என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
    • இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் குண்டு மேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பீர்க்கன்கரணை போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கொலை செய்யப்பட்ட அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரிடமும் நண்பர்களாக பழகியவர்களே இந்த கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    போதைப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்டிருந்த மோதலே பூதாகரமாக வெடித்து கொலையில் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அதன் பின்னணி பற்றி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 5 பேர் நேற்று இரவு அண்ணாமலை மற்றும் தமிழரசனை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

    தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வைத்து ஏற்பட்ட மோதலில்தான் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

    சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் அரி சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் சவாரிக்கு வந்தவர்கள் திரும்பி வராததால் சுடு காட்டுக்கு சென்று அவர் பார்த்தபோதுதான் அண்ணாமலையும், தமிழரசனும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

    இதனால் பதறியடித்துக் கொண்டு ஓடிய டிரைவர் அரி இதுபற்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பிறகே போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.

    மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • 01.05.2024 முதல் 30.05.2024 வரை மொத்தம் 84,21,072 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • அதிகபட்சமாக 21.06.2024 அன்று 3,27,110 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.05.2024 முதல் 30.05.2024 வரை மொத்தம் 84,21,072 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக 21.06.2024 அன்று 3,27,110 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2024, ஜூன் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,05,316 பயணிகள் (Online QR 1,86,140; Static QR 2,55,839; Paper QR 21,30,806; Paytm 4,06,230; Whatsapp - 4,33,352; PhonePe – 2,72,300; ONDC – 20,649), பயண அட்டைகளை(Travel Card Ticketing System) பயன்படுத்தி 31,33,011 பயணிகள்,

    டோக்கன்களை பயன்படுத்தி 30,752 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 3,757 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 15,61,001 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000)மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளது.

    • 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
    • படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில், நான்கு படகுகளுடன் 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 15-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் ஒரு மீனவர் 18 வயதிற்கு குறைவாக இருந்ததால் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மீதமுள்ள 24 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நான்கு படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கியும், சாலை மறியல் செய்தும் போராட்டங்களை மேற் கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு உமா தேவி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனைதொடர்ந்து, அனைத்து நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற் கொள்ளுவது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் வருகிற 5-ந்தேதி பாம்பன் பேருந்து பாலத்தை முற்றுகையிட்டு பேரணியாக மண்டபம் ரெயில் நிலையத்திற்கு சென்று சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வடக்கு துறை முகத்தில் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு மீனவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்திய மீனவர்கள் என கருதி மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும்.
    • 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 1980-ம் ஆண்டு முதல் 68சதவீத இட ஒதுக்கீடும், 1989-ம் ஆண்டு முதல் 69சதவீத இட ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளன. இதற்கிடையே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தினேஷ் என்பவர் புதிய வழக்கை தொடர்ந்திருப்பதால் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    மாராத்தா இட ஒதுக்கீடு செல்லாது என்று 2021-ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் மீதான சீராய்வு மனு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டு விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு இம்மாதம் 8-ந்தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும். அதைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை தவறாக சொல்லிக்கொண்டே இருந்தார்.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்ட உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் கவர்னரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவி இருக்கும்.

    இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

    பாராளுமன்றத்திற்கு என்று ஒரு நடைமுறை இருக்கின்றது. ஆனால் ராகுல் காந்தி படத்தை காண்பித்து வருகின்றார். 3 அமைச்சர்கள் எழுந்து இதற்கு பதில் சொன்னார்கள். ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை தவறாக சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள்.

    இன்னுயிரை நாட்டிற்காக ஈன்றவர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை என்று ராகுல் சொன்னார். உடனடியாக ராஜ்நாத் சிங் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

    விவசாயிகளுக்கு பயிர்களுக்கு விலை நிர்ணயம் இல்லை என்று தவறான கருத்தை சொன்னார். அதற்கும் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டி இருந்தது.

    பாராளுமன்றத்தை பார்த்தீர்கள் என்றால் ஏதோ விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்று ராகுல் பேசுகிறார். தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 எம்.பி.க்கள் உள்ளனர். ராகுல் காந்தி இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு பேசினாலும் 40 எம்.பி.க்கள் வாயை திறக்காமல் அமர்ந்திருந்தது வேதனை அளிக்கக்கூடியது. இவர்களால் தமிழகத்திற்கு எந்த பலனும் இருக்காது.

    சத்தம் போடுவார்கள் அவ்வளவு தான், ஒரு வேதனையான நிலையை பாராளுமன்றத்தில் பார்த்து இருக்கின்றோம். இதனை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் பிரதமர் தயாராக இருப்பார் என்பது எனது கருத்து.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்ட உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் துறை சார்ந்த அமைச்சர்கள் அங்கு போய் பார்க்கவில்லை. விசாரணை வேண்டும் என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள். தமிழக அரசாங்கமும் பயப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு, தமிழக எம்.பி.க்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தான் மன வேதனை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வழக்கை பொருத்தமட்டில் முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.
    • தற்போது புதிய சட்டமான பாரதிய நகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    திருச்சி:

    மத்திய அரசு நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(சி.ஆர்.பி.சி), மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களின் பிரிவுகளை வடமொழி தலைப்புகளில் பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா, பாரதிய சக்ஷய அதிநயம் என மாற்றி புதிய சட்டங்களாக கொண்டு வந்தது.

    இந்த 3 சட்டங்களும் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. அதன்படி தமிழகத்திலும் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ஏற்கனவே தமிழக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து நேற்று திருச்சி மாநகரில் புதிய சட்டங்களின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருச்சி புத்தூர் பகுதியில் தன்ராஜ்(வயது 43) என்ற பெயிண்டர் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இந்த வழக்கை பொருத்தமட்டில் முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது புதிய சட்டமான பாரதிய நகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் அதே காவல் நிலையத்தில் குட்கா தொடர்பான வழக்கு பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா (பி. என். எஸ்.) புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. புறநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 வழக்குகள் புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    லால்குடி காவல் நிலையத்தில் குட்கா பிடிபட்ட வழக்கில் பி.என். எஸ். புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று கானக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராவல் மண் கடத்தல் தொடர்பான வழக்கு பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர்

    சோமரசம்பேட்டையில் குடிபோதைக்கு அடிமையான புருஷோத்தமன் வயது 65 என்பவர் மது குடிக்க குடும்பத்தினர் தடை விதித்ததால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த வழக்கு புதிய சட்டத்தின் கீழ் பதிவானது.

    மணப்பாறை காவல் நிலையத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி படுகாயம் அடைந்த வழக்கு பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதே போன்று கள்ளக்குடி காவல் நிலையத்தில் 7-ம் வகுப்பு மாணவி பிரக்சா பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பாக டிரைவர் பஸ்சை இயக்கியதால் கீழே விழுந்து காயம் அடைந்தார் இந்த வழக்கு பி.என். எஸ்.சட்டத்தின் கீழ் பதிவானது.

    மேலும் பெட்டவாய்த்தலையில் ஒரு விபத்து வழக்கும், வையம்பட்டியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கும் பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவானது.

    • தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • மேட்டூர் அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 124,80 உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 8787 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 96.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 526 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 269 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 78.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1542 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 20ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 876 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 39.70 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • வெடி பொருட்களுடன் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மதுரை வீரன் புகார் அளித்தார்.
    • சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்தது தெரிய வந்தது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட செம்பரான்குளம் பாண்டியன் பாறை என்ற இடத்தில் வனக்காப்பாளர்கள் மதுரைவீரன், சிவக்குமார் வேட்டை தடுப்பு காவலர் காமராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு 15 ஜெலட்டின் குச்சிகள், 23 டெட்டனேட்டர்கள், 18 என்.இ.டி. டெட்டனேட்டர் ஆகியவை கிடைத்தன. கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களுடன் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் மதுரை வீரன் புகார் அளித்தார்.

    அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. பிரதீப், டி.எஸ்.பி. மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், நக்சல் ஒழிப்பு போலீசார், ஒட்டன்சத்திரம் ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான வனக்குழுவினர் ஆகியோர் சம்மந்தப்பட்ட பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீசார் விசாரணையில் தனியார் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதற்காக இந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. அப்போது பணியில் இருந்த கம்ப்ரசர் வாகனம் விபத்துக்குள்ளாகவே கோவிந்தராஜ் என்பவர் படுகாயமடைந்தார்.

    இதனால் சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வெடி பொருட்களை பதுக்கிய கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (52), வெடிபொருட்களை வழங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த வேல்முருகன் (52), சரவணன் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து மாவட்ட எஸ்.பி. பிரதீப் தெரிவிக்கையில், செம்பரான்குளம் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக இந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடையவே வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நக்சல்,பயங்கரவாத நடமாட்டம் குறித்த எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றார்.

    கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பயங்கரவாத பயிற்சி மேற்கொண்ட நவீன் பிரசாத் என்பவரும் சுட்டு கொலை செய்யப்பட்டார். எனவே வனப்பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விசாரணையில் இறந்து கிடந்தவர் மாயமான முரளி என தெரிய வந்தது.
    • டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கருப்பண்ணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் முரளி (26). கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வித்யஸ்ரீ. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் முரளி கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யஸ்ரீ கணவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை சாஸ்திரி நகர் அருகே ரெயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் முட்புதர் அருகே சென்று பார்த்த போது கழுத்தில் வெட்டு காயத்துடன் வாலிபர் ஒருவர் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இறந்து கிடந்தவர் மாயமான முரளி என தெரிய வந்தது. அவரது கழுத்தில் ஆழமான காயம் இருப்பது தெரிய வந்தது. அவரது உடல் அருகே சில மது பாட்டில்களும் இருந்துள்ளன. போலீசார் விசாரணையில் முரளி பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் முரளியின் மனைவி வித்யஸ்ரீ தனது கைக்குழந்தையுடன் சம்பவ இடத்திற்கு வந்து முரளி உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் முரளி உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இடம் அருகே மது பாட்டில் இருந்ததால் மது தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
    • திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2024-2025-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

    இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

    தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில், வராகியம்மன் கோவில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவில் , திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

    கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சூலக்கல் சூலக்கல் மாரியம்மன் கோவில், கோயமுத்தூர், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

    திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

    மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோவில், சோழவந்தான், ஜனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்ளுக்கு ஒரு பயணத்திட்டம்,

    திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, பகவதியம்மன் கோவில், முப்பந்தல், இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம் ஒன்னு விட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவில், குழித்துறை சாமுண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    ஆடி மாத அம்மன் கோவில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது ஜூலை 19, 26 ஆகஸ்டு 2, 9 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஆன்மீக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

    இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணைய தளமான www.hrce.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 17.7.2024-க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.

    மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111, சென்னை மண்டலத்திற்கு 99417020754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114, கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422-2244335, திருச்சி மண்ட லத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தங்கம் விலை நேற்று உயராத நிலையில் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று உயர்ந்து விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,520-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,690-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 95.50-க்கும் கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து பார் வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை நேற்று உயராத நிலையில் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று உயர்ந்து விற்பனையாகிறது.

    ×