என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gagandeep Singh Bedi"

    • ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
    • ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது

    தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

    1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.

    2. திரு. ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

    3 திரு. தீரஜ் குமார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

    4, திருமதி. பெ. அமுதா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

    மேற்கண்ட அதிகாரிகள் எந்தெந்த துறை சம்மந்தமாக செய்திகள் வெளியிட வேண்டும் என முதல்வரின் ஆணைப்படி அவர்களுக்கு கீழ்க்காணுமாறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன:

    1. டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன்

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.

    * எரிசக்தித் துறை

    * மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

    * போக்குவரத்துத் துறை

    * கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

    * வெளிநாடு வாழ் தமிழர் நலன்

    * பள்ளிக் கல்வித் துறை

    * உயர்கல்வித் துறை

    * கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த் துறை

    * மனிதவள மேலாண்மைத் துறை

    2. திரு. ககன்தீப் சிங் பேடி

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

    * நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

    * ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை

    * கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

    * வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

    * நீர்வளத் துறை

    * சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

    * குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

    * தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

    * இயற்கை வளங்கள் துறை

    3. திரு தீரஜ் குமார்.

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

    * உள். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

    4. திருமதி. பெ. அமுதா.

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

    * வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

    * சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

    * மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

    * தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

    * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

    * பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

    * வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை

    * நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை

    * சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

    * சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

    அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள். அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.

    அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

    புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கவனிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் காலையில் 9 மணி முதல் மாலை 4 மணிவரை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது-

    அனைத்து மாநில மக்களுக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை உலகளாவிய வகையில் வழங்குவது என்பது நமது மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.

    மேற்கூறியவற்றை அடைவதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் வெளிநோயாளிகள் சேவைகள் சரியான நேரத்தில் தொடங்குவது என்பது மிகவும் முக்கியமாகும்.

    குறிப்பாக சுகாதார சேவைகளை மக்கள் பெறுவதற்கு தேவையற்ற தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இப்போது பல இடங்களில் இந்த சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே இது சம்பந்தமாக கலெக்டர்கள் தங்களின் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி மருத்துவமனை டீன்கள் மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆகியோர் வெளிநோயாளிகளுக்கான நேரத்தை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    அரசு மருத்துவகல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான பொறுப்பான மருத்துவர்கள் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நோயாளிகளை பார்க்க வேண்டும். அதேபோல் 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கவனிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.) காலை 7 மணிக்குள் வந்து ஓ.பி.யை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணி முதல் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர டூட்டி டாக்டர்கள் காலையில் உள்ளது போல் மாலை 3 மணி முதல் வெளிநோயாளிகள் பிரிவையும் பார்க்க வேண்டும்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் காலையில் 9 மணி முதல் மாலை 4 மணிவரை பார்க்க வேண்டும். கூடுதல் டாக்டர்கள் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிநோயாளிகள் பிரிவை டாக்டர்கள் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை பார்க்க வேண்டும். அதன்பிறகு மதியம் 2 மணிமுதல் மறுநாள் காலை 8 மணிவரை மற்றொரு டாக்டர் இருந்து கவனிக்க வேண்டும்.

    பல் ஆஸ்பத்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ள இடங்களில் வெளி நோயாளிகள் பிரிவில் காலை 8 மணியில் இருந்து 1 மணி வரையும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் இருந்து நோயாளிகளை பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
    • 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.

    மருத்துவர் தின நிகழ்ச்சி 

    தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். நேற்று [ஜூன் 1] தமிழக மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக நடந்த மருத்துவர்கள் தின நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.

    குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 

    தமிழகத்தில் கடந்த 2020 முதல் பிறந்த 1000 குழந்தைகளில் 13 குழந்தைகள் என்ற அளவில் இருந்த இறப்பு எண்ணிக்கை கடந்த மாதங்களில் 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. பிறந்ததில் இருந்து 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த IMR இறப்பு விகிதத்தில் கணக்கிடப்படுவர்.

    தரவுகள் 

    மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் பிரசவ பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்து வரும் தமிழக மருத்துவ மற்றும் சுகாதார மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி குழந்தை எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது குறைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 2020 தரவுகளின்படி 1000 குழந்தைகளுக்கு 28 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது.

     

    மகப்பேறு மரணங்களின் எண்ணிக்கை 

    மேலும் தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 52 என்று இருந்த மகப்பேறு மரணங்கள் தற்போது 1 லட்சத்துக்கு 48 ஆக குறைத்துள்ளது. இதுவே இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 97 மகப்பேறு மரணங்கள் என்ற அளவில் இறப்பு எண்ணிக்கை உள்ளது.

     

     அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள் 

    ஆனால் சமீப காலங்களில் உடல் பருமன் மற்றும் ரத்த அழுத்த வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் 70 சதவீதம் அரசு மகப்பேறு மருத்துவமனைகளிலேயே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக ககன் தீப் சிங் பேடி இன்று காலை கடலூருக்கு வந்தார்.

    கடலூர் கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையை பலப்படுத்தும் பணி ரூ.22 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை ஆய்வு செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணியினை ஆய்வு செய்ய என்னை நியமித்து உள்ளனர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணியை ஆய்வு செய்து வருகிறேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கெடிலம் ஆற்றில் இருபுறமும் நிரந்தரமாக கரையை பலபடுத்தும் பணியும் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் மூலம் கடலூர் நகரில் உள்ள கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது வெள்ளம் ஊருக்கு புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். மேலும் கடலூர் மாவட்டத்தில் பரவனாறு,செங்கால் ஓடை, பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி, ஆகிய ஏரிகளில் தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்- கலெக்டர் சரயூ மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். #GagandeepSinghBedi
    ×