என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தலைவருக்கான அழகல்ல.
    • மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 70 ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்த சிறந்த ஆளுமை என கலைஞரை புகழ்ந்த சீமானே இப்போது கலைஞர் குறித்து அவதூறாக பேசுகிறார்.

    * அடுக்குமொழியில் பேசி தமிழ் சமூகத்தை சீமான் தவறாக வழிநடத்துகிறார்.

    * கருத்துரிமை என்கிற பெயரில் உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்க முடியாது.

    * கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தலைவருக்கான அழகல்ல.

    * சீமான் ஒரு அரசியல் அரைவேக்காடு, பச்சோந்தி.

    * இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சாத்தானுடைய பிள்ளைகள் என சீமான் பேசியிருந்தார்.

    * சட்டம், ஒழுங்கு பிரச்சனை, சாதி, மத ரீதியான பிரச்சனை உருவாக்குவதாகவே அவரது பேச்சு உள்ளது. அவரது பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது.

    * மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது என்று கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
    • பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காக தான் பார்க்கப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அ.ம. மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்க கூடாது என்பது எனது விருப்பம். என்ன காரணத்திற்காக இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டது என ஆராய்ந்து அதன் பயன் முழுமையடையும் வண்ணம் தொடர்ந்து கள்ளர் பள்ளிகளை அதன் சீரமைப்புத்துறையுடன் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை கலாசாரம் மூலை முடுக்கெல்லாம் பரவி மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வருவது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக அமைய போகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்கள், விற்கிறவர்களை தடுப்பதில்லை. ஆனால், தி.மு.க.விற்கு எதிராக பேசுகின்ற எதிர் கட்சியை சேர்ந்தவர்களை ஹிட்லர் பாணியில் கைது செய்கின்றனர்.


    இன்று நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை கைது செய்து பின்னர், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை நாம் பார்க்கிறோம். அரசுக்கு எதிராக பேசினால் வழக்கு தொடரலாம், அதே நேரத்தில் யாருமே எங்களை பற்றியோ அரசாங்கத்தைப் பற்றியோ வாய்திறந்தால் நாங்கள் கைது பண்ணுவோம் என மிரட்டுவதற்கு தமிழ்நாட்டில் யாருமே பயப்பட மாட்டார்கள்.

    ஆர்.எஸ்.பாரதி, கண்ணப்பன் உள்ளிட்டோர் பட்டியலின அதிகாரிகளை பார்த்து பேசியதற்கெல்லாம் இந்த அரசாங்கம் வழக்கு போடவேண்டும். அதை விட்டுவிட்டு தி.மு.க.வை பற்றி பேசுவதை தான் வன்கொடுமை சட்ட அளவிற்கு கைது செய்வோம் என பேசுகிறார்கள்.

    பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காக தான் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மற்ற தலைவர்களை ஒருமையில் பேசுவது, அவமரியாதையுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம். சசிகலாவின் அ.தி.மு.க இணையும் என்ற கருத்து பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • மக்கள் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டில் உள்ள வீடுகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிதண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகிகளிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமம் அடைந்தனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிதண்ணீர் குழாயை சீரமைத்து அதில் கழிவு நீர் கலக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    • போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
    • மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக லாரியில் மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை த்தொடர்ந்து அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் கூட்டு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது லாரியில் சுமார் 45 எருமை மாடுகள் போதிய இடவசதி இல்லாமல் நெருக்கமாக கட்டி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.

    போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியுடன் மாடுகளை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 45 மாடுகளை மறைமலைநகரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் படி இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேக விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ரூ.1.52 கோடியிலும், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் ரூ.1.12 கோடியிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

    இதேபோல் பொன்னேரி ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருதலம்) கோவில், திருச்சி பூர்த்தி கோவில், திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மொத்தம் 65 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் உள்ளிட்ட 65 கோவில்களிலும் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்

    பெரியபாளையம் பவானி அம்மன்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

    இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பெரியபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகார தலமான சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    புனித கலசநீர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இதில் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஸ்ரீதேவி பூதேவி நாயிகா சமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது. இந்த கோவிலில் 66 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

    இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு கருகாத்தம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்தில் கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி 14 நாட்கள் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் வாகே.சங்கேத் பல்வத் சான்றிதழ் வழங்கினர். மீதம் உள்ள மனுக்களுக்கு பரிசிலனை செய்து வழங்கபடும் என தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த 65 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாகேட்டு கடந்த 3 வருடமாக ஜமாபந்தியில் மனு அளித்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறியும் இது வரை நடவடிக்கை இல்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதேபோல் பொன்னேரி அடுத்த காட்டவூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விடுபட்ட 16 பேருக்கு பட்டா வழங்க கோரியும் 66 பேருக்கு அசைமெண்ட் பட்டாவை கம்ப்யூட்டர் பட்டாவாக மாற்றியமைக்க கோரியும் பலமுறை ஜமாபந்தி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் இன்று சந்தித்தார். அப்போது அவர்,

    பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளன் கூறுகையில்,

    * தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை கெடுத்து பிரச்சனைகளை உருவாக்க சில கட்சிகள், அமைப்புகள் சதி செய்கின்றன.

    * தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.

    * பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அரசியல் சதி இருப்பதாக விசிக கட்சி சந்தேகிக்கிறது.

    * ஆம்ஸ்ட்ராங் பலியான சில நிமிடங்களிலேயே பாஜவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என பேட்டி தருகிறார்.

    * எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் விசாரிக்க கூடாது என கூறியது ஏன்?

    * ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளார்கள் என ஒரு வருடத்திற்கு மேல் பேசப்பட்டு வருகிறது.

    * ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது.

    * கலைஞர் குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.

    * நீட் தேர்வு முறைகேடு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மறைக்க பாஜக முயற்சித்து வருகிறது.

    * புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள ஆணையம் அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு என்று அவர் தெரிவித்தார்.

    • ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை தொடர்ந்து அவர்களது சாதியை இழிவாகவே பேசிவருகின்றார்.
    • சீமான் தன்னுடைய திரைப்படமான ‘தம்பி’ என்ற படத்தில் ஒரு வசனமாக ‘சண்டாளன்’ என்று பேசியதற்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

    சென்னை:

    எழும்பூரைச் சேர்ந்தவர் நடராஜன். ஐகோர்ட்டு வக்கீலான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்ததற்கு எதிராக அக்கட்சி தலைவர் சீமான் தனியார் தொலைகாட்சிகளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வரும் உலக தமிழர்களின் தலைவரும் தி.மு.க. தலைவருமாக இருந்து மறைந்த தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதியை தமிழக மக்களே கொந்தளிக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார்.

    'கள்ளத்தனம் செய்த காதகன், கள்ளத்தனம் கொண்ட சதிகாரன் கருணாநிதி, சண்டாளன், துரோகி, இறை தூதுவரா, இறை மகன் ஏசுவா என்றும், கிருஷ்ண பரமாத்வா' என்றும் பேசி வன்முறையை தூண்டிவிட்டுள்ளதையும் மிகவும் அவதுாறாக பேசியதையும் தமிழக மக்கள் மிகவும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.


    மேலும் சீமான் தன்னுடைய திரைப்படமான 'தம்பி' என்ற படத்தில் ஒரு வசனமாக 'சண்டாளன்' என்று பேசியதற்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இருந்தபோதிலும் 'சண்டாளன்'என்ற வார்த்தை ஒதுக்கப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த ஒரு ஜாதியை சேர்ந்த மக்களை குறிப்பிடுவதாகும். மற்றவர்களை இழிவுப்படுத்தும் நிலையில் அதை தெரிந்தும் இதுபோன்று ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களை தொடர்ந்து அவர்களது சாதியை இழிவாகவே பேசிவருகின்றார்.

    அவர் ஏற்கனவே அந்த சமூகத்தினரை பற்றி பேசி பொது மன்னிப்பு கேட்டு விட்டு தற்போதும் அந்த ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட பட்டியலின சாதியை (சண்டாளர்) சேர்ந்த சமூகத்தினரை தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசி உள்ளார்.

    எனவே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் அவதூறு பேச்சிற்கு எதிரான சட்டப்படியான குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாரத்தில் வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும்.
    • விமானத்தின் பயணநேரம் 3 மணி 46 நிமிடங்கள்.

    ஆலந்தூர்:

    ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை இதுவரையில், ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே நடத்தி வந்தது.

    ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் காலை மற்றும் மாலை விமான சேவை வீதம், தினமும் இரண்டு விமான சேவைகளை, மஸ்கட்- சென்னை- மஸ்கட் இடையே, இயக்கி வருகிறது.

    இது தவிர மற்ற விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை நடத்தாமல், சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு விமான சேவைகளை இயக்கி வருகின்றன.

    ஆனால் பயணிகள் நேரடி விமானத்தில் பயணம் செய்யவே விரும்புவதால், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் எப்போதும் நிரம்பி வழிகிறது. அதில் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருந்தது.

    அதோடு பாரீஸ், லண்டன், பிராங்பார்ட் உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு, இணைப்பு விமானங்களும், மஸ்கட்டில் இருந்து இருப்பதால், மஸ்கட்-சென்னை- மஸ்கட் விமானங்களில், எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் ஓமன் நாட்டில் உள்ள, சலாம் ஏர் விமான நிறுவனம், மஸ்கட்- சென்னை-மஸ்கட் இடையே, புதிய நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

    வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும், இந்த சலாம் ஏர் விமானம், மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4:15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு, மஸ்கட் புறப்பட்டு செல்கிறது.

    இன்று முதல் நாளில் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமா னத்தில் 179 பயணிகளும், சென்னையில் இருந்து மஸ்கட் சென்ற விமானத்தில் 142 பயணிகளும் சென்றனர்.

    இந்த விமானத்தின் பயணநேரம் 3 மணி 46 நிமிடங்கள். இப்போது வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப் படும் இந்த விமான சேவைகள், பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினமும் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு கூடுதலாக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதே நேரத்தில் வாரத்தில் இரண்டு தினங்கள் இயக்கப்படும் இந்த சலாம் ஏர் விமான சேவைகள், தினசரி சேவைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மோசடிகள் நாளுக்கு நாள் விதவிதமாக நடந்து வருகிறது. மோசடி குறித்து போலீசார் தரப்பில் இருந்து பல அறிவுறுத்தல்கள் வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    அப்படி ஒரு மோசடி சம்பவம் குறித்து மதுரை விமான நிலையத்தில் தெரியவந்துள்ளது. ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 106 பேரிடம் தலா ரூ.29 ஆயிரம் வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளது.

    அயோத்தி செல்ல மதுரை விமான நிலையம் வந்தவர்களிடம், டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். சுமார் ரூ.26 லட்சத்திற்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (38), இவர் தனது தந்தையின் சகோதரி மகளான அயோத்தியாப்பட்டனம் ராம் நகரை சேர்ந்த இந்துமதி (27) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் வேல்முருகன் (12) என்ற மகன் உள்ளார்.

    திருமணம் முடிந்ததில் இருந்தே இந்து மதி அயோத்தியாப்பட்டணம் ராம்நகரில் தனக்கு தாய் கொடுத்த வீட்டில் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். 2 பேரும் கட்டிட கொத்து வேலைக்கு சென்று வந்தனர். இதற்கிடையே குடிப்பழக்கம் உள்ள சுரேசுக்கும், அவரது மனைவி இந்து மதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது . இதனால் கடந்த 8 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக சுரேஷ் , இந்து மதியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்தார். நேற்றிரவு சுரேஷ் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் இன்று காலையும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கத்தியால் இந்துமதியை வயிறு உள்பட பல பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த இந்துமதி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதியினர் அங்கு ஓடி வந்தனர். இதற்கிடையே அஙகு வந்த காரிப்பட்டி போலீசாரும், அந்த பகுதியினரும் சேர்ந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சோகத்தில் மூழ்கியது.

    கொலை செய்யப்பட்ட இந்து மதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது. இதையொட்டி அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் கூறுகையில், மனைவியின் மீதான நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ஆத்திரத்தில் இந்த கொலையை செய்ததாக கூறி உள்ளார். இது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது.
    • டாஸ்மாக் கடைகளை குறைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

    திருப்பூர்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது. காவல்துறையின் கைகள் பல நேரங்களில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழக அரசு பல பெரிய குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்க நினைப்பது என்பது செயல் திறனற்ற அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் தொடர்கிறது. டாஸ்மாக் கடைகளை குறைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. வருமானத்தை பெருக்க, மக்கள் மேலும் குடிப்பதற்கு அரசு உடந்தையாக இருப்பது வேதனையானது.

    கள்ளச்சாராயம், போதைப்பொருட்களுக்கு மாணவர்களும், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் அடிமையாகி உயிர்பலி அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் இனியும் நடைபெறாமல் தடுக்கஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். சமீபத்தில் தேசிய கட்சியின் மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் தமிழகத்தில் கொலையானது மக்களை பீதியடைய செய்துள்ளது.

    இந்த ஆண்டு, த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் வருகிற 14-ந் தேதி மாலை திருச்சி உழவர் சந்தை அருகே நடக்கிறது. தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×