என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கொலை சதியின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளை ஏற்கனவே போலீசார் 2 முறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் சிக்கி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து பொன்னை பாலு உள்பட மேலும் 5 பேரை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்படி பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன், சிவா ஆகிய 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இந்த விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல தகவல்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் காவலில் எடுப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக உள்ள வக்கீல் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்கள் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே போலீசார் 3 பேரையும் தேடுகிறார்கள்.

    பொன்னை பாலு உள்பட 5 பேரை காவலில் எடுக்கும் போது இவர்கள் 3 பேர் பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    • பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது.
    • ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது.

    கோவை:

    தொடர் மழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூழாங்கல்லாறு, அப்பர் நீராறு, கீழ் நீராறு, காடாம்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர் மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வரை மிக கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக நீரோடைகளில் தண்ணீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    நீலகிரியில் அதிவேகமாக காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இருந்தபோதிலும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க தமிழகத்தின் வேறு மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும்.

    மேலும் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கூடலூருக்கு அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற கனரக சரக்கு வாகனங்கள் ஒரு வாரத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 9-ந்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    கோவை:

    உயர்கல்வியில் பெண்கள் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் என பெயரும் வைக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு உதவிதொகை வழங்கப்பட உள்ளது.

    இளநிலை கலை அறிவியல் கல்லூரி, தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வரும் மாணவர்களும் பயன்பெற உள்ளனர்.

    இந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகிற 9-ந் தேதி கோவையில் தொடங்கி வைக்கப்படுகிறது. கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வங்கி கணக்கு தொடங்கும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது.

    கோவை அரசு கலைக்கல்லூரியில் மட்டும் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு மாணவர்கள் 1,200 பேர் பயன் அடைய உள்ளனர்.

    முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்னும் முழுமை அடையாததால் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

    மாணவர் சேர்க்கை முடிந்ததும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கலைக்கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பார்மசி, சட்ட கல்லூரி என 412 கல்லூரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த தகுதியான மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சில மாணவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. இதனால் அவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்லூரிகளில் வங்கி அதிகாரிகள் நேரடியாக சென்று சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • ரெயிலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயண சீட்டு தொகை திருப்பி அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த மலைரெயில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே, பயணிப்பதால் குகைகள், இயற்கை காட்சிகள், அருவிகளை பார்க்க முடியும் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க நீலகிரிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்புவார்கள்.

    உள்ளூர் பயணிகள் மட்டுமல்லாமல், இங்கு வரக்கூடிய வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மழை நீடித்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு விடியவிடிய மழை பெய்தது.

    இந்த மழைக்கு, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ஹில்குரோவ்-ஆடர்லி இடையே தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன.

    அத்துடன் மண்சரிந்து தண்டவாளத்தில் கிடந்தது. இன்று காலை வழக்கம் போல மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் குன்னூரை நோக்கி புறப்பட்டது.

    ஹில்குரோவ்-ஆடர்லி இடையே ரெயில் தண்டவாளத்தில் மரம் மற்றும் மண், பாறைகள் கிடந்தன. இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக மலைரெயிலை அதே இடத்தில் நிறுத்தி விட்டார். இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ரெயில் டிரைவர் ரெயிலை பின்னோக்கி இயக்கி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    ரெயிலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயண சீட்டு தொகை திருப்பி அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என சுற்றுலா பயணிகள் ஆசையோடு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

    • தி.மு.க.-காங்கிரஸ் வலிமையான அணியாக இருக்கிறது
    • சபை அறிந்து, காலம் அறிந்து கருத்துக்களை பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காங்கிரஸ், கூட்டணி காரணமாக மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதில்லை. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைக்கிறோம். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தால் மட்டுமே கட்சி வளரும் என்று கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி. கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கட்சிக்குள் பலரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர பிறந்த நாளை யொட்டி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை கவுரவிப்பது மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தி.நகரில் நடந்தது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது சூசகமாக கார்த்தி ப.சிதம்பரம் பேச்சுக்கு பதில் அளித்து அவருக்கு அறிவுரை வழங்குவது போல் பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் காமராஜர் வழியில் செயல்பட்டு வருகிறது. நமக்கென்று சில சங்கடங்கள் இருந்தாலும் பணிகளில் சுணக்கம் காட்டுவது கிடையாது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை செய்து வருகிறோம்.

    இந்திய அளவில் வலிமையாக இருந்தது காங்கிரஸ். மாநில கட்சிகள் வளர்ந்த போது சில மாற்றங்கள் ஏற்பட்டது.

    2 எம்.பி.க்களை மட்டுமே வைத்திருந்த பா.ஜனதா ஏதோ ஒரு வகையில் பிரசாரத்தை வலிமையாக மேற்கொண்டு வலிமையாகி விட்டார்கள்.

    இப்போது ராகுலின் நடை பயணத்தால் வலிமை பெற்றுள்ளோம். எதை எதை எப்போது பேச வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அப்போதுதான் பேச வேண்டும். அந்த பேச்சுக்குதான் மரியாதை இருக்கும். சபை அறிந்து, காலம் அறிந்து, கட்சி தலைமையோடு கலந்து பேசி கருத்துக்களை பேச வேண்டும்.

    பல மாநிலங்களில் கூட்டணி அமைய பல சுற்று பேச்சுக்கள் நடந்தது. அப்படியும் சில மாநிலங்களில் சிக்கல் ஏற்பட்டது.

    ஆனால் தமிழ்நாட்டில் இரண்டே சுற்றுக்கள் பேசி வலிமையான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். நம்மை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். வலிமையான எதிரி. பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்சையும் மேலும் பலவீனமாக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    பிறர் பார்த்து ஏளனம் செய்யும்படி எதையும் பேசக் கூடாது. அப்படியானால் தான் மக்கள் திரும்பி பார்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலி பேராசிரியர்கள் மூலம் மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
    • விளக்கம் கேட்டு 180 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அங்கீகாரம் மற்றும் இணைப்பு சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.

    இதற்கு உள்கட்டமைப்பு பேராசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் அண்ணா பல்கலைக் கழக குழுவினர் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.

    இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 52 ஆயிரத்து 500 பேராசிரியர்களில் 1,900 காலி இடங்கள் இருந்த நிலையில், அதை சரிகட்ட ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் தில்லு முல்லு செய்து வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக அறப்போர் இயக்கம் எழுப்பிய குற்றச்சாட்டை வைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் இந்த ஆண்டு இணைப்புச் சான்றிதழ் பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் போலி ஆதார் அட்டையை சமர்ப்பித்து முறைகேடாக பணி புரிந்தது போல் கணக்கு காட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் பேராசிரியர் நியமன விவகாரம் குறித்து விரிவான தகவல் அளிக்குமாறு, கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருந்தார். உயர் கல்வித்துறையும் துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 3 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

    இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து பல்கலைக்கழக வேந்தராக உள்ள கவர்னருக்கு சமர்ப்பித்துள்ளது.

    இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:

    * போலி பேராசிரியர்கள் மூலம் மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

    * போலி பேராசிரியர்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக 295 பொறியியல் கல்லூரிகள் சிக்கி உள்ளன.

    * விளக்கம் கேட்டு 180 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    * உரிய விளக்கம் அறிக்காத பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    * போலி பேராசிரியர்கள் மூலம் மோசடி செய்த பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

    * மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 972 பேராசிரியர்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    * ஒரே பேராசிரியர் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவது போல் மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று கூறினார்.

    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • வரும் 4-ந்தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் நாகலாந்து கவர்னராக இருந்தார். இவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இதனால் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், 4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் வரும் 4-ந்தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே தொடருவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மீனவர்களை தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
    • மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுக ளில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகி றார்கள். அவ்வாறு கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையின் கெடுபிடியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோதும், எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விரட்டியடிக்கும் இலங்கை கடற்படை வீரர்கள், சில சமயங்களில் கொடூர தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அதேபோல் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களையும் சிறை பிடித்து செல்கிறார்கள்.

    இந்தநிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப் படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. அதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித் துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

    கண்ணை பறிக்கும் ஒளி வெள்ளத்தை பாய்ச்சிய வாறு வந்த கப்பலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், ஒலிபெருக்கி மூலம் இது இலங்கை கடற்பரப்பு. இந்த பகுதியில் நீங்கள் மீன் பிடிக்க கூடாது. மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு மீனவர்கள் புறப்பட தயாரானார்கள்.

    மேலும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப முயன்றனர். அப்போது கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை கொண்டு வேகமாக மோதினர். இதில் நிலைகுலைந்த மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது.

    உடனடியாக வேறு வழியின்றி படகில் இருந்த மீனவர்கள் மூக்கையா, முனியசாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு பேரும் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தனர். பின்னர் இலங்கை கடற்படை கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

    இதற்கிடையே சற்று தொலைவில் மற்ற படகுகளில் மீன் பிடித்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது படகு மூழ்கியிருந்தது. கடலில் குதித்த மீனவர்களை தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    மேலும் இதுகுறித்து படகின் படகின் உரிமையாளர் கார்த்திகேயன் மாயமான மீனவர்களையும், படகையும் கண்டுபிடித்து தருமாறு ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரியிடம் புகார் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் கடலில் மூழ்கிய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடி தமிழகத்தை நோக்கி வருகிறது.
    • வெள்ளப்பெருக்கால் பள்ளிபாளையம் ஆற்றோரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விட்டது.

    சேலம்:

    கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 50 ஆயிரத்து 15 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 2 லட்சத்து 15 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 35 ஆயிரத்து 723 கன அடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து 49 ஆயிரத்து 206 கன அடியாகவும் உள்ளது.

    கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு ஓடி தமிழகத்தை நோக்கி வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் வருகிறது.

    ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் காவிரியில் இரு கரைகளையும் மூழ்கடித்தபடி மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 70 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வருகிறது. அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 500 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பார்க்க சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். 16 கண் பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் கண்கொள்ளா காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அதிக அளவில் மக்கள் கூட்டம் நிலவுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர் காவிரியில் 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலுர், திருச்சி, தஞ்சை, நாகை கடலூர், மயிலாடுமுறை உள்பட 12 மாவட்ட மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றோர பகுதியில் சந்தப்பேட்டை, நாட்டம்கவுண்டம்புதூர், ஜனதா நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளது.

    தற்போது காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பள்ளிபாளையம் ஆற்றோரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விட்டது.

    சுமார் 130-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட சதாசிவத்தை, வெப்படை தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் மீட்டனர்.

    பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட சதாசிவத்தை, வெப்படை தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் மீட்டனர்.

     

    பள்ளிப்பாளையம் நாட்டம்கவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 35). இவரது வீடு ஆற்றங்கரையை ஒட்டி உள்ளது. இவர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஆர்வத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். வெள்ளம் அவரை அடித்து சென்றது. இதை பார்த்த பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் தயார் நிலையில் இருந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் பகுதி மீனவர்கள் பரிசலில் சென்று அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பாலத்தில் நின்று பொதுமக்கள் யாரும் ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும்-ஈரோடு மாவட்டம் பவானியையும் இணைக்கும் பழைய காவிரி பாலம் வலுவிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பாலத்தில் தற்போது போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, சுமார் 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
    • பரம்பிக்குளம் அணை அதன் முழு கொள்ளளவான 72 அடியை விரைவில் எட்டிய பிறகு, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வீணாக கேரள கடலில் கலக்கும் நிலை ஏற்படும்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் திருமூர்த்தி அணையை சென்றடையும் வகையில் காண்டூர் கால்வாயில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 20 தேதிக்குள் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலை கடைசியில் பரம்பிக்குளம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். இதனால், பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திருமூர்த்தி அணையைச் சென்றடைந்தவுடன், 2-ஆம் மண்டல பாசனத்திற்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 95 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்.

    தற்சமயம் பெய்து வரும் பருவமழையின் காரணமாக, விரைவில் பரம்பிக்குளம் அணை நிரம்பும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு விடியா திமுக அரசு இதுவரை காண்டூர் கால்வாயில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும், இப்பணிகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை நீடிக்கும் என்பதாலும், குறித்த காலத்தில் பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, சுமார் 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பரம்பிக்குளம் அணை அதன் முழு கொள்ளளவான 72 அடியை விரைவில் எட்டிய பிறகு, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வீணாக கேரள கடலில் கலக்கும் நிலை ஏற்படும்.

    எனவே, போர்க்கால அடிப்படையில் காண்டூர் கால்வாயில் பராமரிப்புப் பணிகளை முடித்து, உடனடியாக பரம்பிக்குளம் அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு திறந்துவிடவும், குறித்த காலத்தில் 2-ஆம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    • மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    • மலையடிவாரத்திலும் கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்களும் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 5-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆடி பிரதோஷமான இன்று சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு முதல் விருதுநகர், மதுரை, நெல்லை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பஸ், வேன், கார்களில் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நேற்று இரவு மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தங்கினார்.

    இன்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறுவதற்காக தாணிப்பாறை கேட் முன்பு கூடினர். காலை 5.30 மணி அளவில் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பக்தி கோஷமிட்டு ஆர்வத்துடன் மலை ஏறினர். சுமார் 3 மணி நேரம் மலையேறி சுந்தர சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    மலைப்பாதைகளில் வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் சண்முகநாதன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மலையடிவாரத்திலும் கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆடி அமாவாசை முன்னிட்டு முதல் நாளான இன்று வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்னும் 4 நாட்கள் இருப்பதால் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொது மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்.
    • பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

    சென்னை:

    மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வழியாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசித்தாா். அப்போது அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மழைக் காலத்தில் மலை பகுதியில் உள்ள இடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஊடகங்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து, மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பல்துறை மண்டலக் குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையினா் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், பொது மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்ப வேண்டும்.

    நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக விழும் மரங்களை அகற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்க வேண்டும். தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவையினையும் பயன்படுத்தி மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப் படுத்த வேண்டும்.

    தேவைப்படும் சூழலில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு தீயணைப்பு படை வீரா்களை அனுப்பி வைக்க வேண்டும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையின் 2 குழுக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும், சாலை சீரமைப்பு பணிகளை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    மேட்டூா் நீா்த்தேக்கத்தில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்து விடப்படுகிறது. ஆறுகள், கால்வாய்களில் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் நீரில் இறங்குவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையின்போது, பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீராட அனுமதிக்க வேண்டும். அத்தகைய இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்க போதுமான தடுப்புகள் ஏற்படுத்தி, காவலா்களை பணியமா்த்த வேண்டும். மேலும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் நீச்சல் வீரா்கள் மற்றும் மீனவா்களை நிலைநிறுத்த வேண்டும்.

    ஆபத்தான மற்றும் அபாயகரமான இடங்களில் ஆறுகள், கால்வாய்களில் மக்கள் செல்வதைக் கட்டுப் படுத்த மாவட்ட நிா்வாகம் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வெள்ளம் செல்லும் தாழ்வான பாலங் கள் மற்றும் தரைப்பாலங்களில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×