search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "registration fee"

    • காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    • பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால் சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடு வாங்கும் கனவு பாதிக்கப்படும்.

    சென்னை:

    சிங்கார சென்னை கட்டுனர் சங்க தலைவர் அனிபா, செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சமீபத்திய பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டண உயர்வு சம்பந்தமாக அனைத்து கட்டுனர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று எங்களது குறைகளை பரிவுடன் கேட்டு நிவர்த்தி செய்வதாக வாக்களித்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கும் அதில் கலந்து கொண்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயர்த்தப்பட்ட பல்வேறு சேவைகளின் பதிவு கட்டணங்களின் அதீத உயர்வை மறு மதிப்பாய்வு செய்வது சம்பந்தமாக உடனடி தீர்வு காணும்படி அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சிறிய மற்றும் நடுத்தர கட்டுமான தொழில் புரியும் கட்டுனர்களுக்கு பெரிதும் பொருளாதார உதவியாக இருப்பது "இன்வெஸ்டர்ஸ் " எனப்படும் முதலீட்டாளர்கள். அவர்கள் கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்து கட்டுமானம் நிறைவு பெறும்போது அதை மீண்டும் மறு விற்பனை செய்து தங்களது லாபத்தை எடுத்து கொள்வார்கள். இத்தகைய முதலீட்டாளர்களால் அரசுக்கு ஒரே சொத்துக்கு இரண்டு முறை வருவாய் வரக்கூ டிய வாய்ப்பாய் அமைகிறது. அத்தகைய முதலீடுகள் இத்தகைய பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால், சொத்து பரிவர்த்தனைகளுக்கான செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

    இதன் விளைவாக, செலவினங்கள் குறைவாக உள்ள மற்றும் லாபம் அதிகம் உள்ள அண்டை மாநிலங்களில்மு தலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பதிவு கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்ற வருமானங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்படும். இத்தகைய நிகழ்வுகள் பொருளாதார முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்வினையாக அமையும். பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால் சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடு வாங்கும் கனவு பாதிக்கப்படும்.

    முன்பு பவர் ஆப் அட்டர்னி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரங்கள் மற்றும் நியாயமான மதிப்பீட்டிற்கு ஏற்ப கட்டணத்தை ரூ. 20,000, ரூ. 25,000 ஆக மாற்றுவதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி கட்டுமான ஒப்பந்தங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தியதை மறு ஆய்வு செய்ய வேண்டும். கட்டணத்தை அதன் முந்தைய விகிதத்தில் வைத்திருப்பதற்கான சாத்தியத்தை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    பெரு முதலாளிகளை மட்டுமே மனதில் வைத்து சீர்திருத்தப்படும் சட்டங்களால் குறுந்தொழில்கள் பாதிப்படைந்து நலிவடைந்து மறைந்து வருகிறது. உதாரணத்திற்கு தெருவுக்கு தெரு இருந்த மிதிவண்டி சீர்திருத்த கடைகள், நூலகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்டிக்கடைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் பாமர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளால் சிறு குறு தொழில்கள் பெரும் பண முதலாளிகளின் கைக்கு சென்று விடுகிறது. சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் தமிழர்கள் பெரு முதலாளிகளின் வேலையை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சீர்திருத்தம் மற்றும் மாற்றம் என்பது காலத்துக்கு ஏற்ப தேவையான ஒன்றுதான். ஆனால் அத்தகைய மாற்றங்களை மறுசீரமைக்கும் போது தமிழர்களின் பொருளாதார மரபு சார்ந்த வாழ்க்கை நெறிமுறை பாதிப்படைய செய்யும் வகையில் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே இது சம்பந்தமாக அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது தமிழக அரசுக்கு மேலும் வலு சேர்க்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சொந்த வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆவணப் பதிவு தொடர்பான சமீபத்திய அறிவுரை குறித்த கூடுதல் விளக்கத்துடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர் முதலில் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம்.

    இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருபவர்களின் பெயர்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வரும்போது மேற்படி நிலத்தின் பிரிபடாத பாக மனைக்கான விக்கிரைய ஆவணம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்த ஆவணம் தனியாகவும் பதிவு செய்யப்படுகிறது.

    பிரிபடாத பாக மனையின் விக்கிரைய ஆவணத்திற்கு தற்போது நடைமுறையிலுள்ள அட்டவணைப்படி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோருக்கும் கட்டுமான நிறுவனத்தார்க்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுமான ஒப்பந்த ஆவணத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 1% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவுக்கட்டணம் மட்டும் 10.07.2023 முதல் 2% உயர்த்தப்பட்டு கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 3% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையானது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்பாக பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    இது போன்ற ஆவணங்கள் பதிவுக்கு வருகையில் அடுக்குமாடி குடியிருப்பை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும் என சார்பதிவாளர்கள் வலியுறுத்தத் தேவையில்லை என்ற அறிவுரை கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த அறிவுரையை சிலர் தவறாக பயன்படுத்தத் தொடங்கினர்.

    அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானம் முழுவதுமாக முடிக்கப்பட்டு வழங்கப்படும் நிகழ்வுகளில்கூட அடுக்குமாடி குடியிருப்பை நேரடியாக பயனாளர்களுக்கு விற்பனைக் கிரையம் எழுதிக் கொடுத்து ஆவணப் பதிவு செய்வதற்கு பதிலாக கட்டுமானம் முடிந்த பின்னரும்கூட அதனை ஆவணத்தில் தெரிவிக்காமல் கட்டுமான ஒப்பந்த பத்திரம் மற்றும் பிரிபடாத பாக மனை விக்கிரைய பத்திரம் என்று மட்டுமே எழுதி பதிவு செய்யும் பழக்கம் 2020க்குப் பின்னர் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வந்தது.

    முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான ஆவணங்கள் 7% முத்திரைத் தீர்வை மற்றும் 2% பதிவுக்கட்டணத்தில் அரசுக்கு சேர வேண்டிய கூடுதலான 5% கட்டணம் செலுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக கிரைய பத்திரமாக பதிவு செய்யப்படாமல் 2020 அறிவுரைக்குப் பின்னர் 1% முத்திரைத் தீர்வை மற்றும் 3% பதிவுக்கட்டணம் மட்டுமே செலுத்தி கட்டுமான உடன்படிக்கை ஆவணமாக பதிவு செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

    ஆவணம் பதிவு செய்யும்போது கட்டடம் இருப்பதை ஆவணத்தில் குறிப்பிட வலியுறுத்த வேண்டாம் என கடந்த 2020ஆம் ஆண்டு சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததால் இது போன்ற நேர்வுகளில் சார்பதிவாளர்கள் கட்டடம் குறித்து கேள்வி எழுப்ப இயலாத நிலை இருந்து வந்தது.

    இவ்வாறு முழுமையாக முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து கிரையமாக வாங்காமல் கட்டுமான ஒப்பந்தம் மட்டுமே பதிவு செய்யும் நிலை தொடர்ந்ததால் அந்த குடியிருப்பை எதிர்காலத்தில் மறுகிரையம் செய்யும்போது பிரச்சனை எழலாம்.

    இதனைக் கருத்தில் கொண்டே ஆவணங்கள் பதிவின்போது கட்டடத்தின் கட்டுமானம் நிறைவுற்ற சான்றை வலியுறுத்த வேண்டாம் என ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரை மட்டுமே தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதே தவிர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பிரிபடாத பாக மனை மற்றும் குடியிருப்பு இரண்டையுமே கிரையமாக பெற்றுக் கொள்வது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாத நிலையில் கட்டுமான ஒப்பந்தம் செய்துகொண்டு குடியிருப்புகளை வாங்க உத்தேசிப்பவர்களுக்கு மட்டும் ஏற்கெனவே உள்ள அதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்களைப் பொருத்தமட்டில் கட்டுமான கிரைய ஆவணமாகவே அதன் தன்மையைப் பாவித்து பதிவு செய்ய வேண்டும் என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டண உயர்வு என்று தவறாக செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வங்கிகளில் கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும்.
    • அரசின் உத்தரவுக்கு கப்பலூர் தொழிற்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

    திருமங்கலம்

    கப்பலூர் தொழிற்சங்கம் சார்பாக 30-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கப்பலூர் தொழிற்சங்கத்தில் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர் ரகுநாத ராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது அணுகு சாலையை முழுமையாக பயன்படுத்திச் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போதைய மின்சார கட்டண உயர்வு, சிறு மற்றும் குறு தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டணம் ஏற்றப்படாவிட்டாலும், தற்போதைய உயர்வு சுமார் 32 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகி உள்ளது. இதனால் வெளி மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியாமல் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கட்டணம் குறைப்பதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது சிறு, குறு தொழில்கள் உற்பத்தி வெளி மாநில தொழிலாளர்களை நம்பும் நிலை உள்ளது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக அரசு அளிக்க வேண்டும்.

    வங்கிகளில் தொடர்ந்து கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற அரசின் முடிவிற்கு கப்பலூர் தொழிற்சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×