என் மலர்
நீங்கள் தேடியது "வியாபாரிகள் அதிர்ச்சி"
- நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.
- கடைகள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு வியாபாரிகள் அதிர்ச்சி.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் காய்கறி, மளிகை, குளிர்பான கடைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் சாலையோரம் ஆக்கிரமித்து பழக்கடை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைத்தும் ஏராளமானோர் வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால் மார்க்கெட் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி எநந்திரத்துடன் காலடிப்பேட்டை மார்க்கெட்டுக்கு வந்தனர். அவர்கள் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றினர்.
மேலும் விதிமுறைகளை மீறி இருந்த கடைகளின் பெயர் பலகைகள், கடை வாசலில் இருந்த சிறிய விளம்பர பதாகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும் அகற்றப்பட்ட கடையில் இருந்த பொருட்களை எடுத்து செல்லாமல் அப்படியே சாலையில் போட்டு சென்றனர்.
நள்ளிரவில் கடைகள் அகற்றப்பட்டதால் இதுபற்றி வியாபாரிகளுக்கு தெரியவில்லை. இன்று அதிகாலை வழக்கம்போல் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகள் வந்தனர்.
அப்போது மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அப்பகுதியே அலங்கோலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாலையோர வியாபாரிகள் சிலர் தங்களது கடைகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டதை கண்டு கண்ணீர் வடித்தனர். ஏராளமான வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து மறியலில் ஈடுபடமுயன்றனர். அவர்களிடம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாநகராட்சி அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, `ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்கள் நள்ளிரவில் வந்து கடைகளை ஜே.சி.பி.மூலம் இடித்து உள்ளனர். இதில் கடைகள் முன்பு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பு காமிராக்கள் உடைந்துள்ளன.
இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். காலையில் வியாபாரம் செய்ய வந்த பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






