என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரனா நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கி, நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.

    கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச் சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த இயற்கைச் சிற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    அதிமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

    அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் தஞ்சாவூரிலும் அமைந்துள்ள மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.
    • மயானங்கள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதைப் பாராட்டி ஈஷாவுக்கு விருது.

    தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 13 எரிவாயு மின் மயானங்களை ஈஷா யோகா மையம் பராமரித்து வருகிறது.

    இந்த மயானங்கள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதைப் பாராட்டி தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஈஷாவிற்கு விருது வழங்கப்பட்டது.

    கோவை கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் டிடிஎஸ் மணி நினைவாக இவ்விருது ஈஷாவிற்கு வழங்கப்பட்டது.

    இவ்விருதினை ஈஷா சார்பில் சுவாமி உன்மதா, சுவாமி சிதாகாஷா மற்றும் சுவாமி கைலாசா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

    கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம், இருகூர் ஆகிய இடங்களிலும், சென்னை மற்றும் தஞ்சாவூரிலும் அமைந்துள்ள மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது.

    இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஈஷா யோக மையம் ஈடுபட்டு வருகிறது.

    மயானங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இறந்தவர்களின் உடலை கண்ணியமாக கையாளவும், அந்த இறுக்கமான சூழலில் உரிய முறையில் நடந்து கொள்ளவும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    மேலும், மயான வளாகத்தில் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு செய்வதற்கான மேடை மற்றும் அதன் முன்பு கால பைரவர் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இத்தோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில், எரிவாயு மின் மயானங்களை பராமரிக்க மாசுக்கட்டுபாட்டு வாரியம் வகுத்துள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றி, அதனை உறுதி செய்யும் பணிகளிலும் ஈஷா யோக மையம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்துள்ளார்.
    • சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சிகிச்சை முடிந்ததும் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே "என் கைதுக்கு உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின் பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

    • நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
    • கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் நிதியுதவி.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், நடிகர் விக்ரம், நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து நடிகர் விக்ரமின் மேலாளர் யுவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200 பேர் இறந்தனர், 197 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணவில்லை என்ற சோகமான செய்தியால் வேதனையடைந்தேன். நடிகர் விக்ரம் இன்று கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (sic) ரூ.20 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
    • ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.

    சென்னை:

    அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில் கலந்தாய்வு தள்ளிப் போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய மருத்துவ ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு, மாநில இடங்களுக்கான கலந்தாய்வை தொடங்க முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 21-ந் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

    இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்ட் 8-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


    ஆகஸ்ட் 21-ந்தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட் ஆகஸ்ட் 19 -ந்தேதி வெளியிடப்படும். 21-ந்தேதி ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.

    22 மற்றும் 23-ந் தேதிகளில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

    சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும். எந்த இடத்தில் நடக்கும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஈ.எஸ்.ஐ. கல்லூரிகள் மூலம் 3,400 இடங்கள் 3 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மூலம் 450 என ஆக மொத்தம் 9050 இடங்கள் உள்ளன.

    பல் மருத்துவ இடங்கள் 2200 உள்ளன. இது தவிர 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கலந்தாய்வின் போது இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப் படவில்லை. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஊட்டியில் இருந்து 2 மருத்துவ குழு, மருந்து, மாத்திரையுடன் சென்றுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக அனுப்பவும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.196.16 கோடி செலவில் கட்டப் பட்டு வரும் டவர் பிளாக் கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

    • ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
    • நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து ஜாமின் கோரி ஃபெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தன்மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 80 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் நான் கலைக்கமாட்டேன் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என ஃபெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான்சாத்தியன், "கடந்த 80 நாட்களுக்கு மேல் பெலிக்ஸ் சிறையிலிருந்து வருகிறார். சவுக்கு சங்கர் பேசிய அந்த கருத்திற்கும் தனது மனுதாரருக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்பு கோருகிறார்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டது. இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மனுதாரர் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மருதாச்சலம் ஃபெலிக்சுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "உள்நோக்கத்துடன் இந்த கேள்விகளை மனுதார் கேட்டுள்ளார். காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் அவர் செயல்பட்டார். ஏற்கனவே இதே போல் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதில் வழங்கிய உத்தரவாதத்தை அவரே மீறி உள்ளார். எனவே அவரது யூட்யூப் சேனலை மூட உத்தரவிட வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் மருதாச்சலம் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனலை மூட வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து எந்த பேட்டியும் அளிக்க மாட்டேன் என்று நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஆண்டுதோறும் ஆடி 18-ந்தேதி மட்டும் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் சென்று பொதுமக்கள் பார்வையிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.

    ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து பவானிசாகர் அணை மீது சென்று அணை நீர்த்தேக்க பகுதியை பார்வையிடுவார்கள். மற்ற நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை.

    இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்லவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நிச்சயமாக பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டும் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து பவானிசாகர் அணை உதவி பொறியாளர் தமிழ் பாரத் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 91 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டும் பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    தற்போது பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    • ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

    தஞ்சாவூா்:

    கல்லணையில் இருந்து இன்று டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்ட பாசனத்திற்கு இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் ஒரு வாரத்திற்குள் கடைமடை வரை சென்றுவிடும். 7 லட்சத்து 95 ஆயிரத்து 453 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

    சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்கள், விதை நெல்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப பயிர் கடன் வழங்கப்படும். காவிரித் தண்ணீரை பயன்படுத்தி ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. நாங்களும் ஒருபோதும் மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் நேற்றும் இன்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
    • காலை 9 மணி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    பொதுவாக மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது. சென்னையில் நேற்றும் இன்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று பகலில் சுட்டெரித்த வெயில் தாக்கியது. மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகனங்களில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    அதே போல இன்றும் வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்குவதுபோல இன்று தாக்கியது. காலை 9 மணி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கோடை காலத்தில் உஷ்ணம் இருப்பது போல சென்னைவாசிகள் பகலில் வெயிலின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து சென்னை வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    "மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டி மேகங்கள் சூழ்ந்து மழைப் பொழிவை கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருப்பதற்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணமாகும்.மேகக்கூட்டங்கள் இல்லை. மேகக்கூட்டங்கள் உருவாகினால் மழைக்கான வாய்ப்பு ஏற்படும். மேகக்கூட்டங்கள் இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது இந்த சீசனில் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். புதிதல்ல" என்றார்.

    • சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.
    • வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சிக்குன் குனியா காய்ச்சலும் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது.

    டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல வகை காய்ச்சல் மக்களுக்கு பரவி வந்தாலும் சிக்குன் குனியா காய்ச்சல் வந்தவர்கள் மிகவும் முடங்கி விடுவார்கள்.

    காய்ச்சல் வந்தாலே உடல் சோர்வடையும் உடம்பு நெருப்பால் கொதிக்கும் எனவும் சாப்பிட படிக்காது. பசியின்மை அடித்து போட்டது போல் உடம்பு வலி ஏற்படும். காய்ச்சலில் பல வகைகள் இருந்தாலும் சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.

    பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும். பொதுவான வைரஸ் காய்ச்சல் ஒரு வாரம் வரை நீடிக்கலாம். இந்த வகை காய்ச்சல் தொண்டையில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்தி விடலாம்.

    ஆனால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் என்பது ஏ.டி.எஸ். கொசு கடிப்பதால் வருகிறது.

    கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

    சிலருக்கு உடலில் அரிப்பு, சிவப்பு புள்ளிகள், தோன்றும்.

    இந்த காய்ச்சல் தீவிரமாகி விட்டால் உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். மூட்டு வலியும் அதிகமாகும். ரத்தத்தின் தட்டையணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்தாகி விடும்.

    எனவே சிக்குன் குனியா நோய் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் சிக்குன் குனியா காய்ச்சல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1,451 பேருக்கு சிக்குன் குனியா அறிகுறி இருந்தது. அதில் 331 பேருக்கு சிக்குன் குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பாதிப்பு இருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கல்வி தான் திருட முடியாத சொத்து.
    • தமிழ்நாட்டில் 234 தொகுதியும் என்னுடைய தொகுதிதான்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    அங்குள்ள கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவ-மாணவிகள் 748 பேருக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 10 மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அத்துடன் இக்கல்லூரிக்கு 3 உதவி பேராசிரியர், 1 உடற்கல்வி இயக்குனர், 1 கண்காணிப்பாளர் ஆகியோ ருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி வந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது என்னையே அறியாமல் ஒரு உற்சாகம், ஒரு ஊக்கம் ஒரு எழுச்சி ஏற்படுகிறது. கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி ஏற்படுகிறது.

    எனக்காக கொளத்தூரை பாதுகாக்க கூடியவராக என் சார்பில் அமைச்சர் சேகர்பாபு இருந்து வருகிறார். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை முன் மாதிரி தொகுதியாக மாற்றி கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியும் என்னுடைய தொகுதிதான்.

    அது ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, கூட்டணி கட்சியாக இருந்தாலும் எல்லா தொகுதியையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்.

    அந்த அடிப்படை யில்தான் கொளத்தூர் தொகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், புதிய காவல் நிலையம், புதிய தீயணைப்பு நிலையம், புதிய சார்பதி வாளர் அலுவலகம் ஆகியவை விரைவில் அமைய இருக்கிறது.

    இது கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல தொகுதி களுக்கு வர இருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதிக்கு அவசரமாக நிறைவேற்ற தேவையான 10 திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.

    அது ஆளும் கட்சி மட்டு மல்ல 234 தொகுதியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பி னர்களும் இதை தருமாறு கேட்டுக் கொண்டேன். அதில் எதை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றி தர முடியுமோ அதை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லி அந்த பணியை செய்து கொண்டிருக்கிறோம்.

    எந்த விருப்பு வெறுப்பின்றி எதிர்க்கட்சி தொகுதிகளுக்கும் முக்கியத் துவம் தந்து, திட்டங்களை எல்லாம் நாம் வரிசைப் படுத்தி செயல்படுத்தி வரும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. சட்டமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன போது, இந்த ஆட்சி ஏதோ எங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக மட்டுமல்ல. ஓட்டு போட தவறியவர்களுக்கும் சேர்த்து எங்கள் ஆட்சி இருக்கும் என்று அன்றே சொன்னேன். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

    பல்வேறு திட்டங்கள் அதில் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் சேர்ந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

    இதுவரை 1400-க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்திய ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டுள்ளோம்.

    கோவில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி இருக்கிறோம். இறைப்பணி யோடு சேர்த்து கல்விப் பணியையும் அறநிலையத் துறை செய்து வருகிறது.

    அறநிலையத் துறையாக மட்டுமல்லாமல் இது அறிவு துறையாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் 748 மாணவர்-மாணவிகளுக்கு கல்வி கட்டணமும், கல்விக்கு தேவையான கருவிகளையும் வழங்கி இருக்கிறோம்.

    உங்களுக்கு மட்டுமல்ல கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் நாள் இந்த கல்லூரியை திறந்து வைத்ததில் இருந்து கடந்த 3 வருடத்தில் 1405 மாணவ-மாணவி களுக்கு இதேபோல் கல்வி கட்டணம் மற்றும் கருவிகளை வழங்கி இருக்கிறோம்.

    சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் ஆகிய இது எதுவுமே ஒருவரின் கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    கல்விதான் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாத சொத்து. இதைத் தான் நான் மாணவர்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். படிப்பு, படிப்பு, படிப்பு இது மட்டும்தான் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு வருகிறது.

    முக்கியமாக அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு வரும் மாணவி களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம். இத்திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

    அடுத்து இதே போல் மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்க கூடிய தமிழ்ப் புதல்வன் திட்டம். அது வருகிற 9-ந்தேதி கோவையில் நான்தான் சென்று தொடங்கி வைக்க இருக்கிறேன்.

    நமது திராவிட மாடல் அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும். பேச்சுத் திறமை, எழுத்து திறமை, படைப்பு திறமை, நிர்வாக ஆற்றல், அறிவியல் பூர்வமான சிந்தனை புதிய கண்டு பிடிப்பு என மாணவ சமுதாயம் வளர வேண்டும். பட்டங்களோடு சேர்த்து அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக நீங்கள் வளர வேண்டும்.

    அண்மையில் டாக்டர் குழும தலைவர் சந்திரசேகர் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட போது, உடல் நலத்தை பற்றி அக்கரையோடு அவர் பேசியிருக்கிறார். மாணவர்கள், இளைஞர்களுடைய ஒபிசிடி எனப்படும் உடல் எடை கூடி வருவதாக சொல்லி உள்ளார்.

    சாப்பாட்டு பழக்க வழக்கங்கள் துரித உணவுகள்தான் இதற்கு காரணம் என்று அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். எனவே உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்க முடியும். திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில்தான் மாணவர்களும் இளைஞர்களும் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழ்நாட்டு இளைய சமுதாயமானது கல்வியிலும், தனித்திறமைகளிலும், விளையாட்டிலும், உடல் நலத்திலும், சிறந்தவர்களாக வளர்ந்து மாபெரும் சக்தியாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் அரையாண்டுக்கான தொழில்வரி 35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • கட்டண உயர்வின் காரணமாக பல தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தொழில்வரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கான உரிமம் கட்டணம், விளையாட்டு கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழில்கள் மீது வரிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் டீ கடை, சலூன், மளிகை கடை, விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் உரிமம் கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு தொழில்வரி திருத்தி அமைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் அரையாண்டுக்கான தொழில்வரி 35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் உரிமம் கட்டணத்தை பொருத்தவரை குறு தொழில்களுக்கு ரூ.3,500 முதல் ரூ.7 ஆயிரம், சிறு தொழில்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம், நடுத்தர தொழில்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம், பெரிய வணிகங்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு உரிமம் கட்டணம் 150 சதவீதமும், சிறிய கடைகளுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த தொழில்வரி மற்றும் உரிமம் கட்டணம் அதிகரிப்பு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில் இந்த கட்டண உயர்வால் 200-க்கும் மேற்பட்ட தொழில்கள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக விருந்தோம்பல், திருமணம்தொ டர்பான சேவைகள், பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகிய தொழில்கள் பாதிக்கப்படும்.

    விருந்தினர் இல்லங்கள், சேவை அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், ஓய்வு விடுதிகள் ஆகியவற்றுக்கு இதுவரை கட்டணம் கிடையாது. இனி இவற்றுக்கு ஆண்டுக்கு 1,000 சதுர அடிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் இதில் தங்குவதற்கான வாடகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    மேலும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள திருமண மண்டபங்களுக்கு இதுவரை ஆண்டு கட்டணம் ரூ.4 ஆயிரமாக இருந்தது. அது இனி ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதனால் இனி திருமண மண்டப வாடகையும் அதிகரிக்கும். டீ கடைகள், காபி கடைகள், உணவகங்கள், உணவு சாப்பிடும் மெஸ்கள் ஆகியவற்றுக்கு 1,000 சதுர அடிக்கு இதுவரை ரூ.2,500 ஆக இருந்த கட்டணம் இனி ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதுவே 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு இதுவரை ரூ.10 ஆயிரமாக இருந்த கட்டணம் இனி ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

    மேலும் தற்போது வாகன நிறுத்த கட்டணம் புதிதாக வசூலிக்கப்பட உள்ளது. 1,000 சதுர அடி வரையிலான வாகன நிறுத்துமிடத்துக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சலூன்களுக்கு உரிமம் கட்டணம் ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரையும், அழகு நிலையங்களுக்கு ரூ.500 முதல் ரூ.6 ஆயிரம் வரையும் உயர்த்தப்படுகிறது. ஸ்பாக்களுக்கு ரூ.25 ஆயிரம் உரிமக்கட்டணம் உள்ளது.

    செல்போன் கடைகள், புகைப்பட ஸ்டூடியோக்கள், சிறிய கடைகள் ஆகியவற்றுக்கு வருடாந்திர உரிமம் கட்டணம் ரூ.3 ஆயிரமாக உள்ளது. மேலும் ஓட்டல்கள், பேக்கரிகள், சினிமா தியேட்டர்கள், தங்கும் விடுதிகள், சலவை கடைகள் மற்றும் சந்தைகளுக்கு உரிமத்தை புதுப்பிக்கவும், ரத்து செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வின் காரணமாக பல தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கட்டண உயர்வானது பொதுமக்களின் தலையில் சுமத்தப்படும் நிலையும் உருவாகும். எனவே கட்டண உயர்வு காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு தொழில்வரி மற்றும் உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். பின்னர் அந்த சுமையை அவர்கள் பொதுமக்களின் மீதே சுமத்த வேண்டி இருக்கும். திருமண மண்டபங்களுக்கு உரிமம் கட்டணம் அதிகமாக கூடியுள்ளது. இதனால் திருமண மண்டபங்களில் இனி வாடகையை உயர்த்தும் நிலை ஏற்படும். இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    உணவகங்களின் உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் ஓட்டல்களில் உணவு வகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. டீக்கடைகள், சலூன்களின் கட்டமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான செலவுகள் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×