என் மலர்
நீங்கள் தேடியது "தொழில் வரி"
- இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும்
- நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"சென்னை பெருநகர மாநகராட்சி சென்னைவாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
44 மாத கால விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, வடபழனி-போரூர் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, என்று அனைத்து முக்கிய சாலைகளுமே குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
அனைத்து முக்கியச் சாலைகளின் நிலையே இப்படியெனில், மாநகரில் உள்ள மற்ற சாலைகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.
ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும், இவற்றோடு குப்பை வரி, கட்டிட வரைபட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று சுமார் 75 சதவீத மக்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர மாநகராட்சி சென்னைவாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்… pic.twitter.com/4RRLcsrCXo
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 31, 2024
- தொழில் வரி என்பது 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.
- இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி மிகப்பெரிய வருமானமாக உள்ளது. 2023-2024-ம் ஆண்டில் தொழில் வரி மட்டும் ரூ.532 கோடி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தொழில் வரியை மாநகராட்சி உயர்த்தி இருக்கிறது. 35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் வரி என்பது 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். 6 மாதத்துக்குள் ரூ.21 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டுப வர்களுக்கு ரூ.135-ல் இருந்து ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வருடத்துக்கு ரூ.630 கட்டியவர்கள் இனி ரூ.850 கட்ட வேண்டும். அதே போல ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690-க்கு பதில் ரூ.930 கட்ட வேண்டும்.
ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், அதே போல் ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களும் பழைய வரியை கட்டினால் போதும். அவர்களுக்கு வரி உயர்த்தப்படவில்லை.
இந்த வரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.
- சென்னையில் அரையாண்டுக்கான தொழில்வரி 35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- கட்டண உயர்வின் காரணமாக பல தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை:
சென்னையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தொழில்வரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கான உரிமம் கட்டணம், விளையாட்டு கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழில்கள் மீது வரிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டீ கடை, சலூன், மளிகை கடை, விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் உரிமம் கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு தொழில்வரி திருத்தி அமைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் அரையாண்டுக்கான தொழில்வரி 35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் உரிமம் கட்டணத்தை பொருத்தவரை குறு தொழில்களுக்கு ரூ.3,500 முதல் ரூ.7 ஆயிரம், சிறு தொழில்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம், நடுத்தர தொழில்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம், பெரிய வணிகங்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு உரிமம் கட்டணம் 150 சதவீதமும், சிறிய கடைகளுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்வரி மற்றும் உரிமம் கட்டணம் அதிகரிப்பு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில் இந்த கட்டண உயர்வால் 200-க்கும் மேற்பட்ட தொழில்கள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக விருந்தோம்பல், திருமணம்தொ டர்பான சேவைகள், பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகிய தொழில்கள் பாதிக்கப்படும்.
விருந்தினர் இல்லங்கள், சேவை அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், ஓய்வு விடுதிகள் ஆகியவற்றுக்கு இதுவரை கட்டணம் கிடையாது. இனி இவற்றுக்கு ஆண்டுக்கு 1,000 சதுர அடிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் இதில் தங்குவதற்கான வாடகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள திருமண மண்டபங்களுக்கு இதுவரை ஆண்டு கட்டணம் ரூ.4 ஆயிரமாக இருந்தது. அது இனி ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதனால் இனி திருமண மண்டப வாடகையும் அதிகரிக்கும். டீ கடைகள், காபி கடைகள், உணவகங்கள், உணவு சாப்பிடும் மெஸ்கள் ஆகியவற்றுக்கு 1,000 சதுர அடிக்கு இதுவரை ரூ.2,500 ஆக இருந்த கட்டணம் இனி ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதுவே 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு இதுவரை ரூ.10 ஆயிரமாக இருந்த கட்டணம் இனி ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
மேலும் தற்போது வாகன நிறுத்த கட்டணம் புதிதாக வசூலிக்கப்பட உள்ளது. 1,000 சதுர அடி வரையிலான வாகன நிறுத்துமிடத்துக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சலூன்களுக்கு உரிமம் கட்டணம் ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரையும், அழகு நிலையங்களுக்கு ரூ.500 முதல் ரூ.6 ஆயிரம் வரையும் உயர்த்தப்படுகிறது. ஸ்பாக்களுக்கு ரூ.25 ஆயிரம் உரிமக்கட்டணம் உள்ளது.
செல்போன் கடைகள், புகைப்பட ஸ்டூடியோக்கள், சிறிய கடைகள் ஆகியவற்றுக்கு வருடாந்திர உரிமம் கட்டணம் ரூ.3 ஆயிரமாக உள்ளது. மேலும் ஓட்டல்கள், பேக்கரிகள், சினிமா தியேட்டர்கள், தங்கும் விடுதிகள், சலவை கடைகள் மற்றும் சந்தைகளுக்கு உரிமத்தை புதுப்பிக்கவும், ரத்து செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வின் காரணமாக பல தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கட்டண உயர்வானது பொதுமக்களின் தலையில் சுமத்தப்படும் நிலையும் உருவாகும். எனவே கட்டண உயர்வு காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு தொழில்வரி மற்றும் உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். பின்னர் அந்த சுமையை அவர்கள் பொதுமக்களின் மீதே சுமத்த வேண்டி இருக்கும். திருமண மண்டபங்களுக்கு உரிமம் கட்டணம் அதிகமாக கூடியுள்ளது. இதனால் திருமண மண்டபங்களில் இனி வாடகையை உயர்த்தும் நிலை ஏற்படும். இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
உணவகங்களின் உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் ஓட்டல்களில் உணவு வகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. டீக்கடைகள், சலூன்களின் கட்டமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான செலவுகள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- வாழ்வாதாரம் தேடி சிறியகடைகள் நடத்துவோரிடம் கூட இந்த அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்துவதை மன்னிக்கவே முடியாது.
- திமுகவுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35% வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100% வரையிலும் உயர்த்தி மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் இந்த வரி மற்றும் கட்டண உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மாத வருமானம் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை உள்ள பணியாளர்களுக்கான தொழில் வரியை 35% வரை உயர்த்தியுள்ள சென்னை மாநகராட்சி, அதற்கும் கூடுதலாக ஊதியம் பெறுவோருக்கான தொழில்வரியை உயர்த்தவில்லை. அதேபோல், பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கும் சென்னை மாநகராட்சி, தேநீர்க் கடைகள், மருந்துக் கடைகள், முடி திருத்தும் கடைகள் போன்றவற்றுக்கான உரிமத் தொகையை ரூ.10 ஆயிரம் ஆகவும், வேறு சில கடைகளுக்கான உரிமத் தொகையை ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தியிருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வாழ்வாதாரம் தேடி சிறியகடைகள் நடத்துவோரிடம் கூட இந்த அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்துவதை மன்னிக்கவே முடியாது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் தான் 175% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆனால், மாநகர மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படுவதில்லை. 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவில் வீடுகளை கட்ட விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சலுகை வழங்குவதாகக் கூறி அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி 1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான கட்டணம் ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பயன்களை விட பாதிப்புகளே அதிகம்.
சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன் அவர்கள் மீது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயர்வு மற்றும் கட்டண உயர்வுகளை சுமத்தி வருவது மனிதத்தன்மையற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்து விட்டோம், இனி மக்களின் தயவு தேவையில்லை என்ற அதிகார மமதையுடன் செயல்படும் திமுகவுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
- 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இதுதவிர அம்மா உணவகத்தில் பழுதான இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாத்திரங்களை மாற்ற ரூ. 7.6 கோடி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிபட்டால் அதன் உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், ஏற்கனவே ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்த அபராத தொகையை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.
முதல்முறை மாடு பிடிபட்டால் ரூ. 10 ஆயிரமும், 2 ஆவது முறை பிடிபட்டால் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
- திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன.
- நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. வீடுகள், வணிக வளாகம், அரசு கட்டடங்கள் என, 12 ஆயிரத்து 724 சொத்து வரி விதிக்கப்பட்ட கட்டடங்கள் உள்ளது. சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ.8 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை, வாடகை உள்ளிட்ட வகையில், நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 11 கோடியே 38 லட்சத்து 87 ஆயிரம் வரி வசூலாக வேண்டும். இதில் வசூலாகும் தொகையில், 50 சதவீதம், நகராட்சி ஊழியர்களின் சம்பளம், மின் கட்டணம், அலுவலகம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு செலவாகிறது. மீதம் உள்ள தொகை மட்டுமே நகர வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சியில் உள்ள சுமார் 800 கடைகள், வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்துவதில்லை.
இதையடுத்து நகராட்சி வருவாய் அலுவலர் கருமாரியப்பன், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், கடைகள் தோறும் சென்று தொழில் வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தினை விநியோகம் செய்தனர். வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா கூறியதாவது:-
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம், 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில்1,245 தொழில் நிறுவனங்கள் மட்டுமே தொழில் வரி செலுத்தி வருகின்றன. மீதம் உள்ள 1,669 தொழில் நிறுவனங்கள், கடைகள் தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர்.
பொதுமக்களிடம் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் என, வசூலாகும் நிதியில் தான் நகராட்சியில் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்தாததால், நகராட்சிக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், மக்கள் நலத்திட்ட பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே, நகராட்சியில் உள்ள, வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் விதிக்கப்படுவதுடன், வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
- கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது.
சென்னை:
தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.
இவ்விணையதளத்தின் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த இயலும்.
வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளும் இணைய வழியாக மட்டுமே தரப்பட வேண்டும். இதற்காக http://online.ppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.
ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் நடவடிக்கை.
- திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தொழில் வரி செலுத்தாமல் இருந்த 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
தொழில் வரி செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.