என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சக்தி கிருஷ்ணன் 3 மணி நேரம் அறிவுரைகள் கூறி ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதால் எந்த தொந்தரவும் இருக்காது.
    • 75 பேருக்கு மேல் இதே போன்று செய்துள்ளார்கள் என்று எடுத்துக் கூறினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடைபெற்றது. இதில் தகுதி வாய்ந்த 9 பேர் கருத்தடை செய்து கொள்ள வந்திருந்தனர்.

    இதில் பர்கூர் மலைப்பகுதி ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாசன், மனிஷா தம்பதியினர். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர். மனிஷாவிற்கு இதய பிரச்சனை உள்ளதன் காரணமாக அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் அவரது கணவர் தாசனுக்கு நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் 3 மணி நேரம் அறிவுரைகள் கூறி ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதால் எந்த தொந்தரவும் இருக்காது. மேலும் இதுவரை 75 பேருக்கு மேல் இதே போன்று செய்துள்ளார்கள் என்று எடுத்துக் கூறினார். பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அறிவுரைகளை ஏற்று அந்தியூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்.பிரகாஷ் நவீன வாசக்டமி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

    மேலும் ஆபரேஷன் முடிந்தவுடன் தாசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுகாதார ஆய்வாளர் கிருபநாதன் மற்றும் கிராமப்புற செவிலியர்களுடன் சென்று அவரது இல்லத்தில் விட்டு வந்துள்ளனர்.

    • திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பதிலும் மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. திடீரென மழை வெளுத்து வாங்கியது. காலை 7.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். சில மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தவாரே பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டது. மழையின் காரணமாக ரோடுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    மீனாட்சிபுரம் சாலை, அசம்புரோடு, கோட்டார் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்ற ஊழியர்களும் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம், இரணியல், மயிலாடி, கொட்டாரம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.


    மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பதிலும் மழை பெய்தது. மழை பெய்து வருவதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகள் முழு கொள்ளளவு எட்டி உள்ள நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.03 அடியாக இருந்தது. அணைக்கு 657 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.36 அடியாக உள்ளது. அணைக்கு 388 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.78 அடியாக உள்ளது. அணைக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரை கிராமங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் கடலுக்கு மீன் பிடித்து சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பினர். இன்று மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள், கட்டு மரங்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    • நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.
    • என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தி, விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    • பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றியவர்.
    • மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    செய்தி மக்கள் தொடர்புத்துறையின் முன்னாள் இணை இயக்குநரும் எனது உறவினருமான எல். மணிமாறனின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவரது அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த வெற்றியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கருங்குளம் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 184 மாணவ, மாணவிகள் வந்து படித்து வருகின்றனர்.

    மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வர வசதியாக முன்னாள் மாணவர் டாக்டர் முருகேசன், அவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோர் ரூ.27 லட்சத்தில் பள்ளிக்கு புதிய பஸ் வாங்கிக்கொடுத்தனர். இந்த பஸ் தொடக்க விழா சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் இளமாறன் நன்றி கூறினார்.

    இதுதொடர்பாக கலெக்டர் கூறும்போது, "மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான டீசல் செலவு, டிரைவர் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை டாக்டர் முருகேசன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். அவரது சேவையை பாராட்டுகிறேன்," என்றார்.

    • நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29 அக்டோபர் 6, 13, 20, 27 நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) வரும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 அக்டோபர் 7, 14, 21, 28 நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.
    • காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சாலைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) போட்டிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த சாலைகளில் இன்று முதல் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்டிரல் ரெயில் நிலையம், ஈ.வெ.ரா.சாலை வழியாக சென்றடையலாம்.

    * அண்ணா சாலையில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி திருப்பி விடப்படும்.

    * சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.

    * காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

    * சென்டிரலில் இருந்து அண்ணாசிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    * முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக பல்லவன் சாலை, ஈ.வெ.ரா.சாலை, சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்

    * கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா.சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாயிண்ட், பாரிமுனை ஆகிய சாலைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்வதற்கு தற்காலிக தடை அமலில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை எய்ம்ஸ் தொடர்பான பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
    • மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..?" என்று ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

    அதற்கு, கொரோனா பொதுமுடக்கத்தை காரணம் காட்டிய மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தது.

    கொரோனா 2022-ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதனைக் காரணம் காட்டாதீர்கள் என்று கண்டித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்பட உள்ளது.
    • 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    திருநெல்வேலியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் பிராந்திய மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது.

    கூடங்குளம் ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிநவீன மீட்பு உபரகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் மையம் செயல்பட்டு வருகிறது.

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநில பேரிடர்களின் போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், கதிரியக்கம், ரசாயனம், உயிரியல் உள்ளிட்டவை சார்ந்த பேரிடர்களையும் சமாளிக்கும் வகையில் மையத்தில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
    • ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதி ஒத்தவாடை தெருவை சேர்ந்த சுகந்தி என்பவரின் மகள் கமலி (வயது 14). இவர் மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகி றார்.

    மீனவர் குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மாமா கடலில் சர்பிங் செய்வதை பார்த்து வளர்ந்ததால், அதன்மீது ஆர்வம் ஏற்பட்டு 2வயது முதலே சர்பிங் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்க துவங்கினார்.

    தொடர்ந்து வயது வாரியான பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் மாலத்தீவில் நடந்த ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 4 சுற்றுவரை முன்னேறி, இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

    தொடர்ந்து ஜப்பானில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 4- ஆம் தேதி வரை16நாட்கள் நடைபெற உள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று விளையாடவும் தகுதி பெற்றுள்ளார்.

    ஆசிய விளையாட்டு போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் முதன், முதலாக சர்பிங் போட்டி இடம் பெற்றுள்ள நிலையில், ஆசிய அளவிலான அந்த போட்டியில் பங்கேற்க செல்ல இருக்கும் மாமல்லபுரம் பள்ளி மாணவி கமலிக்கு அவர் படிக்கும் பள்ளியின் சார்பில் பள்ளி தாளாளர் பிரான்சிஸ், தலைமை ஆசிரியை பிருந்தா ஆகியோர் சிறப்பு செய்து, பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு செய்தனர்.

    மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்செல்லி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சந்தனமாலை, கிரீடம் அணிவித்து கவுரவித்தனர்.

    • பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    • கொடியேற்றத்தின் போது பலுன்கள், புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

    ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தரும் பேராலயம் வேளாங்கண்ணியில் உள்ளது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தளமாக இந்த பேராலயம் விளங்குகிறது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும்.

    அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் திருக்கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். கொடியேற்றத்தின் போது பலுன்கள், புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து 'ஆவே மரியா' என முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    திருவிழாவையொட்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் தேர் பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி பேராலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. 

    • மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது.

    இதனால் வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருந்த போதிலும் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக இன்று முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×