என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.
    • வழக்குகள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தன.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், 'விஷால் பிலிம் பேக்டரி" பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.

    அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயைத் தான் செலுத்தி உள்ளதாக விஷால் கூறியுள்ளார். மேலும் லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்' என விஷால் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கோரி லைகா நிறுவனம் சார்பிலும் தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தன.

    அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை தொடர்பாக நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் தரப்பில் சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தான் குற்றவாளிகளை பிடித்திருக்கிறது.
    • போதைப் பொருள் என்ற பெரும் தீமை தமிழ்நாட்டில் பரவுவதற்கு திமுகவினரே காரணமாக இருக்கின்றனர்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    போதைப் பொருள் என்ற பெரும் தீமை தமிழ்நாட்டில் பரவுவதற்கு திமுகவினரே காரணமாக இருக்கின்றனர்.

    சென்னையிலிருந்து இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 70 கோடி மதிப்புள்ள மொத்தம் 6.93 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருளை காவல்துறையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராகிம் என்பவர் உள்ளிட்ட மூவரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கின்றனர்.

    போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செய்யது இப்ராகிம் திமுகவைச் சேர்ந்தவர் தான் என்பதை அக்கட்சியின் தலைமையும் ஒப்புக் கொண்டு, அவரை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது திமுக நிர்வாகி செய்யது இப்ராகிம். இதற்கு முன் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட போது, அவரது பின்னணியை ஆய்வு செய்தா கட்சியில் சேர்க்க முடியும்? என்று திமுக வினா எழுப்பியது. இப்போது செய்யது இப்ராகிம் என்ற இன்னொரு திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து திமுக என்ன சொல்லப் போகிறது? ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகும் திமுக நிர்வாகிகளின் சட்டவிரோத செயல்களை திமுக தலைமையும், ஆட்சித் தலைமையும் அனுமதித்திருக்கிறது என்பது தான் இதன் பொருள்.


    தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி அனைத்து வகை சீரழிவையும் ஏற்படுத்தியவர்களுக்கு திமுக அடைக்கலம் கொடுத்திருக்கிறது. போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட பிறகு அவரை நீக்குவதன் மூலமாக மட்டும் இதிலிருந்து திமுக தப்பித்துக் கொள்ள முடியாது. போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும்.

    இராஜாஜி, ஓமந்துரார், காமராசர், அண்ணா ஆகியோர் கடைபிடித்த கொள்கைகளால் மது என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவானது. ஆனால், மதுவிலக்கை திமுக அரசு ரத்து செய்ததால் 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டன. இப்போது போதைப் பொருள் என்ற பெரும் தீமை தமிழ்நாட்டில் பரவுவதற்கு திமுகவினரே காரணமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தும் அதைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தான் குற்றவாளிகளை பிடித்திருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது விழித்துக் கொண்டு போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என்று தமிழ்நாட்டு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவாகும் நிலை உருவாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    • பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா?

    சென்னை:

    சென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள், கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களை கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், இப்ராகிம் மற்றும் சென்னையை சேர்ந்த மன்சூர் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத்தாம்பெட்டமைன்' போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.

    சென்னை அருகே செங்குன்றம் பகுதியில், குடோன் ஒன்றில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 7 கிலோ மதிப்பிலான மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அதன் பின்னணிகளை பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் தி.மு.க. பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது.

    இவர் அந்த கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளார். இந்த கும்பல் ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களை இங்கிருந்து பஸ் மற்றும் கார்களில் ராமநாதபுரத்துக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தியதையும் கண்டுபிடித்துள்ளனர்.

    டெல்லியிலிருந்து போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் இருந்து மெத்தா பொட்டமைன் போதைப் பொருள்தான் சிக்கியது என்றும் இதையடுத்து சென்னையில் தற்போது பிடிபட்டுள்ள 3 பேருக்கும், ஜாபர்சாதிக்குக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    • பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. தொடர்ந்து நேற்று இரவும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், பூதப்பாண்டி, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணைகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறையாறு, கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.79 அடியாக இருந்தது. அணைக்கு 1080 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 532 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.52 அடியாக உள்ளது. அணைக்கு 941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 14.69 அடியாக உள்ளது. அணைக்கு 199 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கீரிப்பாறை, தடிக்காரங்கோணம், குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 45.8, பெருஞ்சாணி 46, சிற்றார் 1-27.4, சிற்றார் 2-34.2, கன்னிமார் 6.2, கொட்டாரம் 24.2, மயிலாடி 25.4, நாகர்கோவில் 14.6, முக்கடல் 10, பாலமோர் 22.2, தக்கலை 38, குளச்சல் 19.4, இரணியல் 5.2, அடையாமடை 26.4, குருந்தன்கோடு 10.2, கோழிப்போர்விளை 22.4, மாம்பழத்துறையாறு 20.5, களியல் 30.2, குழித்துறை 26.4, புத்தன் அணை 40.2, சுருளோடு 35.4, ஆணைக் கிடங்கு 20, திற்பரப்பு 41.2, முள்ளாங்கினாவிளை 16.8.

    • குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.
    • குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

    தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிக அருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாகவும், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசு, இந்திய ஒன்றிய அரசு விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.

    குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்! மோகன்தாஸ் - 9344624697 கார்த்திக் - 9080126335 பழனி - 8903289969 தியாகராஜன் - 6382953434

    • ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்த வேண்டிய அரசு, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு அதன் கோர முகத்தை காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் எச்சரித்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்த வேண்டிய அரசு, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு அதன் கோர முகத்தை காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அடக்குமுறைகள் தொடர்ந்தால், அவர்களுக்கு ஆதரவாகவும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் எச்சரித்திருக்கிறது.

    எனவே, ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப் படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொன்னையன் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; தேனி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    01.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    02.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    03.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    04.08.2024 மற்றும் 05.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 3-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.
    • கடைகள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு வியாபாரிகள் அதிர்ச்சி.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் காய்கறி, மளிகை, குளிர்பான கடைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் சாலையோரம் ஆக்கிரமித்து பழக்கடை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைத்தும் ஏராளமானோர் வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் மார்க்கெட் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி எநந்திரத்துடன் காலடிப்பேட்டை மார்க்கெட்டுக்கு வந்தனர். அவர்கள் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றினர்.

    மேலும் விதிமுறைகளை மீறி இருந்த கடைகளின் பெயர் பலகைகள், கடை வாசலில் இருந்த சிறிய விளம்பர பதாகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    மேலும் அகற்றப்பட்ட கடையில் இருந்த பொருட்களை எடுத்து செல்லாமல் அப்படியே சாலையில் போட்டு சென்றனர்.

    நள்ளிரவில் கடைகள் அகற்றப்பட்டதால் இதுபற்றி வியாபாரிகளுக்கு தெரியவில்லை. இன்று அதிகாலை வழக்கம்போல் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகள் வந்தனர்.

    அப்போது மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அப்பகுதியே அலங்கோலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாலையோர வியாபாரிகள் சிலர் தங்களது கடைகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டதை கண்டு கண்ணீர் வடித்தனர். ஏராளமான வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து மறியலில் ஈடுபடமுயன்றனர். அவர்களிடம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாநகராட்சி அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, `ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்கள் நள்ளிரவில் வந்து கடைகளை ஜே.சி.பி.மூலம் இடித்து உள்ளனர். இதில் கடைகள் முன்பு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பு காமிராக்கள் உடைந்துள்ளன.

    இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். காலையில் வியாபாரம் செய்ய வந்த பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 

    • கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
    • குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தொல்லியல் துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனை நூலாக வெளியிட்டும் உலகறியச் செய்தது.

    நகர நாகரிகம் என்பதற்கு பல்வேறு கூறுகளை கொண்டு உள்ளது. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர் மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள் போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது என்றும் அதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்றும் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

    நீர்மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலான குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறை கிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சங்க காலத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர் மேலாண்மை சிறப்பினை இதன் மூலம் அறியலாம்.

    இந்நிலையில் கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்பட்டுள்ளது. இது ஆறு உறைகளுடன் காணப்படும், இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் 36 செ.மீ., அகலம் 18 செ.மீ. என்ற முறையில் காணப்படும். தற்பொழுது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளத்தை கொண்டுள்ளது.

    இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்த குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்.
    • சத்யபிரத சாகுவுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் இந்த உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிவடைகிறது.

    இதையடுத்து பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

    இதன் முதற்கட்டமாக சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களை தருமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் எழுதி உள்ள அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விரைவில் நடத்த உள்ளது.

    தற்போதுள்ள சட்டப் பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ந் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டப் பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டி உள்ளது.

    எனவே கடந்த மார்ச் 28-ந் தேதி சட்டப் பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விவரங்கள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

    மாநில தேர்தல் ஆணையம் உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபார்த்து தனது சொந்த தரவுகளை உருவாக்கும் தேர்தல் ஆணையம் அளிக்கும் தரவுகளை வேறு யாருக்கும் பகிர மாட்டோம். எனவே தொகுதி வாரியாக தற்போதுள்ள புதிய வாக்காளர் பட்டியல் தரவுகளை அளிக்க அறிவுறுத்த வேண்டும்.

    உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தகுந்த நேரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர அம்மா உணவகத்தில் பழுதான இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாத்திரங்களை மாற்ற ரூ. 7.6 கோடி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிபட்டால் அதன் உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், ஏற்கனவே ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்த அபராத தொகையை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.

    முதல்முறை மாடு பிடிபட்டால் ரூ. 10 ஆயிரமும், 2 ஆவது முறை பிடிபட்டால் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. 

    ×