என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
    • விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது.

    இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் ராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது.

    இச்சம்பவத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • 16 வது நாளாக குளிக்க தடை

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, ஹாசன், மாண்டியா, உத்தரகான்ட், தட்சண கன்னடா, உடுப்பி, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதி தீவிரமாக கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டன. அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாகவும், தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கிறது.

    மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீரானது திறந்து விடப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லில் மேலும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 16 வது நாளாக நீடித்து வருகிறது.

    மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகள் தனியார் விடுதிகளை ஆற்று நீர் வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி வழியாக ஓசூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை கண்டு கொள்ளாமல் ஆபத்தையும் உணராமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தண்ணீர் சூழ்ந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    மேலும் 2 லட்சத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுக்கும் பட்சத்தில் கரையோர பகுதியில் வாழும் குடியிருப்புகளை சேர்ந்த மக்களை அப்புறப்படுத்தும் சூழல் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி

    மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 5-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்.

    • சிக்கன் 65-க்குள் கருகிய நிலையில் வண்டு.
    • உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் அப்பில் புகார்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள கே.கே.நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சட்டக் கல்லூரி மாணவிகள் சிலர் நேற்று இரவு பார்சலில் சிக்கன் வாங்கியுள்ளனர்.

    பின்னர் அவர்கள் அதனை எடுத்துசென்று சாப்பிடுவதற்காக பிரித்துப் பார்த்தபோது அந்த சிக்கன் 65-க்குள் கருகிய நிலையில் வண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் உடனடியாக பார்சல் வாங்கிய உணவகத்திற்கு சென்றனர். மேலும் சிக்கனில் வண்டு இருந்ததாக கூறி அதனை உணவக ஊழியர்களிடம் காண்பித்து விளக்கம் கேட்டனர். ஆனால் உணவக ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த சட்டக்கல்லூரி மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வாட்ஸ் அப் செயலின் மூலமாக புகார் அளித்தனர். அதில் உணவக ஊழியர்கள் அளித்த விளக்கம் தொடர்பாகவும் பதிவிட்டு உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்றுக் கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று உணவகத்தில் சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் உணவகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் போது வண்டு இருப்பது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.
    • இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதும் மேலும், பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது!

    முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.

    இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று அணை பகுதிகளிலும் மழை வெகுவாக குறைந்தது. இதனால் நீர்வரத்து குறைந்தது. மாவட்டத்தின் பிற இடங்களிலும் வெயில் அடிக்க தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1317 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 143 அடி கொண்ட அந்த அணையில் 120.45 அடி நீர் இருப்பு உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 130 அடியை கடந்து விட்டது. கொடுமுடியாறு அணையில் 27 அடியும், மணிமுத்தாறு அணையில் 70.73 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாஞ்சோலை மற்றும் காக்காச்சி எஸ்டேட்டுகளில் தலா 2 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையில் 117.50 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 71 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கருப்பாநதியில் 52.17 அடியும், ராமநதியில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 77.90 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 178 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    • இந்திய இறையாண்மைக்கு எதிரான பட்ஜெட்.
    • 600-க்கும் மேற்பட்டோர் கைது.

    கோவை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அரசியல் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    போராட்டத்தில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தையொட்டி அங்கு உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆவேசமான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரவுண்டனா சாலையில் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லியும் கேட்கவில்லை.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர்.

    தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள் முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாநில குழு உறுப்பினர் ராதிகா, மார்க்சிஸ்ட் லெனின் லிஸ்ட் பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம் மற்றும் 130 பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்றன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    முன்னதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டினால் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இது இந்திய இறையாண்மைக்கு எதிரான பட்ஜெட். இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க திட்டம்.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் காவல்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் இன்று அய்யாக்கண்ணுவின் இல்லத்தில் இருந்து திரண்டு புறப்பட தயாராகியுள்ளனர்.

    இந்த நிலையில், திருச்சி மாநகர போலீசார் அங்கு வந்து அவர்களை வெளியில் செல்ல முடியாதவாறு வீட்டு காவலில் அடைத்து சிறை வைத்தனர். மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுன்னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்யவேண்டும், வேளாண் உற்பத்திற்கு 2 மடங்கு லாபம் கொடுக்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்கக்கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

    இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்க திட்டமிட்டனர். மற்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திருச்சியில் மட்டும் எங்களை போலீசார் வீட்டுக்காவலில் சிறை வைத்தது வேதனையாக உள்ளது' என்றார். 

    • சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
    • தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தமிழத்திற்கு பணியாற்றியவர் குமரி அனந்தன். எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டு செம்மலாக விளங்கும் குமரி அனந்தன் தகைசால் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

    • கடைகளை காலி செய்ய உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
    • அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கிரிவலப்பாதையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப்பாதையை சுற்றி தடுப்புகள் அமைத்து வணிக நோக்கத்திற்காக கடைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 152 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

    கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்திற்காக கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனிடையே 74 கடைகளை காலி செய்யுமாறு பழனி தேவஸ்தானம் அளித்த நோட்டீசை எதிர்த்து 2015-ம் ஆண்டு வியாபாரிகள் தரப்பில் தொடர்ந்த வழக்கில் மேல் முறையீட்டின் பேரில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

    இந்த வழக்கில் பழனி தேவஸ்தானத்துக்கு சொந்தமான குடமுழுக்கு நினைவரங்க பகுதியில் உள்ள 36 கடைகள், தண்டபாணி நிலைய வளாக கடைகள் 11, மங்கலம்மாள் மண்டப கடைகள் 7 உள்பட மொத்தம் 74 கடைகளை ஜூலை 31-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி தேவஸ்தானம் சார்பில் அங்கிருந்த கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் கண்டிப்பாக அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து கால அவகாசம் முடிந்த நிலையில் நேற்றே பல வியாபாரிகள் தங்கள் கடைகளை காலி செய்தனர். மீதி இருந்த கடைகளை அகற்றும் பணிக்காக கோவில் செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று உள்ளனர்.

    அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் இது பட்டா இடத்தில் உள்ளது என்றும் காலி செய்ய தேவையில்லை எனவும் அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டு உத்தரவை காட்டி அதன்படி செயல்பட வேண்டும் எனவும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழனி அடிவாரத்தில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.
    • மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படையால் ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அவர்களது படகு மீன்பிடிக் கப்பல் ஒன்றின் மீது (IND-TN-10-MM-73) மோதியது.

    இந்த சம்பவத்தின் போது கப்பலில் இருந்த 4 மீனவர்களில் 1 மீனவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார், 1 மீனவர் தற்போது காணாமல் போயுள்ளார், மேலும் இரு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    சமீபகாலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. நேற்று நடந்த சோகமான சம்பவம், நமது மீனவர்களில் ஒருவரின் மரணம் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டது, உங்கள் தலையீட்டின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    காணாமல் போன தமிழக மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வெளியுறவு அமைச்சகம் தலையீடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    முன்னதாக, இச்சம்பவம் குறித்து அறிந்த மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


    • காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை.
    • வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

    அதன்பின் 10 மாதங்கள் கழித்து 12.01.2023-ம் வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது.

    ஆனால், வழங்கப்பட்ட கெடுவுக்குள் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்யாத நிலையில், அடுத்தடுத்து 6 மாதங்கள், 3 மாதங்கள், 6 மாதங்கள் என மேலும் 15 மாதங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்கப்பட்டது.

    ஒட்டு மொத்தமாக வழங்கப்பட்ட 18 மாதக் கெடுவும் ஜூலை 11-ம் நாளுடன் முடிந்து விட்டது. இப்போதும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் தான் ஓராண்டு கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது.

    இவை எந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டது? கால நீட்டிப்பு கோருவதற்காக ஆணையம் கூறிய காரணம் என்ன?

    ஆணையம் எந்தக் காரணமும் கூறவில்லை என்றால், காலநீட்டிப்பு வழங்கப்பட்டது ஏன்? ஆணையம் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடும் அளவுக்கு அரசு பலவீனமடைந்து விட்டதா?

    வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் அது என்னென்ன பணிகளைச் செய்யும்? என்பது போன்ற வினாக்களை தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த எதிர்வினாவும் கேட்காமல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியவாறே ஓராண்டு காலநீட்டிப்பை அரசு வழங்கியுள்ளது.

    மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்த நிலைப்பாட்டின்படி தமிழக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை என்றும் மத்திய அரசும் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இவை நடக்காத நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையத்திற்கு காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை.

    இது அரசுக்கும், ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும் நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன் என்று தமிழக அரசும், ஆணையமும் இணைந்து வன்னியர் சமூகநீதிக்கு எதிராக நாடகமாடுகின்றன.

    இன்னொருபுறம் வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகளே இல்லை என்று ஆணையம் கூறியுள்ளது.

    ஆனால், வன்னியர்கள் 10.50 சதவீக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் கூறுகிறார். அப்படியானால் ஆணையம் கூறுவது பொய்யா? இல்லை, அமைச்சர் கூறுவது பொய்யா?

    அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட முதல் தொகுதி தேர்வுகளில் கூட வன்னியர்களுக்கு 5 சதவீதத்துக்கும் குறைவான பிரதிநிதித்துவம் தான் கிடைத்திருக்கிறது. இது உள்ளிட்ட அனைத்துத் தரவுகளும் தமிழக அரசிடமும், ஆணையத்திடமும் உள்ளன.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது. அதன் நாடகத்திற்கு ஆணையமும் துணை போகிறது.

    வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.

    தி.மு.க.வின் இந்த நாடகங்களை உழைக்கும் பா.ம.க. நன்றாக அறிவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×