என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
- முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதலும் வன்முறையும் தலைதூக்கியிருப்பது ஆபத்து வாய்ந்தது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்த்ரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலியில் மாணவர்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வு அதே பள்ளிகூடத்தில் ஏற்கனவே நிகழ்ந்ததுள்ளது. இன்றைக்கு மாணவர்களிடையே காணப்படும் சாதி மோதல் என்பது தொடர்கதையாக மாறினால், அவர்களின் எதிர்காலமும் வருங்கால சமுதாயமும் பாதிக்கூடிய வகையில் அமைய வாய்ப்பு இருக்கிறது.
மாணவர்களுக்குள் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஒரே மாதிரியான சீருடைகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், எத்தனை பாரதியார், பெரியார் வந்தாலும், சாதிகள் இல்லை என்று சொன்னாலும், இந்த சாதி வெறி என்பது. இளம் வயதிலேயே, அதுவும் பள்ளிக்கூடங்களிலிருந்து தொடங்குவது, எதிர்காலத் தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும். எனவே முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.
- சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள்.
- பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,
சென்னை அடையாறு எல்.பி.சாலையில் மாநகரப் பேருந்து எரிந்ததாக செய்திகள் வந்துள்ளன. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள்.
விடியா திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாதது குறித்தும், முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்கும் பழுதடைந்த பேருந்துகள் குறித்தும் தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இதுபோன்று மக்கள் உயிருக்கே ஆபத்தான விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அரசுப்பேருந்துகளில் நம்பி பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளுக்கு தர ஆய்வு நடத்தியும், புதிய பேருந்துகளை இனியாவது கொள்முதல் செய்தும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- வெறுப்பு அரசியலை விதைப்பவர்கள் நாங்கள் இல்லை.
- அவரது கருத்து சுதந்திரம் அவர் பேசலாம் அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,
அண்ணாமலை ஜோபைடன் ஆக போகிறார், கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் என்று ஊரில் ஒரு பழமொழி உள்ளது. அது போல அண்ணாமலை செயல் உள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியவில்லை, வெளிநாடு சென்று என்ன செய்ய போகிறார்.
இவரது வருகையை நினைத்து ஜோ பைடன் என்னடா ஒரு ஆர்எஸ்எஸ் கும்பல் இங்கு வருகிறேதே என்று அதிர்ந்து போய் உள்ளார். இவரை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்று ஜோ பைடனும், டிரம்பும் ஆலோசனையில் இறங்கி உள்ளனர்.
நான் தமிழனாக இருந்தாலும் காவிரி பிரச்சனையில் கன்னட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நாங்க எங்காவது ஒரு இடத்தில் பேசியிருக்கிறோமா? இல்லை. ஷோபா காராத் தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைத்து சென்றார் என்றார்கள் அதையும் கண்டிக்கவில்லை. வெறுப்பு அரசியலை விதைப்பவர்கள் நாங்கள் இல்லை. ஆனால் அவர் எல்லா இடங்களிலும் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறார்.
காங்கிரஸ் திமுகவின் அடிமை என்றார். இவர் மூன்று கட்சிகளில் இருந்து வந்தவர் காங்கிரஸ் வரலாறு தெரியாது என்றார் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உள்ளது. அதனால் நாங்கள் மிகவும் பணிவுடன் தான் அவருக்கு கூறியிருக்கிறோம் இதெல்லாம் அரசியலில் வேண்டாம் என்று.
நல்ல தலைவர்கள் இருப்பதால் தான் தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அவரது கருத்து சுதந்திரம் அவர் பேசலாம் அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்தியர்கள் என்றால் அன்பு செலுத்துபவர்கள், எல்லா மதம், ஜாதியையும் அரவணைப்பவர்கள், வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உலகம் முழுவதும் இந்தியர்கள் மேல் ஒரு பெருமை இருக்கிறது. அந்த பெருமையை சீர்குலைப்பதற்காக குறுகிற கண்ணோட்டத்தில் மத அரசியலை கையில் எடுத்து செய்திருந்தார்கள் இப்போது அந்த மத அரசியல் தோல்வி அடைந்திருக்கிறது.
காலை முதல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது அண்ணாமலையுடன் சேர்ந்த சகா அவருக்கு நெருங்கியவர் 267 கிலோ தங்கத்தை கடத்தி சிக்கி இருக்கிறார். என்னிடம் ஆதாரம் உள்ளது இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்ல போகிறார்.
எங்களை மிரட்டுவது, வழக்கு போடுவது என்று அண்ணாமலை உள்ளார். நாங்கள் எதற்கு தயாராக இருக்கிறோம். எங்கள் வீடுகள் எப்போதும் திறந்தே இருக்கும், எப்போது வேண்டுமென்றாலும் வாங்க தவறு செய்திருந்தால் எடுத்து கொண்டு போங்க, கொள்ளை அடித்த பணம், ஊழல் பணம், எல்லா மாநிலங்களில் ஆளுங்கட்சியில் இருக்கிற பணம் என்று எல்லாத்தையும் எடுத்து கொண்டு போங்க.
எங்களிடம் ஒன்றும் இல்லை. காங்கிரஸ் தொண்டர்கள் கொடுத்த 130 கோடி பணத்தை முடக்கினீர்கள். அரசியலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தலுக்கு எப்போதும் பணம் கொடுப்பார்கள் அதை கூட நிறுத்திவிட்டார்கள். எங்கள் தோழர்கள், எங்கள் தொண்டர்கள் அனைவரும் கையேந்தி வசூல் செய்து இந்த தேர்தலை நடத்தி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
- ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பிக்க அறிவிப்பை வெளியாகியுள்ளது.
- விபரங்களுக்கு www.boat-srp.com (News & Events) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பிக்க அறிவிப்பை வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம் – சென்னை) இணைந்து பட்டய பொறியியலில் (இன்ஜினியரிங் – எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ம் வருடங்களில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களிடம் இருந்து, ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கூறிய தகுதி உள்ள மாவணவர்கள் Online-ல் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு www.boat-srp.com (News & Events) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி. 31.07.2024. என்ற அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.
- மீனவர்கள் 2024 ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
- தமிழ் மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக மீன்பிடித்து வந்த கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு பறித்தது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் ராமந்தபுரத்தில் உள்ள பாம்பனில் இருந்து 25 மீனவர்கள் மற்றும் 4 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள் காரணமாக, மீனவர்கள் 2024 ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
1974ல் கச்சத்தீவை கைவிட்டதால், கடந்த பல தசாப்தங்களாக இந்த தொடர் கைதுகளால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். 1974 ஒப்பந்தம், பிரிவு 5, மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவுக்கு வருகை தராமல் கலாசார மற்றும் பொருளாதார உரிமைகளை வழங்கியது. பயண ஆவணங்கள் அல்லது விசாக்கள் பெறுதல். பிரிவு 6 இன் கீழ், பாரம்பரிய (வரலாற்று) நீரில் இரு நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர், எமர்ஜென்சியின் போது, மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவின் எல்லைகளை தீர்மானிக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே (மார்ச் 23, 1976) மற்றொரு ஒப்பந்தம் போடப்பட்டது. பிரிவு 5இல், முன்னர் வழங்கப்பட்ட கலாச்சார மற்றும் பொருளாதார உரிமைகள், 'ஒவ்வொரு கட்சிக்கும் நீர் மற்றும் பிராந்திய கடல், அத்துடன் தீவுகள் ஆகியவற்றின் மீதும், எல்லையில் அதன் பக்கத்தில் விழும் இறையாண்மை மற்றும் 'ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. இறையாண்மை உரிமைகள் மற்றும் கான்டினென்டல் ஷெல்ஃப் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் அவற்றின் வளங்கள் மீது, வாழும் அல்லது உயிரற்றவை, மேற்கூறிய எல்லையின் அதன் பக்கத்தில் விழும்.
தமிழ் மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக மீன்பிடித்து வந்த கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு பறித்தது. நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திறமையான தலைமையின் கீழ், நமது தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள இந்த நீண்டகால நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் முயற்சியில் நமது வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்றி கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், கைதிகளை முன்கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
On behalf of @BJP4TamilNadu, we request the intervention of our External affairs ministry to facilitate the detainees' early repatriation and the release of their fishing boat and to find a permanent solution to the Katchatheevu issue that will save our Tamil Fishermen from these… pic.twitter.com/dlNEGCxiAt
— K.Annamalai (@annamalai_k) July 2, 2024
- 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.
- தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.
மையச் சட்டப் புத்தகங்களின் பட்டியல், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013, இந்திய அரசுச் சின்னம் (முறையற்று பயன்படுத்தப்படுவதைத் தடை செய்தல்) சட்டம், 2005, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005.
பேரழிவினைச் சமாளித்தல் சட்டம் 2005, பெற்றோர்களையும் மூத்த குடிமக்களையும் பேணுதல் மற்றும் அவர்களின் நல் வாழ்வு சட்டம், 2007, பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம் 2012, சாலை வழி சரக்கூர்திச் சட்டம் 2007.
முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019, மையக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களின் பணி நிலைப் பிரிவில் ஒதுக்கீடு) சட்டம், 2019, சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம் 2003.
தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம் 2018, மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம்.
தமிழ்நாடு திரைப் படங்கள் தொடர்பான விளம்பரங்களைக் கட்டாய மாகத் தணிக்கை செய்தல் சட்டம், தமிழ்நாடு மருந்துப் பொருள்கள் மற்றும் பிற பண்டகப் பொருள்கள் (சட்ட விரோதமாக வைத்தி ருத்தல்) சட்டம், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றச் சட்டம் உள்ளிட்டவை அடங்கும்.
மேற்கண்ட 100 சட்டப் புத்தகங்களையும், தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து (www.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.
- அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
- அரசு பேருந்து தீ விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை.
சென்னை அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லும் 109 சி அரசு பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலாக சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்ததையடுத்து அதில் பயணித்து கொண்டிருந்தவர்கள் பேருந்தை விட்டு இறங்கி இருக்கின்றனர். சற்று நிமிடங்களில் அரசு பேருந்தானது எரிய தொடங்கி உள்ளது.
இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். புகை ஏற்பட்டதையடுத்து பயணிகள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
அரசு பேருந்து தீ விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை.
- நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சாதிமறுப்பு திருமணம் நடைபெற்றது.
- ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தை சூறையாடினர்.
கடந்த மாதம் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண், தங்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில் மனுதாரரின் முகவரிக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இல்லாததால் சம்மன் அவர்களை சென்றடையவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இதனையடுத்து, திருமணம் செய்து கொண்ட இருவரும் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தாங்கள் வசிக்கும் இடம் குறித்த விவரங்களையும், மிரட்டல் விடுக்கும் நபர்களின் விவரங்களையும் காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தம்பதிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்
- 11 நபர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாதேஷ் அளித்த தகவலை தொடர்ந்து அந்தந்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 64பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 11 நபர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து மெத்தனால் வாங்கியதாக கைதான மாதேஷ் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து போலி பில் மற்றும் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
மாதேஷ் அளித்த தகவலை தொடர்ந்து அந்தந்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெத்தனால் கொடுத்த நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
- இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்போது வாக்களித்த மை இருந்தால் வலது கை விரலில் மை வைக்கப்படும்.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது கை விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்போது வாக்களித்த மை இருந்தால் வலது கை விரலில் மை வைக்கப்படும்.
மக்களவை தேர்தலின்போது இடது கை விரலில் வைக்கப்பட்ட மை அழியாமல் இருந்தால் வலது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
- ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும்.
- தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாளை முதல் 5-ந்தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
- தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
- 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
மருத்துவர் தின நிகழ்ச்சி
தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். நேற்று [ஜூன் 1] தமிழக மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக நடந்த மருத்துவர்கள் தின நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த 2020 முதல் பிறந்த 1000 குழந்தைகளில் 13 குழந்தைகள் என்ற அளவில் இருந்த இறப்பு எண்ணிக்கை கடந்த மாதங்களில் 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. பிறந்ததில் இருந்து 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த IMR இறப்பு விகிதத்தில் கணக்கிடப்படுவர்.
தரவுகள்
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் பிரசவ பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்து வரும் தமிழக மருத்துவ மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி குழந்தை எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது குறைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 2020 தரவுகளின்படி 1000 குழந்தைகளுக்கு 28 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.

மகப்பேறு மரணங்களின் எண்ணிக்கை
மேலும் தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 52 என்று இருந்த மகப்பேறு மரணங்கள் தற்போது 1 லட்சத்துக்கு 48 ஆக குறைத்துள்ளது. இதுவே இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 97 மகப்பேறு மரணங்கள் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கை உள்ளது.

அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள்
ஆனால் சமீப காலங்களில் உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்த வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் 70 சதவீதம் அரசு மகப்பேறு மருத்துவமனைகளிலேயே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.







