில் ஏற முயன்றபோது அந்த கண்டக்டரும் இந்த பஸ்சில் ஏறாதீர்கள் என கூறி அலைக்கழித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பஸ்களை எடுக்க விடாமல் பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வெளியே செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் அங்கேயே நின்றது. மற்ற பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கரந்தை போக்குவரத்து கிளை மேலாளர் சந்தானராஜ், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்கள், அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் என்பதால் எங்களை போன்ற பெண்களை ஏற்ற மறுக்கின்றனர். பஸ்சில் ஏறினாலும் இந்த பஸ் எடுக்க நேரமாகும். அடுத்த பஸ்சில் ஏறுங்கள் என மாறி மாறி கூறுகின்றனர்.
இலவச டிக்கெட் என்பதால் சில கண்டக்டர்கள் பெண்களை ஏற்றாமல் அவமதிக்கின்றனர். அரசே இலவச டிக்கெட் என கூறும்போது கண்டர்கள் அவமரியாதையாக நடந்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.
நாங்கள் 7 மணிக்குள் மருத்துவ கல்லூரிக்கு சென்றால் தான் இரவு பணியில் ஈடுபட்டவர்களை மாற்றி விட முடியும். பஸ்களில் ஏற்ற மறுப்பது பல நாட்களாக நடக்கிறது. இலவச டிக்கெட் என்பதற்காக தான் அவமதிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை பஸ்களை எடுக்க விட மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர்.
இதையடுத்து போக்குவரத்து மேலோளர் சந்தானராஜ், இனி இதுபோல் பிரச்சினை நடக்காமல் பார்த்து கொள்கிறோம். மறியலை கைவிடுங்கள். மாற்று பஸ்சில் உங்களை அனுப்பி வைக்கிறோம் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்டு பெண் பணியாளர்கள் மறியலை கைவிட்டனர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஏறி மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். மேலும் ஆம்புலன்சிலும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த மறியல் போராட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடந்ததால் அதுவரை மற்ற பஸ்களும் செல்ல முடியாமல் நின்றது. மறியலை கைவிட்ட பிறகு மற்ற பஸ்களும் சென்றன. மேலும் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இதேபோல் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,994 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 66.14 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது. 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.67 அடியாக உயர்ந்து உள்ளது.
- அப்துல் ரகுமான், முஜிபுா் ரகுமான் இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பூந்தமல்லி:
பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை சேர்த்தது தொடர்பாக சென்னை, தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சாவூரில் 'ஹிஷாப் உத்தகீர்' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடையவா்கள் என கருதப்படும் 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்து செல்போன்கள், ஹாா்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், சில புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.இதைத்தொடா்ந்து அப்துல் ரகுமான் (வயது 22), முஜிபுா் ரகுமான் (46), ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.
பின்னர் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி, நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதியின் வீட்டிற்கு சென்று நீதிபதி இளவழகன் முன்பு கைது செய்யபட்ட 2 பேரையும் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஜூலை 5-ந்தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
கடந்த வாரம் ராமேசுவரத்திலிருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இலங்கை கடற்படையை கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
- மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது.
- மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்கவிட கூடாது.
சென்னை:
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத்துறை சார்பில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி (இன்று) வரை தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், பள்ளியில் இருந்து பாதுகாப்பு தொடங்குகிறது' என்பதாகும். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:-
இந்த ஆண்டு தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கொண்டாட்டமாக, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டுக்கு பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது. சுவிட்சை ஆப் செய்த பிறகே பிளக்கினை சொருகவோ, எடுக்கவோ வேண்டும். மின்கம்பங்கள் மீதோ, அதன் அருகேயுள்ள மரங்களின் மீதோ ஏறவேண்டாம். எச்சரிக்கை பலகைகள் இருக்கும் இடங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், கம்பி வேலிகள், மின் பெட்டிகளை தொடக்கூடாது.
மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்கவிட கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். ஒரே சாக்கெட்டில் அதிக சாதனங்களை சொருகுவதின் மூலமாக மின்சுமை ஏற்றுவதை தவிர்க்கவும். மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் வேலைசெய்யும் கிரேன்கள் மற்றும் மொபைல் பிளான்ட்களில் இருந்து விலகி இருக்கவேண்டும்.
எலக்ட்ரிகல் சாக்கெட்டுகளில் விரல்களையோ, கம்பி, குச்சி போன்ற பொருள்களையோ சொருகவேண்டாம். சார்ஜ் செய்யும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. இடியுடன் கூடிய மழையின்போது திறந்தவெளிகள், மரங்கள் மற்றும் மின்கம்பி பாதைகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி.
- மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரது பெயரை சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை.
- துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ. 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம் பின்னர் அந்த வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என துணை காவல் கண்காணிப்பாளர் தரப்பு வாதம் முன்வைத்தது.
இந்த வாத்தை ஹென்றி திபேன் தரப்பு ஏற்க மறுத்தது. மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும் என்று மனுதாரர் தெரிவித்தார்.
இதனையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனையடுத்து கருது தெரிவித்த நீதிபதி, "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை" அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக எதிர் மனுதாரரின் ஆட்சேபத்திற்கு பதில் அளிக்கும் படி மனுதாரருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் கையாலாகாத தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது.
- திறனற்ற திமுக அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,
சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று என்று பாட்டாளி மக்கள் கட்சி விரும்பினால், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தும்படி கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் கையாலாகாத தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்காக 2008-ஆம் ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்துகளை வாங்கி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலிடம் ஒப்படைத்தது, மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை ஒப்புக் கொள்ள வைத்தது போன்ற வரலாறுகள் எல்லாம் அந்த ஆட்சியில் திமுக சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்த இரகுபதி போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?
தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்காக மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் திமுக ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்? பதவி விலகி விடலாமே? நாடாளுமன்ற மக்களவையில் திமுக அணிக்கு 39 உறுப்பினர்கள் எதற்கு ? அவர்களும் பதவி விலகி விடலாமே? அதிகாரத்தை சுவைப்பதற்கு மட்டும் தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களா?
தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி கடமையை செய்ய திறனற்ற திமுக அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது.
பிகார், கர்நாடகம், ஒதிஷா, ஆந்திரம், தெலுங்கானா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்று தட்டிக்கழிக்கவில்லை. அந்த அரசுகளே 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. அதே வழியில் பயணிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம், சமூகநீதி வழங்க மாட்டோம் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.
தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கும் திரு. இரகுபதி அவர்கள் தமக்குத் தெரிந்த சட்ட அறிவை பயன்படுத்தி, மனசாட்சிக்கு அஞ்சி தமிழக அரசுக்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதை விடுத்து திமுக தலைமை சொல்லிக் கொடுத்ததையே கிளிப்பிள்ளை போல மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
- டாஸ்மாக் நிறுவனம் முன் வைக்கும் காரணத்தை ஏற்று கொள்ள முடியாது.
- பாமக கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மிலி மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன் வைக்கும் காரணத்தை ஏற்று கொள்ள முடியாது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாச்சார சீரழிவு படுகுழிக்கு தள்ளப்பட்டு விடும். ரூ. 140 கொடுத்து மது அருந்த முடியாதவர்கள், கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிப்பதாக டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறைந்த விலையில் டாஸ்மாக் நிறுவனமே மதுவை விற்பனை செய்தால் கள்ளச்சாராயத்தை தடுக்கலாம் என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதை விட மிக மோசமான வாதம் இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டு 90 மிலி மதுவை டெட்ரா பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டது. பாமக கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
தமிழ்நாடு முன்னிற்கு வரவேண்டும் என்றால் மது, கள்ளச்சாராயம், போதைபொருட்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் எனவும், 90 மி.லி டெட்ரா பாக்கெட் திட்டத்தை கைவிட வேண்டும் என்வும் கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அதை எதிர்த்து பா.ம.க மாபெரும் பேராட்டத்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.
- மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம், இந்தி மொழியில் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும், புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர்.கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வக்கீல்கள் மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் பூபேஷ் , திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி ஆகஸ்டு 7-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்தப்படும் வரை தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஏற்கனவே தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதால் தொழிலாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலையின்றியும், ஊதியம் இல்லாமலும் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது அவரது காரை மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவரது கட்சியினர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியினர் உரிய அனுமதி இல்லாமல் அதிகமான வாகனங்களில் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.






