என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்.
- ஆகஸ்ட் 25-ந் தேதி, மடிப்பாக்கத்தில் நடக்க உள்ளது.
சென்னை:
மடிப்பாக்கம் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் நடத்தும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கான லோகோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையின் முன்னணி தன்னார்வ அமைப்பாகிய மடிப்பாக்கம் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் (Madipakkam Social Service Trust), தமது சேவையின் 350-ஆவது வாரத் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 25-ந் தேதி, மடிப்பாக்கத்தில் மாபெரும் மாரத்தான் நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
இந்த போட்டி தொடர்பான சிறப்பு லோகோவை, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் குடும்பமாக பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ஒரு கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் மற்றும் ஐந்து கிலோ மீட்டர் என மாரத்தான் ஓட்டங்கள் மூன்று விதமாக நடைபெறும்.
மரம் நடுதலை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட உள்ள இந்த மாரத்தான் போட்டியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மிகப்பெரிய விழிப்புணர்வு பதிவை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த மாரத்தான் ஓட்டம், காலை 8.30 மணிக்கு முடிவடைகிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாக, மரங்கள் நடும் பணியில் தீவிரமாக செயலாற்றி கவனம் ஈர்த்து வரும் இந்த டிரஸ்ட், 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மூவரசம்பேட்டை, வேளச்சேரி, சுண்ணாம்பு குளத்தூர், பள்ளிக்கரணை போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள், 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் 7500-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அவற்றை பத்திரமாகப் பராமரித்து வருகிறது.
மேலும், இரண்டு பெரிய நீர் நிலைகளை தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தூர்வாரியும் உள்ளது.
ஒவ்வொரு வார இறுதியிலும் மரம் நடுதல் மற்றும் நட்ட மரங்களைப் பராமரிக்கும் பணிகளை துரிதமாக கையாண்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வமைப்பின் 350-வது வார சேவையைக் கொண்டாடும் விதமாக இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.msstrust.org
- கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின.
- கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ திறக்கப்படும். இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்தது. போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் மாவட்டங்களில் பம்பு செட் ஆழ்துளைக்கிணறு பயன்படுத்தி மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. நாளுக்கு நாள் அதிக கன அடியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இதையடுத்து கடந்த 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். அந்த தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து காவிரி தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரியில் வினாடிக்கு 1500 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினர்.
தொடர்ந்து விவசாயிகள் காவிரி நீரை பயன்படுத்தி நல்ல முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்று ஆற்றில் பூக்கள் தூவி வழிப்பட்டனர். கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.
- ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதிக்குள் சுற்றி வருகிறது.
- முருகன் கோவில் பகுதியில் மற்றொரு காட்டு யானை ஒன்று உலா வருகிறது.
கோவை:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக, ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதிக்குள் சுற்றி வருகிறது.
குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி அழித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார், 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒற்றை யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள முத்திப்பாளையம் கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. ஊருக்குள் நுழைந்த யானை வீதிகளில் உலா வருகிறது. ஊருக்குள் யானை உலவுவதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஊருக்குள் உலா வந்த காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கிருந்த யானை, மத்திப்பாளையம் அருகில் உள்ள அன்னை இந்திரா நகர் பகுதிக்குள் நுழைந்தது.
மேலும், யானை, அங்குள்ள வீட்டிற்குள் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு காட்டு யானை வெளியேறியது. தொடர்ந்து அதிகாலை வரை அந்த பகுதியிலேயே உலாவிய ஒற்றை யானை, செந்தில் என்பவரின் தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்களை சேதப்படுத்தயது.
இரவு முழுவதும் சுற்றி திரிந்த யானை இன்று அதிகாலை 5 மணிக்கு பிறகே வனத்திற்குள் சென்றது. இரவு முழுவதும் யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் முடங்கினர். இதற்கிடையே வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு யானை வெளியேறுவதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் மருதமலை முருகன் கோவில் பகுதியில் மற்றொரு காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அந்த கோவிலின் ராஜகோபுரத்திற்கு பின்புறம் யானை உலா வந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக் கூடிய கோவிலில், யானை நடமாவடுவது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கே விரைந்து சென்று யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல தமிழகத்தில பல தொகுதிகளில் புதிய காவல்நிலையம் அமைய உள்ளது.
- கோவில்களுக்கு சொந்தமான ரூ.5000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை கொளத்தூரில் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி வளாகத்தில் அறநிலையத்துறை கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கல்விக்கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
* கல்லூரி மாணவர்களிடம் பேசும்போது உற்சாகம் பிறக்கிறது.
* கொளத்தூர் வந்தாலே புது எனர்ஜி வந்துவிடுகிறது.
* கொளத்தூர் மட்டுமல்லாமல் அனைத்து தொகுதிகளையும் தனது தொகுதியாகவே பார்க்கிறேன்.
* கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல தமிழகத்தில பல தொகுதிகளில் புதிய காவல்நிலையம் அமைய உள்ளது.
* முடிந்தளவுக்கு 10 நாளுக்கு ஒரு முறையோ, வாரத்திற்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு வந்து செல்கிறேன்.
* அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* திமுக ஆட்சியில் 1400-க்கும் அதிகமான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
* கோவில்களுக்கு சொந்தமான ரூ.5000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
* விருப்பு வெறுப்பின்றி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.
* ஓட்டுப்போடாத மக்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி நல்லது செய்து வருகிறது என்று கூறினார்.
- மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக இருமுறை ரத்து செய்திருந்த நிலையில், அதைஎதிர்த்து அ.தி.மு.க. ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் இருந்துவந்தது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை நாளை (இன்று) வழங்குவதாக கூறினார்.
அதன்படி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தமிழ சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
- 2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம்.
- ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் நடைபெறுகிறது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் வெளியானதை அடுத்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம் என்றும் அதுபோல் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் முடிந்தவுடன் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து சென்று விடுவார் என்று பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைப்பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பாலமோரில் அதிகபட்சமாக 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிபாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றார், பெருஞ்சாணி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது. அணைக்கு 749 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 764 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.88 அடியாக உள்ளது. அணைக்கு 894 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையி லிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்1 அணை நீர்மட்டம் 14.73 அடியாக இருந்தது. அணைக்கு 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்2 நீர்மட்டம் 14.83அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 21.50 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது.
- கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது.
- அணைக்கு வரும நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் தடைபட்டு வருகிறது.
தொடர் மழையால் வால்பாறை பகுதிகளில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. நேற்றும் வால்பாறை பகுதிகளில் மழை பெய்தது.
வால்பாறை, சின்னக்கல்லார், நீரார், சின்கோனா, ஹைபாரஸ்ட், வாகமலை, தலனார், வில்லோணி, புதுத்தோட்டம் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
மழையால் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள நடுமலையாறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வருகின்றன.
சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 165 அடியை எட்டியது.
அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. அணைக்கு வினாடிக்கு 9241.37 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு மதகு வழியாக 2, 745 கன அடி நீரும், சேடல் வழியாக 5,639.93 கன அடியும், மின் உற்பத்தி நிலையத்திற்கு 1,410 கன அடி என மொத்தம் 9,816 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
கூடலூர்:
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழைபெய்து வருகிறது. மேலும் சாலைகளில் பாறைகள் உருண்டும், நிலச்சரிவு ஏற்பட்டும் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
நேற்று அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 128.90 அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 130.45 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 2½ அடி உயர்ந்து ள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நீர்வரத்து 3216 கன அடியில் இருந்து 5339 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4802 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.38 அடியாக உள்ளது. அணைக்கு 1913 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2780 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு அணை 33.8, தேக்கடி 22.4, சண்முகாநதி 2.4, போடி 0.4, உத்தமபாளையம் 2.2, கூடலூர் 4.6, வீரபாண்டி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மேலும் அதிகரித்து வினாடிக்கு 2 லட்சத்து 37 ஆயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 5 தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீரானது நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இந்த நீர்வரத்தானது நேற்று மாலை நிலவரப்படி சற்று அதிகரித்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து 98 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக இந்த இரண்டு அணைகளில் இருந்தும் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இன்று 5-வது நாளாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நாகர்கோவில், முதலை பண்ணை, பென்னாகரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர் ஆகிய காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் அதிகாரிகள் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் 16-வது நாளாக தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
- தினசரி விற்பனை 5400 கிலோவாக அதிகரிப்பு.
சென்னை:
தங்கத்தின் விலை எப்போது குறையும்? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதன் விலை குறைவு இன்ப அதிர்ச்சியாக மாறி இருக்கிறது என்றே கூறலாம்.
கடந்த 23-ந் தேதி வெளியான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்கு மதி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. 15 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து உடனடியாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை கடுமையான ஏறுமுகத்திலேயே இருந்தது. கடந்த 17-ந் தேதி அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.55,360 ஆக இருந்தது. இது பட்ஜெட் வெளியான 23-ந் தேதி அன்று ரூ.54 ஆயிரத்து 600 ஆக குறைந்தது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பட்ஜெட்டுக்கு முந்தைய தினம் வரையில் 7 மாதத்தில் தங்கத்தின் விலை உச்சத்தையே தொட் டிருந்தது. இந்த காலகட்டத் தில் பவுனுக்கு ரூ.8 ஆயிரத்து 80 என்கிற அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தது.
இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் தங்கத்தின் விலை இதைவிட மேலும் அதிகரிக்கும் என்றே எதிர் பார்த்து இருந்த நிலையில் தான். மத்திய அரசு தங் கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்தது.
இதன் காரணமாக கடந்த 23-ந் தேதியில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக குறைந்துள்ளது.
பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்ட உடனையே அன்று மாலையில் இருந்து விலை குறைய தொடங்கியது 23-ந்தேதி அன்று பவுனுக்கு ரூ.2200 குறைந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக மேலும் குறையத் தொடங்கியது.
அடுத்த 4 நாட்களில் அதாவது 27-ந் தேதி அன்று கிராமுக்கு ரூ.410 குறைந்து பவுனுக்கு ரூ.3280 அதிரடியாக குறைந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் குறைந்து அதிரடி சரிவை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டு கிராமுக்கு ரூ.440 என்கிற அளவில் குறைந்திருக்கிறது. அதனால் பவுனுக்கு ரூ.3540 என தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது.
தங்கத்தின் இந்தவிலை குறைவால் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாகவே தங்கத்தை நகையாகவும் நாணயங்களாகவும் வாங்கி குவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக சென்னை தங்கம் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கோல்டு குரு சாந்தகுமார் கூறும்போது, `பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பால் தங்கத்தின் விலை குறைந்து பொதுமக்களின் வாங்கும் சக்தி மிகவும் அதிகரித்துள்ளது. 20 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விற்பனை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள தங்க நகை கடைகளில் தினமும் 4 ஆயிரத்து 500 கிலோ என்கிற அளவுக்கு தங்கம் விற்பனையாகிக் கொண்டிருந்தது. தற்போது 20 சதவீதம் அளவுக்கு விற்பனை உயர்ந்து இருப்பதால் கூடுதலாக தினமும் 900 கிலோ என்கிற அளவுக்கு தங்கத்தின் விற்பனை அதிகரித்து உள்ளது.
இதனால் தினமும் விற்பனையாகும் தங்கத்தின் அளவு சுமார் 5400 கிலோவாக உயர்ந்து இருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் நாடு முழுவதுமே தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப நகைகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக தங்கத்தின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. 35 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக தங்கத்தின் விற்பனை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆடி மாதம் முடிந்ததும் ஆவணி மாதத்தில் திருமணங்களை நடத்த திட்டமிட்டுள்ள பலரும் நகைகளை வாங்கி வருவதால் நகை விற்பனை களை கட்டத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் தங்கத்தை அதிகம் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் முன்னிலையில் இருந்து வருகிறது.
தங்கத்தின் இந்த விலை சரிவு தற்காலிகமானது தான் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் தங்கத்தின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதே போன்று விலை உயர்வு ஏற்பட்டால் தாங்கள் விரும்பும் அளவுக்கு தங்கத்தை வாங்க முடியாதே என்கிற எண்ணத்தில் கையில் பணத்தை வைத்திருப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து அதனை வாங்கி குவித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இன்னும் வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டு அதன் பின்னரே விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து மக்களின் வாங்கும் சக்தி மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
- வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.
- பார் வெள்ளி ரூ.91ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை பெரும்பாலும் குறைந்து விற்பனையானது. ஆனால் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
இன்று தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,420-க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 51,360-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 91 ரூபாய்க்கு கிலோவுக்கு 2 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.91ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.






