என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 43-வது ஆண்டாக நீர்மட்டம் 120 அடியை எட்டி அணை நிரம்பியது.
- அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
சேலம்:
தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 124 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமானதால் அணையில் இருந்து கடந்த 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 118.41 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனிடையே நேற்று கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் ஐந்தருவிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.
இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கும் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 118.84 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 62 ஆயிரத்து 870 கனஅடியாக காணப்பட்டது. இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளுக்கு இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் நண்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 41 ஆயிரத்து 772 கனஅடியாகவும், நீர்மட்டம் 119.02 அடியாகவும் உயர்ந்தது.
மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.43 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 54 ஆயிரத்து 459 கனஅடியாகவும் இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 69 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில் 43-வது ஆண்டாக நீர்மட்டம் 120 அடியை எட்டி அணை நிரம்பியது.
இதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 46 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அணையின் கரையோர பகுதிகளில் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக உள்ள நிலையில் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி, 16 கண் மதகு வழியாக 1,03,500 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 500 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.
- ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து நாளை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.40, 11.50 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையிலான மின்சார ரெயிலும், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையிலான மின்சார ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து நாளை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ஆவடி, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
- மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள 5-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை மேற்கொண்ட போது மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு 150 கிலோவுக்கும் மேற்பட்ட பழைய மற்றும் கெட்டுபோன உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். அத்துடன் 5 ஓட்டல்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறும்போது, ' உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து வழங்கினாலோ, செயற்கையான வண்ண பொடிகளை சமையலில் பயன்படுத்தினாலோ அந்த ஓட்டல்களுக்கு 'சீல்' வைக்கப்படும். ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.
இந்த சோதனையின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன், தக்கலை வட்டார அலுவலர் பிரவீன் ரகு, குளச்சல் வட்டார அலுவலர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
- இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.
- கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் ஜாமின் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை அடுத்து அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடி வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ந்தேதி கேரளாவில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதைதொடர்ந்து இந்த இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது இரு வழக்குகளிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகம் மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
- அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.
- கோவை அணிக்கு சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டி திண்டுக்கல்லில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலத் இரண்டு இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
திருப்பூர் அணிக்கு துவக்க வீரர்களான அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி அபாரமாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. இதில் அமித் (67), துஷார் (55) ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அசுத்து வந்த பாலசந்தர் அனிருத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை குவித்தது. முகமது அலி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோவை சார்பில் ஷாருக் கான் மற்றும் ஜதாவத் சுப்ரமணியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
201 எனும் கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜிவி விக்னேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், சுஜய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை தொடர்ந்து வந்த சுரேஷ் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிறகு சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் ஜோடி இணைந்து திருப்பூர் அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க ஆரம்பித்தது. சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாச, முகிலேஷ் 31 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். இதனால் கோவை அணி 185 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவை லைகா கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
- ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சில மின்சார ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:
பயணிகள் வசதிக்காகவும், ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) காலை 11.10 மணி முதல் மதியம் 1.10 மணி வரை (2 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மூர் மார்க்கெட்டில் (சென்னை சென்டிரல்) இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.10, 10, 11 ஆகிய நேரங்கில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மேலும், அரக்கோணத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 11.15 மற்றும் மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருவள்ளூரில் இருந்து புறப்படும்.
இதேபோல, திருத்தணியிலிருந்து இன்று (புதன்கிழமை) மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரெயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருவள்ளூரில் இருந்து புறப்படும். மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் மூர் மார்க்கெட் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று [ஜூலை 30] அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்
- நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று [ஜூலை 30] அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே சென்ற நிலையில் அவருக்கு நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
எனவே ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
திண்டுக்கல்:
டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் துஷார் ரஹேஜா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாலச்சந்தர் அனிருத் 21 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்துள்ளது. முகமது அலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.
- சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
- ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (30.07.2024) சென்னை தலைமை செயலகத்தில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், ரூ.700 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ள தடுப்பு திட்டங்கள் மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய தூர்வாரும் பணிகள் மற்றும் RRR திட்டத்தின் கீழ் (செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல்) ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருமழைக்கு முன்பு விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சரால் உத்திரவிடப்பட்டது.
இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், கூடுதல் செயலாளர் எஸ்.மலர்விழி, மன்மதன், முதன்மை தலைமைப் பொறியாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது). கண்காணிப்பு பொறியாளர்கள், மற்றும் அனைத்து நீர்வளத்துறை செயற்பொறியாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
- காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சொந்த ஊரான கூடலூருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
காளிதாஸ் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.
காளிதாசின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
- மனுவை முதன்மை நீதிமன்ற தள்ளுபடி செய்தது.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து வரும் நிலையில், நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை இன்று நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளி வைக்க முடியாது எனக் கூறி செந்தில்பாலாஜி மனுவை முதன்மை நீதிமன்ற தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டு பதிவை இழுத்தடிக்கும் நோக்கில், அவகாசம் கோரப்படுகிறது என ED தரப்பு தனது வாதத்தை வைத்துள்ளது. இதையடுத்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆகஸ்ட் 2ம் தேதி செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.
- முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
- மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடர் தமிழர்களின் மனங்களை உலுக்கியிருக்கிறது. பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேரள மாநில மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தும் "தேசிய பேரிடர்" எனும் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.






