search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old pension plan"

    பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ் தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை.
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    தமிழக முழுவதும் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் கல்வி பாதிக்கக்கூடும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பும்படி அரசு வேண்டுகோள் வைத்தது. ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் இருந்ததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது.

    பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 4 ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர்களுக்கு 17-பி விதியின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் நடந்த அரசாணை எரிப்பு போராட்டத்திலும் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் மீது 17-பி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. ஆனால் மிகவும் தீவிரமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான “பேனல்” தயாரிக்கப்படுகிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலை பட்டதாரி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஜூன், ஜூலை மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ்  தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    ×