என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும்.
    • சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

    வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    நேற்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பார்முலா4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கில் முறையீட்டை ஏற்றுக்கொண்டு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்தது.

    அதன்படி, பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அவ்வாறு சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எப்ஐஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விசாரணையின்போது, பாதுகாப்பு, போக்குவரத்து குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார்.
    • வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.

    இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

    இதற்காக அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

    இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதை கிண்டலடிக்கும் விதமாகஅதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், "தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக !!!" என்று குறிப்பிட்டு, வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், ஆடுகள் பாடம் படிப்பதை போன்று காட்சியளிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி கோட் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
    • அனுமதியின்றி திரையரங்குகளில் 6 காட்சிகள் திரையிடுவரை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    சென்னை:

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் கோட் வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி, சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    மேலும், திரையரங்குகளில் அனுமதியின்றி 6 காட்சிகள் திரையிடுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

    • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
    • 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.

    சென்னை:

    மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இதனால் வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருந்த போதிலும் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

    இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    3-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.

    தரைக்காற்று வேகமாக வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.
    • விதிமீறல் தெரிந்தால் பார்வையாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் பார்முலா கார் பந்தயம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை பார்வையிட வருவோர் பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தப் பொருளும் அரங்குக்குள் எடுத்து வரக்கூடாது. அப்படி எடுத்து வந்தால் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும். அவை திரும்பத் தரப்பட மாட்டாது. கூர்மையான பொருட்களான பிளேடுகள், கத்திகள், கத்திரிக்கோல் ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள், ஆயுதங்கள்-துப்பாக்கிகள், சுவிஸ் ராணுவ கத்திகள் போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. மேலும் லேசர்ஸ்-லேசர் லைட்டுகள், விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள், ஒலி அமைப்புகள் - ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகா போன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தீப்பற்றக்கூடிய பொருட்களான தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம், போதைப் பொருள் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.

    ஏதேனும் விதிமீறல் தெரிந்தால் பார்வையாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.

    புகையிலை பொருட்கள், அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள், பிளையர்கள், ஸ்டிக்கர்கள், கடற்கரை பந்துகள், பரிசுகள் போன்றவை, ஸ்லீப்பிங் பேக்ஸ், குடைகள் அல்லது நிழல் கட்டமைப்புகள், வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது.

    குறிப்பாக தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள், டிரோன்கள் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனம், புகைபிடிக்கும் சாதனங்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது.

    தனியார் வாகனங்கள் - ஸ்கேட்பார்டுகள், ரோலர் பிளேடுகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதி இல்லை.

    உபகரணங்கள் - கைப்பைகள், குடைகள், லேப்-டாப், லேப்-டாப் பைகள், சூட்கேஸ், பெரிய மின்விசிறிகள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம், தலைக்கவசங்கள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

    சாதி, மதம், பாலினம், மதம் மற்றும் இனத்திற்கு எதிரான புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான, பாரபட்சமான மொழி, தொப்பிகள், பதாகைகள், கொடிகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது.
    • 7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மண்டபம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஜூன் மாதம் 22ந்தேதி அன்று மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டினர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

    ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஈசாக் ராபின், செல்வகுமார் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்திருந்த சகாய ராபர்ட்(வயது49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோபு (24), ஹரிகிருஷ் ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்லை தாண்டி வந்ததாக கூறி ராதா (44), முத்துராம லிங்கம் (51), யாக்கோபு (24), இவரது மகன்கள் பொன் ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீண்டும் இதேபோல் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து சகாய ராபர்ட்டுக்கு 1 வருட சிறை தண்டனையும், ஹரிகிருஷ்ணனுக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சென்னையில் சுமார் 1500 பெரிய சிலைகள் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களை போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு பின்னா ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது.

    சென்னையில் சுமார் 1500 பெரிய சிலைகள் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது. இதுதவிர சிறிய சிலைகளை பலரும் வீட்டில் வைத்து வழிபடுவார்கள். இந்த சிலைகளையும் பெண்கள் பெரிய சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கொண்டு போய் வைத்து விடுவார்கள்.

    இதுபோன்று பல்லாயிரக்கணக்கான சிலைகள் பெரிய சிலைகளின் அருகில் வைக்கப்பட்டிருக்கும். பெரிய சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வாகனங்களில் இந்த சிறிய சிலைகளையும் சேர்த்தே எடுத்துச் செல்வார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படும் நாளில் இருந்து 7 நாட்கள் கழித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அந்த வகையில் வருகிற 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அனைத்தும் செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது.

    சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 இடங்களிலும் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடல் பகுதியிலும் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களை போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்துள்ளனர். அந்த வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட உள்ள சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

    அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் வைக்கப்படும். சிலைகளை நீலாங்கரை பல்கலை நகரில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், ஆர்.கே. நகர், தங்க சாலை, ராயபுரம், தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும், திருவொற்றியூர் சுற்று வட்டாரப் பகுதிகளின் சிலைகள் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பகுதியிலும், செங்குன்றம் துணை கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட எண்ணூர் மற்றும் சுற்றியுள்ள சிலைகள் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியிலும் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சிலைகளை வைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். தேவையில்லாத வகையில் மத உணர்வை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் பேசக் கூடாது.

    24 மணி நேரமும் சிலை பராமரிப்பாளர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுபாடுகளையும் போலீசார் விதித்துள்ளனர்.

    சென்னை மாநகர் முழுவதும் சுமார் 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள், மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.
    • நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்.

    மதுரை:

    மதுரை லேடி டோக் கல்லூரியில் கல்வி கடன் மேளா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், தற்போது பெண்கள் அதிக அளவில் படித்து முன்னேறுகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களாக பெண்களே இருப்பார்கள்.

    அந்த அளவுக்கு பெண்கள், மாணவிகள் அதிகமாக படிப்பின் மீது கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களை எடுக்கிறார்கள் என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வணிகவரித்துறையில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண்ணை ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யாரெல்லாம் தொழிலை செய்யாமல் ஜி.எஸ்.டி. நம்பர் வாங்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டை விட வணிக வரித்துறையில் 4,000 கோடி அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. வணிக வரித்துறையில் இந்த ஆண்டு இலக்காக ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் கோடி பதிவுத்துறைக்கு 23 ஆயிரம் கோடி என்று வைத்திருக்கிறோம். எங்களுடைய அரசின் கோரிக்கை என்னவென்றால் நியாயமாக தொழில் செய்யுங்கள், மக்களிடம் வாங்கும் ஜி.எஸ்.டி. வரியை அரசிடம் செலுத்துங்கள் என்பதே ஆகும்.

    நேர்மையாக செய்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். மேலும் கல்விக்கடனை வங்கிகள் அதிகமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். வெகு விரைவில் எதிர்பாருங்கள் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆவார். வருகின்ற செப்டம்பர் 9-ந்தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும்.
    • கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.

    இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை தொடங்கப்படவில்லை.

    எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும். இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    ஆனால் நீதிபதிகள், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேசன் கடைகளில் வழங்குவதற்காக 1.77 கோடி சேலை, 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பயனாளிகளுக்கு வேட்டி, சேலை கிடைப்பதை விரல் ரேகை பதிவு மூலமாக உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    ரேசன் கடைகளில் வழங்குவதற்காக 1.77 கோடி சேலை, 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பயனாளிகளுக்கு வேட்டி, சேலை கிடைப்பதை விரல் ரேகை பதிவு மூலமாக உறுதி செய்ய வேண்டும்.

    பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய் துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • சேலம் உயிரியல் பூங்கா அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி ‌ மாணவ-மாணவிகளுக்கு இன்று ஒரு நாள் விடுப்பு அளித்து வெளியேற்றினர்.

    சேலம்:

    சேலம் உயிரியல் பூங்கா அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு இன்று காலை இ-மெயிலில் ஒரு தகவல் வந்தது. அதனை திறந்து பார்த்தபோது பள்ளியில் இன்று காலை குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்து. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    தொடர்ந்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று ஒரு நாள் விடுப்பு அளித்து வெளியேற்றினர். ஆனால் பல மணிநேர சோதனைக்கு பிறகு பள்ளியில் எந்த வெடிபொருட்களும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது.
    • கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் 9.99லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என ஓடி ஒளிவது ஏன்? வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் முறை கோரியுள்ளார். அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் கோரினார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தொடங்க ஒப்பந்தம் போட்டாலும் ரூ.17 ஆயிரத்து 616 கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக்கூடாது. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினேன். அதன்படி பல பதவிகளில் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலக சங்கம் கூறியுள்ளது. நியமனம் செய்யப்பட்டவர்களை தேர்வு செய்ய எந்த போட்டி தேர்வும், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கவில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அரசு விளக்கமளிக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    மருத்துவக்கல்லூரிகள் 13-ல் முதல்வர்கள் பணி காலியாக உள்ளது. சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது. உடனே நியமிக்கவேண்டும் என்று கடந்த 16-ந்தேதியே பா.ம.க வலியுறுத்தியது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் முதல்வர்களை நியமிக்க முடியவில்லை என்றால் ஏன் மருத்துவக்கல்லூரியை திறக்கிறீர்கள் என்று கூறியுள்ளது. இனியும் தாமதிக்காமல் முதல்வர் நியமிக்கவேண்டும்.



    தமிழகத்தில் சன்ன அரிசி ரூ.75 ஆகவும், மோட்டா அரிசி ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 99 லட்சம் டன் தேவையாக உள்ளது. ஆனால் 72 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி உற்பத்தி செய்ய மின் கட்டணத்தை குறைக்கவேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவேண்டும்.

    ரூ. 2 லட்சத்துக்கு 2 1/2 ஆண்டுகளில் ரூ.2.26 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மாதத்திற்கு 300 சதவீதமாகும். கந்துவட்டி திமிங்கலத்துடன் காவல்துறை இணைந்து செயல்படுவதால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடுமையான கந்துவட்டி சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும்.

    தமிழகத்தில் மெல்லும் புகையிலை தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் புகையிலை விற்பனை தொடங்கியபோதே எச்சரித்தேன். ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் சகஜமாக பயன்படுத்துகிறார்கள். 10 பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருப்பதால் மாணவர்களை பட்டம் செய்து விட்டுகொள் என்று அரசு சொல்கிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×