என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
    • தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அக்கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை

    இதனால் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினரின் வாக்குகளை சேகரிக்க பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல தே.மு.தி.க. பிரமுகர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் பா.ம.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ், பேனர்களை பா.ம.க.வினர் எடுத்து செல்கின்றனர். மேலும், தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம். இதனை நிறைவேற்ற மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார கூட்டங்களில் பேசி அ.தி.மு.க.வினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    • முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
    • போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவத வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

    இதில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண் ஊழியர்கள் 2 பேர், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 1.15 லட்சத்தை திருடியது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை பணத்தை அங்கு பணி செய்யும் 2 பெண் ஊழியர்களே திருடிய சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இனியும் தாமதிக்காமல் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களது படகுகளை மீட்பதற்கும் இந்திய வெளியுறவுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளில் மீன் பிடிப்பவர்கள் ஆவர். இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். இனியும் தாமதிக்காமல் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
    • பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்

    சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெறுவோம்.
    • பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்டுவோம் என்பார். நாங்கள் அதனை தடுப்போம்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர்பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    பின்னர் பேட்டி அளித்த துரைமுருகன் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெறுவோம்.

    பா.ம.க.வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அதுதான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்டுவோம் என்பார். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 17-ந் தேதி முதல் தடை விதித்தது.
    • பஸ்களை சிறைபிடிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலமாக அனுமதி.

    சென்னை:

    வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை கடந்த 17-ந் தேதி முதல் தடை விதித்தது.

    இதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை சிறைபிடித்த நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் ஆல் இந்தியா பெர்மிட் மூலம் ஆம்னி பஸ்களை தமிழ்நாட்டில் இயக்கிக் கொள்ளலாம். அந்த பஸ்களை சிறைபிடிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலமாக அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தற்போது வழக்கம் போல வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களை இயக்கத் தொடங்கி உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் , கொச்சின், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு செல்லக் கூடிய வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

    அதேசமயம் தமிழகத்திற்கு உள்ளேயே வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தற்போது வரை இயக்கவில்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெற்று பெறுவோம். பா.ம.க. வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தடுப்பனை கட்டுவோம், கட்டுவோம் என்பார்கள். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 3.07 கோடி கூடுதல் செலவாகிறது.
    • அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி முழுவதும் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு தினகூலி வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 3.07 கோடி கூடுதல் செலவாகிறது.


    அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது. சமீபத்தில் அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    • பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • உதவி சிறை அலுவலர்களுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர்களுக்கு வேலூரில் அமைந்துள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் டாக்டர். மகேஷ்வர் தயாள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து 60 சதவீதத்துக்கு கீழ் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார். மேலும் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:-

    பள்ளிகளில் மாதந்தோறும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தி நன்றாக படிக்கும் மாணவர்கள், மிதமான முறையில் படிக்கும் மாணவர்கள், சரியாக படிக்காத மாணவர்கள் என கண்டறிந்து அவர்களை அட்டவணைப்படுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி பயிற்சி அளித்து தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கலாம். 10 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளை தனித்தேர்வுகள் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ், மற்றும் கேடயத்தை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

    • மரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
    • போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை

    பொன்னேரி:

    சோழவரம், செங்குன்றம்,பொன்னேரி, காரனோடை, பழைய எருமை வெட்டிபாளையம் புதிய எருமை வெட்டி பாளையம், பூதூர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

    அழிந்து வரும் பனைமரங்களை பாதுகாக்க அதனை வெட்டுவதற்கு அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது. மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்ற பின்னரே தனியார் நிலத்தில் உள்ள மரத்தினை அகற்ற வேண்டும் எனவும் அரசு நிலத்தில் உள்ள பனை மரங்களை அகற்ற உரிமை கிடையாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் அரசு நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இரவில் வந்த மர்மகும்பல் எந்திரத்தால் மனைமரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கும், சோழவரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. அரசு நிலத்தில் இருந்த பனை மரங்களை நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் எந்திரத்தால் வெட்டி சாய்த்து உள்ளனர். அதனை வெட்டிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ரூ.20.29 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை வரும் 22-ந்தேதி 2.30 மணி முதல் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    இந்நிலையில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20.29 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

     தொழில்நுட்ப சேவை கட்டடம், எஸ்எஸ்எல்வி ஏவுதள மையம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி ஒப்பந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை வரும் 22-ந்தேதி 2.30 மணி முதல் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    ×