என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 2, 3-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வயநாட்டிற்கு தமிழகம் சார்பாக உதவி.
    • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி உள்ளோம். இதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி உள்ளோம். அது மட்டுமின்றி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் உதவி செய்வதாக கூறி உள்ளோம்.

    கேள்வி:- பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி மீது ஜாதி ரீதியான தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இது கேட்க வேண்டிய கேள்வியே இல்லை.

    கேள்வி:- கவர்னர் ஆர்.என்.ரவி பதவி காலம் முடிகிறதே. அவரது பதவி நீட்டிக்கப்படும் என தெரிகிறதே?

    பதில்:- நான் ஜனாதிபதியும் அல்ல, பிரதமரும் அல்ல இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    • பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
    • வருகிற 4-ந் தேதி ஆடி அமாவாசை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மாதத்தில் 8 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் ஆடி அமாவாசை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் சுவாமிக்கு பல்வேறு வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும்.

    இதையொட்டி சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்துள்ளனர்.

    இதற்கிடையே சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இதய நோயாளிகள், சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர் நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கால் ஊனமுற்றோர்கள், அதிக வயதானவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் யாரும் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
    • சான்றிதழ்களை முறையாக சரிபார்க்கத் தவறிய அதிகாரிகள் தான் காரணம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு தேர்வர்கள் எந்த வகையிலும் காரணமல்ல. அவர்களின் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்கத் தவறிய அதிகாரிகள் தான் காரணம். எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 36 தேர்வர்கள் அதிகாரிகள் சிலர் கொடுத்த அழுத்தத்தால் பணியில் சேர்க்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    தேர்ச்சி சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட 127 பேரும் தாங்கள் படித்த கல்வி நிறுவனங்களில் இருந்து உண்மைத்தன்மை சான்று பெற்று கொடுத்து இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும்; அதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களுக்கு தகுதிக்கேற்ற வேறு 2ஏ தொகுதி பணி வழங்கப்பட வேண்டும். அதுவரை மற்றவர்களுக்கு முதலமைச்சரின் கைகளால் பணி நியமனச் சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ஆத்தூர்:

    பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு என்ன பாதிப்பு என்ற விவரம் தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம்.
    • 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.

    சென்னை:

    தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 32 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி கைதானார்கள்.

    இன்று 3-வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஆசிரியர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். தூத்துக் குடி, சிவகங்கை, தேனி, கரூர், பெரம்பலூர், அரிய லூர், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழு குழுவாக டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.

    அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். பள்ளிக் கல்வி இயக்கக அலுவலகம் வரை ஆசிரியர்களை வர விடாமல் ஆங்காங்கே மறித்து கைது செய்து சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

    இன்று நடந்த போராட்டத்திலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர். இதுபற்றி நிர்வாகிகள் கூறும்போது, 'ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது அரசுக்கு நல்லதல்ல.

    தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் பேசி தீர்வு காண வேண்டும் என்றனர்.

    • போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
    • பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 22-வது வார்டுக்கு உட்பட்ட சொர்ணநாதன் தெரு பகுதியில் அமுதம் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

    இந்த கடையில் நித்திய ராஜ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே நித்தியராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான போதையில் கடைக்கு பணிக்கு வந்துள்ளார். மேலும் அவர் பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.

    நியாய விலை கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல முறை அழைத்தும் அவர் எழுந்திருக்கும் நிலையில் இல்லை. இச்சம்பவம் அறிந்த நகர் மன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    புகார் கூறப்பட்ட ஊழியர் நித்தியராஜ் பல மாதங்களாக ரேசன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்து வந்துள்ளார். இதையடுத்து உடனடியாக போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    இதுகுறித்து செய்தி வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்த தமிழ் நாடு குடிமைப்பொருள் விநியோக மண்டல மேலாளர் அருண் பிரசாத் விசாரணை நடத்தி பணி நேரத்தில் போதையில் தூங்கிய நியாய விலைக் கடை ஊழியர் நித்தியராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
    • வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் இருந்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கலவரம் ஏற்பட்டது.

    இது தொடர்பான விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொல்.திருமாவளவன் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும், வக்கீல்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக வி.சி.க. தரப்பில் வக்கீல்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து, இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
    • இயக்குநர் என். லிங்குசாமி கலந்து கொண்டார்.

    ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்நாடிக் புதிய தலைவராக பார்க் எலான்ஸா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புவனா ரமேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பாக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவருடன் செயலாளராக ஜெயந்தா ஈஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

     


    இவர்களை தொடர்ந்து நிர்வாக குழு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக என்.எஸ். சரவணன், பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஏ2பி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கே.டி. ஸ்ரீனிவாச ராஜா மற்றும் திரைப்பட இயக்குநர் என். லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர். இவர்களை தொடர்ந்து ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்னாடிக் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் அறிவிக்கப்பட்டன.

    • கடந்த ஆண்டே நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு என்ற இடியை இறக்கியது திமுக அரசு.
    • நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களும் தரத்திற்கேற்ப (Grade) உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விடியா திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 38 மாதங்களில்... மூன்று முறை மின்கட்டண உயர்வு! இருமடங்கு வீட்டுவரி மற்றும் சொத்துவரி உயர்வு! பலமுறை பால் பொருட்கள் விலை உயர்வு! பல மடங்கு பதிவு கட்டணங்கள் உயர்வு! விண்ணை முட்டும் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு! உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு! என்று விடியா திமுக அரசு தமிழக மக்களை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது.

    'காணி நிலம் வேண்டும்-பராசக்தி

    காணி நிலம் வேண்டும்'

    என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கேற்ப, கால் காணி நிலத்தையாவது சொந்தமாக்கிக் கொள்ளலாமா என்று ஏங்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில், கடந்த ஆண்டே நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு என்ற இடியை இறக்கியது இந்த விடியா திமுக அரசு.

    மேலே குறிப்பிட்ட கட்டணங்களையெல்லாம் செலுத்தி, சிரமப்பட்டு வீட்டு மனை வாங்கியவர்கள் வீடு கட்ட முயற்சிக்கும் போது, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களை வானளாவ உயர்த்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது இந்த அரசு.

    இம்மாதம் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின்படி, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதியை இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்திவிட்டு சுலபமாக வீடு கட்டும் அனுமதியைப் பெறலாம் என்று நாக்கில் தேன் தடவிவிட்டு, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி தமிழக மக்களின் 'சொந்த வீடு' என்ற எண்ணத்தை கனவாகவே நீர்த்துப்போகச் செய்துள்ள நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த அரசாணைகளின்படி, சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் 1000 சதுர அடிக்கு சுமார் ரூ. 46,000-லிருந்து ரூ. 1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவே, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் 1000 சதுர அடிக்கு சுமார் . 42,000- ரூ. 88,000 ஆகவும்; திருச்சி, சேலம், தாம்பரம் போன்ற மாநகராட்சிகளுக்கு சுமார் ரூ. 30,000-லிருந்து ரூ. 84,000 ஆகவும், என்று மாநகராட்சிகளின் தரத்திற்கேற்ப (Grade) வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல், நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களும் தரத்திற்கேற்ப (Grade) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அரசாணைகளின்படி, வரைபட அனுமதிக் கட்டணம் பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை, 1000 சதுர அடிக்கு ரூ. 22,000 முதல் ரூ. 1,00,000 வரை செலுத்த வேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், வள்ளலார் அவர்கள் பாடிய

    குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?

    ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?

    என்ற வரிகளை தூங்கும்போதெல்லாம் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

    'தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'

    என்பதை, நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு நினைவூட்டி, உடனடியாக உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரியில் 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வரத்து உள்ளது.
    • விரைவில் உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,

    மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து காவிரியில் 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வரத்து உள்ளது. எனவே விரைவில் உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறந்துவிடப்படும் சூழ்நிலையில், கல்லணை தலைப்பில் உள்ள பூதலூர் தாலூக்காவின் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள 165 ஏரிகளை நிரப்பிட மாயனூரில் இருந்து புதிய கட்டளை மேட்டுக்கால்வாய் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டு 165 ஏரிகள் உட்பட, அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை நிரப்பிட உடனடியாக நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும்.
    • தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் 2 கட்டமாக நடந்து வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதி வாரியாக அழைக்கப்பட்டு பேசி வருகிறார். அப்போது நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை அங்கு பதிவு செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வரும் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான கூட்டணி அடித்தளத்தை இப்போதே உருவாக்குவதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று காலையில் கள்ளக்குறிச்சி தொகுதி நிர்வாகிகளுடனும், மாலையில் சேலம் தொகுதி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். கலந்தாலோசனை கூட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.


    நாளை (1-ந்தேதி) சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். காலையில் 9 மணிக்கு வடசென்னை தொகுதி, 11 மணிக்கு மத்திய சென்னை, மதியம் 3.30 மணிக்கு தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 3 தொகுதிகளுக்கும் உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இன்றுடன் 35 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசியுள்ளார். நாளைய தினத்தை தொடர்ந்து 3 நாட்கள் இடைவெளி விட்டு 5-ந்தேதி நடக்கும் கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. கரூர் மற்றும் புதுச்சேரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

    ×