என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.
- தமிழகக் காவல்துறையினரை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்புகிறது.
கொலை, கொள்ளை என்று செய்தி வராத நாளே இல்லை என்ற அளவுக்கு, தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகக் காவல்துறையினரை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை உணர்ந்து, உடனடியாக சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான திருமதி. முத்துலட்சுமி என்பவர் கொலை…
— K.Annamalai (@annamalai_k) July 12, 2024
- குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
- ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும்
சென்னை:
குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.
இதையடுத்து தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது. இதுதவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனு செய்திருந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் பணியாளர்கள் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர்.
இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த விழாவில் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.
- 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு.
- எனது உயிருக்கு பாதுகாப்பில்லை.
திருச்சி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
அப்போது தமிழக அரசு குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சிறுகமணி பேரூராட்சி கவுன்சிலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பின்னர் தென்காசி மாவட்டம் வீராணம் பகுதியில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவரை திருச்சி தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மாஜிஸ்திரேட் எண் 3 ஆஜர் படுத்தினர.
நீதிபதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் ஜாமீனில் விடுவித்தார். பின்னர் சாட்டை துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தி.மு.க. அரசு என் மீது போட்ட 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு. எங்கள் தரப்பு வக்கீல்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி என்னை விடுவித்துள்ளார்
14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்து வருகிறது. ஆனால் என்னை எஸ்.சி., எஸ்.டி. பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் முடக்க பார்க்கிறார்கள்.
நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவன். அந்த மக்களுக்காகவே அதிகமாக குரல் கொடுத்துள்ளேன்.
நான் மேற்கோள் காட்டி பாடிய பாடல் 31 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பாடலாக உள்ளது.
சண்டாளன் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வார்த்தை என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. யாரும் இந்த அரசுக்கு எதிராக பேசக்கூடாது என தி.மு.க. அரசு அடக்கு முறையை கையாள்கிறது.
பா.ஜ.க.வை பாசிசம் என்று சொல்லும் தி.மு.க.வுக்கு இது பாசிசம் என்பது தெரியாதா?
இந்த வழக்குக்கு எந்த தொடர்பும் இல்லாத எனது கைபேசியை முதலில் போலீசார் பறித்துக் கொண்டார்கள்.
என்னை கைது செய்தால் போலீசாரின் டெம்போ வேனில் அழைத்து வர வேண்டும். அதற்கு மாறாக என் காரிலேயே அழைத்து வந்தனர். அப்போது டிரைவர் முழு போதையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் என்னை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய பார்த்தது.
மதுரையில் விபத்து நடந்து கார் சேதமடைந்த பின்னரே போலீஸ் வேனில் ஏற்றினர். எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்றம் தான் என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
- சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் அதே பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சீப்பாலக்கோட்டை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவர் மீது மோதி கீழே விழ வைத்தனர். அதற்கு செல்வம் பார்த்து வரக்கூடாது என கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் செல்வத்தை தரக்குறவைான வார்த்ததைகளால் திட்டி தாக்க முயன்றனர்.
அவர் தடுத்தபோதும் பைக்கில் விழுந்தவரை காப்பாற்றாமல் சரமாரியாக தாக்கினர். அப்போது அவர்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் கீழே விழுந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கஞ்சா வாலிபர்களை பிடித்து தடுத்தனர். மேலும் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
பைக்கில் இருந்து தவறி விழுந்ததாலும் பொதுமக்கள் தாக்கியதாலும் கஞ்சா வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கே.கே.பட்டி மந்தயம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), கிருஷ்ணன் வாத்தியார் தெருவை சேர்ந்த நவீன் (22) என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனிடையே கஞ்சா வியாபாரிகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
- சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை
கரூர்:
கரூர் தோரணக்கல்பட்டியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ரகு, சித்தார்த்தன், மாரியப்பன், செல்வராஜ், யுவராஜ் பிரவீன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கலாம் என கருதிய முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் தள்ளுபடி ஆனது.
இதற்கிடையே பிரச்சனைக்குரிய அந்த 22 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் கரூர் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
பின்னர் வழக்கு தொடர்புடைய யுவராஜ், செல்வராஜ், நிலம் மாற்றியதில் சாட்சியாக செயல்பட்ட முனிய நாதபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்து 8-ந் தேதி திடீர் சோதனை நடத்தினர்.
அதன் பின்னர் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அ.தி.மு.க. ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஜயபாஸ்கரின் ஆதரவாளருமான கவின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தந்தை குழந்தைவேலிடம் விசாரணை செய்தனர். அதன் பின்னர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த கரூர் பசுபதி செந்தில் உட்பட 7 பேரை திடீரென கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
- ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.
இன்று தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளர் பள்ளிகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு விடுமுறை என கூறி வந்த மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் தங்களுக்கு பள்ளி விடுமுறை என நினைத்து மாணவர்கள் உற்சாகமாக திரும்பினர். அதன்பிறகு கள்ளர் பள்ளிகளை பெயர்மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
- சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
- முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு டாக்டர் அகஸ்டின்(வயது60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.
இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 20 பேர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அவர்கள் காப்பகம் அருகில் புதைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மன நல மருத்துவர் விவேக், தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, இந்த மன நல காப்பகம் முறையான அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த காப்பகத்தில் இருந்த 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
இந்த காப்பகத்தில் இருந்த 20 பேர் எப்படி இறந்தார்கள்? இறப்புக்கான காரணம் என்ன? அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த காப்பகத்தில் ஆரம்பத்தில் 60 பேர் இருந்து வந்ததாகவும், அதன் பின் 33 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்த போது 13 பேர் மட்டுமே இருந்துள்ளனர். மற்றவர்களின் நிலை என்ன? என்பது மர்மமாகவே உள்ளது.
இதுவரை மனநல காப்பகத்தில் இருந்தவர்கள் பெயர், ஊர் விவரம், தற்போது இருப்பவர்கள் பெயர், ஊர் விவரம் உள்ளிட்ட எந்தவிதமான பதிவுகளும் காப்பகத்தில் இல்லை.
மேலும் இறந்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? இறந்தவர்கள் உடல் உடற்கூராய்வு செய்தது உள்ளிட்ட எந்த விவரங்களுமே இல்லை. இறந்தவர்களை தங்கள் காப்பகத்தின் அருகிலேயே புதைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தான் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இறந்தவர்கள் எந்த நிலையில் புதைக்கப்பட்டனர் என்பது தொடர்பான உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி நேற்று பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மன நல காப்பக உரிமையாளரான கேரளாவை சேர்ந்த அகஸ்டின், அவரது மனைவி கிரேசி, அதில் பணிபுரிந்த ஊழியர்கள் என 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் 10 பேரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் காப்பகத்தில் இருந்த மன நோயாளிகளுக்கு மாதம் ஒருமுறை சிகிச்சை அளிக்க சென்ற செவிலியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
- கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.
- கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த பென்காம் எஸ்ட்டேட் அடர்ந்த வனப்பகுதி அருகே அமைந்து உள்ளது.
இதனால் அவ்வப்போது இந்த பகுதியில் வனவிலங்குகள் உலா வருகின்றன. மேலும் அவை அங்கு வசிக்கும் பலரையும் தாக்கி விட்டு தப்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கரடிகள் தினமும் பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
அந்த நேரத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விடுவதால், கரடிகள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் உள்ள குக்கரை திறந்து சாதத்தையும் சாப்பிடுகின்றன.
மேலும் கடைகளை உடைத்து அங்குள்ள எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை தின்றுவிட்டு சென்று விடுகின்றன. அதிலும் குறிப்பாக ஒருசில கரடிகள் இரவு நேரங்களிலும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தூக்கத்தை தொலைத்து இரவும் பகலுமாக தவியாய் தவித்து வருகின்றனர்.
இரவும் பகலும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது.
பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அவ்வப்போது தீப்பந்தங்கள் காட்டி விரட்டினாலும், கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.
எனவே பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
- தொடர் மழையின் காரணமாக 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.50 அடியை எட்டியிருந்தது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 41.97 அடியாக இருந்தது.
சேலம்:
கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தொடர் மழையின் காரணமாக 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.50 அடியை எட்டியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 673 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2507 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 82.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 507 கனஅடி தண்ணீர் அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நாளை காலை முதல் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அங்கு இருந்து நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு அந்த தண்ணீர் வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் இனி வரும் நாட்களில் காவிரியில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி கூடுதலாக தண்ணீர் திறந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயரும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 41.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 87 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 13.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
- ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கவுசல்யாவிற்கும் கடந்த வாரம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது குழந்தைகளான ஜோவிதா (4), ஒன்றரை வயது பெண் குழந்தை சஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்து 10-ந் தேதி வந்துவிட்டார்.
இவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் வெளியில் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என உறவினர்கள் நினைத்திருந்தனர்.
இந்த நிலையில் கூனிமேடு கடற்கரையோரம் ஒரு பெண் குழந்தையின் உடலும், அனுமந்தைகுப்பம் கடற்கரை ஓரம் ஒரு பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இத்தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்த போது, கரை ஒதுங்கி கிடந்த குழந்தைகளின் உடல் ஆனந்தவேலுவின் பெண் குழந்தைகள் என தெரியவந்தது. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், 2 பெண் குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேலு தனது குழந்தைகளுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனந்தவேலு அல்லது அவரது உடல் கரை ஒதுங்கினால் மட்டுமே நடந்தது என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகளின் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.
- பொக்லைன் எந்திரங்கள் மூலம் எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்துள்ள பல்லடத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மங்கலம் பூமலூரில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோன் வைத்துள்ளார். இவரது குடோனுக்கு அருகில் இப்ராஹிம் என்பவர் பழைய பஞ்சுக்கழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் நூல் தயாரிக்கும் ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் ஜன்னல் வழியாக அருகில் இருந்த பனியன் துணி குடோனுக்கும் பரவி பற்றி எரிந்தது.
இதையடுத்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் 5 மணி நேரமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பனியன் துணி கழிவுகள் மற்றும் பனியன் ரோல்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இதனிடையே பனியன் வேஸ்ட் குடோனில் தீயை அணைத்து கொண்டிருக்கும் போது மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்ததால் தீயினை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு துறை வீரர்கள் மிகவும் போராடினர். கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
பொக்லைன் எந்திரங்கள் மூலம் எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தீ விபத்தில் தப்பிய பனியன் ரோல்களை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், இன்றும் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.
இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,825-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.






