என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்"

    • வியாபாரிகள் முற்றுகை
    • வேலூர் அடுக்கம்பாறையில் பரபரப்பு

    வேலூர்

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி முன்பு உள்ள மூஞ்சூர்பட்டு சாலையில் நோயாளிகள் நடந்து செல்ல வசதியாக நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆக்கிமிரப்பு அகற்றம்

    இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்ப ட்டுள்ளன. டிபன் கடை துணிக்கடை பங்க்கடை என 50-க்கும் மேற்பட்ட கடைகள் நடைபாதை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

    இன்று காலை பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டி மூஞ்சூர்பட்டு சாலையில் வைக்க ப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

    பரபரப்பு

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் செந்தில், பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றியதன் மூலம் ஆஸ்பத்திரி முன்பு சாலை அகலமாக காட்சியளித்தது. இவ்வளவு பெரிய சாலை இருந்ததா என்று ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில் சாலை அனைவரும் கடந்து செல்ல வசதியாக இருந்தது.

    இந்த இடத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
    • கன்னியாகுமரியில் “திடீர்” என்று ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடற்கரை சாலை மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் நேற்று கன்னியாகுமரியில் "திடீர்" என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கன்னியாகுமரி கடற்கரை சாலை மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நடைபாதைகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து இன்று காலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் அறிவுரையின்பேரில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த 200-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

    இதேபோல கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் தேவசம் நிர்வாகத்துக்கு சொந்தமான முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஆக்கிரமித்து வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டன.

    குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கன்னியாகுமரியில் "திடீர்" என்று ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.
    • கடைகள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு வியாபாரிகள் அதிர்ச்சி.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் காய்கறி, மளிகை, குளிர்பான கடைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் சாலையோரம் ஆக்கிரமித்து பழக்கடை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைத்தும் ஏராளமானோர் வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் மார்க்கெட் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி எநந்திரத்துடன் காலடிப்பேட்டை மார்க்கெட்டுக்கு வந்தனர். அவர்கள் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றினர்.

    மேலும் விதிமுறைகளை மீறி இருந்த கடைகளின் பெயர் பலகைகள், கடை வாசலில் இருந்த சிறிய விளம்பர பதாகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    மேலும் அகற்றப்பட்ட கடையில் இருந்த பொருட்களை எடுத்து செல்லாமல் அப்படியே சாலையில் போட்டு சென்றனர்.

    நள்ளிரவில் கடைகள் அகற்றப்பட்டதால் இதுபற்றி வியாபாரிகளுக்கு தெரியவில்லை. இன்று அதிகாலை வழக்கம்போல் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகள் வந்தனர்.

    அப்போது மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அப்பகுதியே அலங்கோலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாலையோர வியாபாரிகள் சிலர் தங்களது கடைகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டதை கண்டு கண்ணீர் வடித்தனர். ஏராளமான வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து மறியலில் ஈடுபடமுயன்றனர். அவர்களிடம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாநகராட்சி அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, `ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்கள் நள்ளிரவில் வந்து கடைகளை ஜே.சி.பி.மூலம் இடித்து உள்ளனர். இதில் கடைகள் முன்பு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பு காமிராக்கள் உடைந்துள்ளன.

    இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். காலையில் வியாபாரம் செய்ய வந்த பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 

    • மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.
    • இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவகாசம் அளித்து இருந்தனர். எனினும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், சன்னிதி தெருவில், பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் உள்ளன. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அகற்றினாலும், மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.

    இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவகாசம் அளித்து இருந்தனர். எனினும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

    இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    இதேபோல் வடக்கு மாடவீதியில் நடைபாதையில் உள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×