என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மணிமுத்தாறு அருவிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.
- கடந்த 6 நாட்களுக்கு முன்பு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.
இந்நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்தனர். அருவியில் தண்ணீர் வரத்து இன்று காலை முதலே குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
- 200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர்.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக அமைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் பணிக் குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 25 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சட்டசபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அனைவரும் விக்கிரவாண்டியில் முகாமிட்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் 2 வீதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பிரிக்கப்பட்டு அங்குள்ள வாக்காளர்களின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர்.
200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டீ, காபி கொடுத்து உபசரிக்கின்றனர். வடை, பஜ்ஜி உள்ளிட்டவைகளும் இலவசமாக கிடைக்கிறது.

காலை, மாலையில் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து செல்லுங்கள், உங்கள் பகுதி குறைகளை சொன்னால் நிறைவேற்றி தருகிறோம் என்று கூறுகின்றனர். இதனால் தி.மு.க. தேர்தல் அலுவலகங்களில் எப்போதும் கூட்டம் 'களை' கட்டுகிறது.
பா.ம.க.வை பொறுத்தவரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார பலமாக ஒவ்வொரு பகுதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.வை கடுமையாக சாடுகிறார்.
மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்பதை கண்காணித்து அன்புமணி ராமதாசுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.
அதன் மூலம் பிரசார வியூகம் மாற்றப்படுகிறது. மதுவின் தீமைகளை எடுத்துக் கூறி பெண்களின் வாக்குகளை மொத்தமாக பெற்றிட டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சவுமியா ஆகியோரும் தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். பா.ம.க. எங்கெல்லாம் எழுச்சியாக உள்ளதோ அங்கு கூடுதலாக தி.மு.க. வினர் வரவழைக்கப்பட்டு களப் பணியாற்றுகின்றனர்.
மொத்தத்தில் இந்த தேர்தலில் சாதனைகளை சொல்லி தி.மு.க.வினர் ஓட்டு கேட்கும் நிலையில் வேதனைகளை சொல்லி பா.ம.க. வினர் ஆவேசமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு செல்லும் என்பதை பொறுத்தே வெற்றி அமையும் என தெரிகிறது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகளும் டெல்லி செல்ல உள்ளனர்.
இந்நிலையில் சேலத்தில் இன்று மாலை உள்ள தனது இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
- சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
- தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.
சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது.
சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர்.
- மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேரும் இருக்கின்றனர்.
மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து அவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் உள்ளிட்டவற்றை கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் மக்கள் திட்ட பணிகள் நடைபெறாமல் முடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி சென்றனர்.
ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள கவுன்சிலர்கள் மேயர் சரவணனை கண்டித்து புறக்கணித்தனர்.
இந்நிலையில் தி.மு.க தலைமையகத்தில் இருந்து மேயர் சரவணனுக்கு அழைப்பு வந்ததன் பேரில் அவர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு உள்ளார்.
அவரை அமைச்சர் கே.என். நேரு நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இந்நிலையில் தற்போது மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி விட்டதாக பரவலான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி தலைமையால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், புதிய மேயரையும் கட்சியே அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவலாக இருந்து வருகிறது.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
- நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெற பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் துரைராஜ் விண்ணப்பித்தார். அப்போது தடையின்மை சான்று வழங்குவதற்கு துரைராஜிடம் துணை தாசில்தார் பழனியப்பன் (வயது 42) ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை பழனியப்பனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி துரைராஜ் நேற்று மாலை பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே மறைந்திருந்தனர்.
அங்கு துரைராஜ் லஞ்ச பணத்தை பழனியப்பனிடம் கொடுக்க முயன்றார். அப்போது பழனியப்பன், அலுவலகத்தில் இருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுச்சாமியை (42) லஞ்ச பணத்தை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து நல்லுச்சாமி துரைராஜிடம் இருந்து பணத்தை வாங்கி, பழனியப்பன் வைக்க கூறிய இடத்துக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று நல்லுச்சாமியையும், பழனியப்பனையும் கையும், களவுமாக பிடித்தனர். அப்போது நல்லுசாமி துணை தாசில்தார் கூறியதன் அடிப்படையில் தான் பணம் பெற்றதாக கூறினார். இந்த நிலையில் துணை தாசில்தார் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
இதையடுத்து நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக கூறிய துணை தாசில்தார் பழனியப்பனை சிகிச்சைக்காக அவரது மேலதிகாரி தாசில்தார் சரவணன் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்ட போது, அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேண்டும் என்று நெஞ்சு வலிப்பதாக கூறி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து இன்று காலை அவரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேம சித்ரா, தாசில்தார் சரவணனை தொடர்பு கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வாருங்கள்.பழனியப்பனிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
அப்போது காலை 7 மணி அளவில் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்கேன் எடுக்க செல்வதாக வார்டில் இருந்து சென்ற அவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு ஹேம சித்ரா கூறும்போது, பழனியப்பனை விசாரணை செய்வதற்கு முன்பாக அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவரது உயர் அதிகாரியான தாசில்தார் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவர் அங்கிருந்து மாயமானதாக தகவல் சொல்கிறார்கள். நான் தாசில்தாரிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன் என்றார்.
தப்பி ஓடிய பழனியப்பனுக்கு பெரம்பலூர் நாரணமங்கலம் சொந்த ஊராகும். அவர் அங்கு பதுங்கி இருக்கிறாரா என பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
லஞ்சம் வாங்கிய வழக்கில் பிடிபட்ட துணை தாசில்தார் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரம்ப லூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- மறக்காமல் வாக்குச்செலுத்துங்கள்!
- இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எக்ஸ் தளத்தில்,
பிரிட்டன் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் என்னருந்தமிழ் உறவுகளுக்கு வெற்றி வாழ்த்துகள்!
சூலை 04 அன்று நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில், என் உயிர்க்கினிய பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவரும், வரலாறு தந்துள்ள இப்பெரும் வாய்ப்பைத் தவறவிடாது பயன்படுத்தி நமது உறவுகளை வெற்றிபெறச் செய்து தமிழ்ப்பேரினத்தின் ஓர்மையையும், வலிமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுங்கள்!
மறக்காமல் வாக்குச்செலுத்துங்கள்!
நாம் மானத்தமிழர் என்பதை உலகிற்குக் காட்டுங்கள்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்! என்று தெரிவித்துள்ளார்.
- சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
- 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பீட்டில் 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நிலவழிகாட்டி மதிப்புகள் ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு 2021-ல் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டன.
இந்த நிலையில் 2012-ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகளை மீண்டும் கடைபிடிப்பதாக, பதிவுத்துறை 2023-ல் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து விடுபட்ட தெருக்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக கூறி, அனைத்து பகுதிகளுக்குமான நில வழிகாட்டி மதிப்புகளை 70 சதவீதம் வரை உயர்த்தும் பணிகள் துவங்கியது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட சர்வே எண்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பை 10 சதவீதம் வரை அரசு உயர்த்தி உள்ளது.
வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதனை தற்போது சீரமைத்துள்ளது.
இதன்படி ஆலந்தூர் சாலையில் ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு கடந்த ஜூன் மாதம் வரை ரூ.5,500 ஆக இருந்தது. நேற்று முதல் ரூ.6,100-ஆக உயர்ந்துள்ளது.
ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரு சதுர அடி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6,600-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அபிராமபுரம் 3-வது தெருவில் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17, 600-ஆக அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட 2.19 லட்சம் தெருக்களில் உள்ள 4.46 கோடி சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர் போன்ற நகரங்களில் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது. மற்ற ஊர்களில் அந்தளவுக்கு உயர்வு இல்லை.
புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், 8,305 ஆவணங்கள் புதிய மதிப்பீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10-ந்தேதியும் மிகவும் முக்கியம்.
- 36-ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும்.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி 36-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்ற உண்மையை சொல்லி முடிக்கும்போதே, 35 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சிப் பொறுப்பை அடைய முடியவில்லை என்ற நமது இயலாமையை ஒப்புக்கொள்ளும்போது மனம் வலிக்கிறது. எதனால் அது சாத்தியமாகவில்லை என்ற வினா எனது மனதில் நிறைகிறது.
வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20 சதவீதம் இட ஒதுக்கீடு, 10.50 சதவீதம் வன்னியர் இடஓதுக்கீடு, 3.50 சதவீத இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3 சதவீதம் அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15சதவீத, பழங்குடியினருக்கு 7.50 சதவீத இட ஒதுக்கீடு என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது நாம் தான்.
வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10-ந்தேதியும் மிகவும் முக்கியம். இன்னும் கேட்டால் ஜூலை 10-ந்தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெறச் செய்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு நீங்கள் எனக்கு வழங்கும் மறக்க முடியாத பரிசாக இருக்கும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.
விக்கிரவாண்டியில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தைக் குடித்து 65 பேர் உயிரிழந்தது, சமூகத்தின் அடித்தட்டில் வாழும் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்தது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அனுபவித்து வரும் துயரங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் மத்தியில் எல்லையில்லா கோபமும், கொந்தளிப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது. அதை பாட்டாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
36-ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி நமது சாதனைகளை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
36-ஆம் ஆண்டில் பா.ம.க: விக்கிரவாண்டி தொகுதி வெற்றியே நீ எனக்கு தரும் பரிசு!என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! pic.twitter.com/fzp3Fujf9P
— Dr S RAMADOSS (@drramadoss) July 2, 2024
- பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
- 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மதிக்கோன்பாளையம் போலீசார் வழக்கம் போல் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் வாகன தணிக்கையில் நிறுத்திய போது, அவர்கள் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து தருமபுரி அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் இருவரும் தருமபுரி பகுதியைச் சார்ந்த ராஜா, வேடியப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் வைத்திருந்ததும் அதில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்ததாகவும், அதற்காக வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து பண தேவைகள் மற்றும் ஆன்லைன் விளையாடுவதற்காக பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, இருசக்கர வாகனம், சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் வரும், பெண்கள், முதியோர் என பலரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்மேடு பகுதியில் பெண் ஒருவரிடம் 6 அரை சவரன் தங்க சங்கிலி பறித்து சென்றதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் வேடியப்பன் மற்றும் ராஜா 2 பேரையும் மதிக்கோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
- அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° -28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 6-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார்.
- மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கோவை:
தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் இன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அதேபோல் இன்றும் வழக்கம் போல் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் திடீரென குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதேபோல மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறைதீர்க்கும் கூட்டம் ரத்தானது கோவையில் மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது.

இதுதொடர்பாக மேயர் கல்பனாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது கணவர் ஆனந்தகுமார் பேசினார். அவர் கூறுகையில் மேயருக்கு தற்போது உடல் நலம் சரியில்லை. இதனால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றார்.
இதுதொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது மேயர் ராஜினாமா செய்வார் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என கூறி தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி தேர்தல் நடந்தபோது பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, மாநகராட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டார். இதனால் தி.மு.க. அபார வெற்றி பெற்றது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்தவர்கள் என பலர் தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மேயராக அறிவிக்கப்பட்டவர் தான் கல்பனா.
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து அவர் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகு சில பிரச்சனைகள் அவரை தொடர்ந்தது. மேயரின் தாயார் வசித்த வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு அந்த பெண் போலீஸ்நிலையம் வரை சென்றார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மேயர் மீதே அவர் புகார் கொடுத்தார். அப்போது இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின் சந்தையில் வசூல் செய்வது தொடர்பான பிரச்சனையில் மேயரின் கணவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலும் மேயருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் மேயர் கல்பனா வார்டில் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுகள் குறைவாகவே கிடைத்திருந்தது.
அந்த வார்டில் அண்ணாமலை 330 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். மிக முக்கிய பொறுப்பில் உள்ள மேயரின் வார்டில் வாக்குகள் குறைந்தது தி.மு.க. மேலிடத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதுதொடர்பாக கட்சி மட்டத்தில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் தான் மேயர் கல்பனா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவியுள்ளது.
இந்தநிலையில் கல்பனாவிடம் இருந்து மேயர் பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அந்த பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் பலர் கோதாவில் குதித்துள்ளனர். மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.






